உரை |
|
5. நரவாண காண்டம் |
|
3. இயக்கன் போனது |
|
அருந்திற லமைச்ச னறிவி னாடித்
திருந்திழை யல்குற் றேவியைப்
பிரிப்ப வருந்திய
நெஞ்சமொடு மகத நன்னாட் 15 டரசிகந்
தடர்த்த வாறா வெகுளித்
தருசகன் றங்கையைத் தலைப்பட்
டெய்திய துயரக்
காலத்துத் தொன்னக ரெய்திய
பகைகொண் மன்னனைப் பணித்த
பொழுதினும்
|
|
(இதுவுமது) 12
- 18 : அருந்திறல்............பொழுதினும்
|
|
(பொழிப்புரை) 'அல்லது பெறற்கரிய ஆற்றலுடைய
அமைச்சனாகிய யூகி தன் அறிவினால் ஆராய்ந்து திருந்திய அணிகலனணிந்த அல்குலையுடைய
கோப்பெருந்தேவியாகிய வாசவதத்தையை நின்னிடத்திருந்தும் பிரித்துவிட்டமையாலே நீ
வருந்திய நெஞ்சத்தோடு சென்று மகதம் என்னும் நல்ல நாட்டின்கண் பகையரசர்களை வென்று
கடந்த தணியாத வெகுளியையுடைய தருசக மன்னனுடைய தங்கையாகிய பதுமாபதியைக் கண்டு கூடிய
துயரக்காலத்திலாதல், அல்லது நினது பழைய தலைநகரமாகிய கோசம்பி நகரத்தை மீண்டும்
கைப்பற்றுதற்பொருட்டு நின்பாற் பகைகொண்ட ஆருணி மன்னனை வென்ற காலத்திலாதல்
என்க.
|
|
(விளக்கம்) அமைச்சன் - யூகி. தேவி - வாசவதத்தை. அரசு - பகையரசன்.
தருசகன் தங்கை - பதுமாபதி. தொன்னகர் - கோசம்பி. பகைகொள் மன்னன் : ஆருணி.
துயரக் காலத்தும் என உம்மை விரித்தோதுக.
|