பக்கம் எண் :

பக்கம் எண்:955

உரை
 
5. நரவாண காண்டம்
 
3. இயக்கன் போனது
 
         
     30    அஞ்சொன் மழலை யவந்திகை யென்னுநின்
           நெஞ்சமர் தோழி நிலைமை கேண்மதி
           மிசைச்செல வசாஅ விழும வெந்நோய்
           தலைச்செலத் தானுந் தன்மனத் தடக்கி
           ஏறாக் கரும மிதுவென வெண்ணிக்
     35    கூறாண் மறைப்ப வூறவ ணாடி
           உற்றியான் வினவ விற்றென விசைத்தனள்
 
                       (இதுவுமது)
            30 - 36 : அஞ்சொல்.........இசைத்தனள்
 
(பொழிப்புரை) அம்மன்னவன் அவ்வியக்கனை நோக்கி, 'நண்பனே! அழகிய மழலை மொழியினையுடைய அவந்திகை என்று கூறப்படும் உன்னுடைய நெஞ்சின்கண் விரும்புதற்குக் காரணமான தோழமையுடைய வாசவதத்தையின் இற்றைய நிலைமையைக் கூறுவேன் கேட்பாயாக. அவட்கு வானத்தே செல்லுதற்கு விரும்புகின்ற துன்பத்தையுடைய வயாநோய் மிக்குப் பெருகாநிற்றலால் அதனையுணர்ந்த அவள் தானும் இது நிறைவேறாத காரியம் என்று கருதி வெளிப்படக் கூறாளாய்த் தன் நெஞ்சத்திலேயே அடக்கி மறையாநிற்ப, அத்துன்பம் மெய்ப்பாடாகத் தோன்றுதலாலே அவ்விடத்தே யான் சென்று ஆராய்ந்து நின் மெலிவிற்குக் காரணம் யாது? என்று வினாவுதலாலே அவள் அக்காரணம் இஃதென்று விளக்கமாகக் கூறினள்' என்க.
 
(விளக்கம்) அவந்திகை - அவந்தி நாட்டிற் பிறந்தவள். இது வாசவதத்தைக்கு இடத்தால் வருபெயர். நட்புரிமையை மிகுப்பான் என் காதலி என்னாமல் நின் நெஞ்சமர் தோழி என்றான். இங்ஙனம் கூறுதல் அன்புரிமையாம். இதனையும் இராமன் குகனுக்குத் தன் மனைவியையும் தம்பியையும் அறிமுகப்படுத்துபவன்.
         ' அன்னவ னுரைகேளா வமலனு முரைநேர்வான்
          என்னுயி ரனையாய்நீ யிளவலு னிளையானிந்
          நன்னுத லவணின்கே ணளிர்கட னிலமெல்லாம்
          உன்னுடை யதுநானுன் தொழிலுரி மையினுள்ளேன்'

                                     (கம்ப - கங்கைப் - 68)
என்று கூறும் இவ் வன்புரிமை மொழிகளையும் ஒப்பிட்டுக் காண்க. கேண்மதி, மதி : முன்னிலையசை. அசாஅ - விரும்புகின்ற. விழுமம் - துன்பம். நோய் - ஈண்டு வயாநோய். தலைச்செல்லுதல் - மிகுதல். ஏறாக்கருமம் - நிறைவேறாத காரியம். ஊறு - துன்பம். இற்று - இன்னது.