பக்கம் எண் :

பக்கம் எண்:956

உரை
 
5. நரவாண காண்டம்
 
3. இயக்கன் போனது
 
           மற்றியாந் தீர்க்கு மதுகை யறியேம்
           நயந்த நண்பி னன்னர் நோக்கி்
           உடையழி காலை யுதவிய கைபோல்
     40    நடலை தீர்த்த னண்பன தியல்பென
           உரத்தகை யாள வுள்ளினே னென்னத்
           திருத்தகு மார்வன் றிறவதிற் கிளப்பத்
 
                      (இதுவுமது)
               37 - 42 : மற்று...........கிளப்ப
 
(பொழிப்புரை) 'அன்பனே! வெவ்விய அவ் வயாநோயைத் தீர்க்கும் வலியும் இல்லேம் ; வழியும் அறிகின்றிலேம். தான் விரும்பிய நண்பினது நலத்தை நோக்கி ஒருவனுடைய ஆடை அவிழும்பொழுது அவ்வாடையை மீண்டும் விரைந்து உடுத்துகின்ற அவனது கையைப்போல நண்பனது வருத்தம் கண்டுழி அவன் வருத்தத்தை விரைந்து தீர்த்தல் அவனுடைய நண்பனின் கடமையாம். ஆகவே அறிவாற்றலும் மெய்யாற்றலுமுடைய நண்பனே ! அவள் நோய் தீர்த்தற்பொருட்டு யான் இப்பொழுது நின்னை நினைத்தேன்காண்' என்று செல்வத்தால் தகுதி பெற்ற மார்பினையுடைய அவ்வுதயண மன்னன் நன்றாக எடுத்துக் கூறா நிற்ப என்க.
 
(விளக்கம்) மதுகை - வலிமை. வலியுமிலேம்; வழியுமறியேம் என விரித்தோதுக. உடையழிகாலை யுதவிய கைபோல் நடலை தீர்த்தல் நண்பனதியல்பு என்னும் இத்தொடரின்கண்,
             ' உடுக்கை யிழந்தவன் கைபோல வாங்கே
               இடுக்கண் களைவதாம் நட்பு '
 (குறள். 788)
எனவரும் திருக்குறளையும் காண்க. நடலை - துன்பம். உரத்தகையாள என்றது நஞ்சுகனை விளித்தபடியாம். திருத்தகு மார்வன் : உதயணன். திறவதின் - நன்றாக. கிளப்ப - கூற.