பக்கம் எண் :

பக்கம் எண்:96

உரை
 
3. மகத காண்டம்
 
6. பதுமாபதியைக் கண்டது
 
         
     
           மன்னவன் மடமகள் பின்னொழிந் திறக்கும்
           ஏந்திள வனமுலை யெழில்வளைப் பணைத்தோள்
           மாந்தளிர் மேனி மடமா னோக்கின்
           ஆய்ந்த கோலத் தயிரா பதியெனும்
     160   கூன்மட மகடனைக் கோமகன் குறுகி
           யாவளிந் நங்கை யாதிவண் மெய்ப்பெயர்
           காவலர் கொள்ளுங் காவினுள் வந்த
           காரண மென்னை கருமமுண் டெனினும்
           கூறினை செல்லிற் குற்ற மில்லென
     165   மாறடு குருசில் வேறிடை வினவ
 
         (உதயணன் கூனியை வினவுதல்)
          156-165; மன்னவன்,,.,,.,,,,,,வினவ
 
(பொழிப்புரை) பகைவரைக் கொல்லும் ஆற்றலுடைய
  தலைவனாகிய அவ்வுதயணன் கோமகளாகிய பதுமாபதியோடு
  செல்லாமல் தங்கிப்பின்னர்த் தமியளாகச்செல்லாநின்ற ஏந்திய
  இளமையுடைய அழகிய முலையினையும் அழகுடைய
  வளையணிந்த பருத்த தோள்களையும் மாந்தளிர்போன்ற
  நிறத்தினையும் இளமானின் நோக்கம்போன்ற நோக்கினையும்
  ஆராய்ந்து புனைந்த ஒப்பனையையும் உடைய அயிராபதி என்னும்
  பெயருடைய கூனியை அணுகி ''நங்காய் இப்பொழுது இங்கே
  காமதேவனைக் கைதொழுது சென்ற நங்கை யார்? இவளுடைய
  வாய்மையான பெயர் யாது? காவலராற் காவல்கொள்ளப்பட்ட இந்தப்
  பொழிலிலே இவ்வாறு வந்தமைக்குக் காரணந்தான் என்னை ? உனக்கு
  வேறு காரியமிருந்தாலும் என்னுடைய இவ்வினாக்கட்கு விடை
  கூறிச்செல்லின் அதனால் குற்றம் ஏதுமில்லையன்றோ கூறுக ! என்று
  தனித்ததோரிடத்தே வினவாநிற்ப என்க.
 
(விளக்கம்) மன்னவன் மடமகள்-பதுமாபதி. பின்னே
  தங்கித் தமியளாய்ச் செல்கின்ற கூன்மகள் என்க. கோமகனாகிய .மாறடு
  குரிசில் வினவ என இயைத்துக் கொள்க. இந்நங்கை என்றது பதுமாபதியை.
  கா அலர்கொள்ளும் என்றுமாம். வேறிடை தனியிடத்தே.