பக்கம் எண் :

பக்கம் எண்:957

உரை
 
5. நரவாண காண்டம்
 
3. இயக்கன் போனது
 
           தாரணி மார்ப காரணங் கேண்மதி
           மெச்சார்க் கடந்த மீளி மொய்ம்பின்
     45    விச்சா தரருறை யுலகம் விழையும்
           திருமக னாநின் பெருமனைக் கிழத்தி
           வயிற்றகத் துறைந்த நயப்புறு புதல்வன்
           அன்ன னாகுத றிண்ணிதி னாடி
           மெய்ப்பொரு டெரியு மிடைதார் மன்னவ
     50    பொய்ப்பொரு ணீங்கிய விப்பொருள் கேண்மதி
           உள்ளிய வசாஅவஃ தொளியின்று கிளப்பின்
 
                    (நஞ்சுகன் கூற்று)
               43 - 51 : தாரணி............கிளப்பின்
 
(பொழிப்புரை) அவ்வேண்டுகோளைக் கேட்ட அந்நஞ்சுகன் உதயணனை நோக்கிக் கூறுபவன், 'வெற்றிமாலையணிந்த மார்பனே ! அங்ஙனம் நின் தேவி ஏறாக்கருமம் விரும்புதற்குக் காரணமும் உண்டு. அதனை யான் கூறுவேன் கேள். நின்னுடைய பெரிய மனைக்கிழத்தியாகிய வாசவதத்தை நல்லாளின் வயிற்றின் கண் உருவாகி உறைகின்ற விரும்புதற்குக் காரணமான மகன், பகைவரை வென்று கடந்த மீளிமையையுடைய ஆற்றலுடையவன் ஆவான். மேலும் விச்சாதரர் வாழுகின்ற உலகத்தினையும் ஆள்வதற்கு விரும்புமொரு கருவிலே திருவுடைய நன்மகன் ஆவான். அவன் அத்தகையன் ஆதலைத் திட்பமாக ஆராய்ந்து அதன் உட்பொருளை உணரா நின்ற நெருங்கிய மலர்மாலையணிந்த மன்னவனே ! இன்னும் பொய்யற்ற மெய்யேயாகிய இனி யான் கூறும் இந்தப் பொருளையும் கேட்பாயாக! அப்பெருமாட்டி விரும்புகின்ற அவ்விருப்பத்தை மறையாமல் கூறுமிடத்து' என்க.
 
(விளக்கம்) தார் - மாலை. மதி : முன்னிலையசை மெச்சார் - பகைவர். மீளி - போரின்கண் மீளாத பெருந்தகைமை. மொய்ம்பு - வலி. திருமகனாம் - கருவிலே திருவுடைய மகனாம். மிடைதார் : வினைத்தொகை. ஒளியின்று - ஒளியாமல். இன்றி என்னும் வினையெச்சம் இன்று எனக் குற்றுகரமாயிற்றுச் செய்யுளாகலின். கிளப்பின் - கூறின். கூறின் : இங்ஙனம் கூறுதல் வேண்டும் என்பது கருத்து. அது மேற் கூறுவான்.