பக்கம் எண் :

பக்கம் எண்:961

உரை
 
5. நரவாண காண்டம்
 
3. இயக்கன் போனது
 
         
     70    மாறுதனக் கின்றி மறமீக் கூரி
           ஆறுதனக் கரணா வணிநல நுகர்ந்து
           மருப்பிடைத் தாழ்ந்த பருப்புடைத் தடக்கை
           செருக்குடை மடப்பிடி சிறுபுறத் தசைஇ
           நறுமலர் நாகத் தூழ்முதிர் வல்லிப்
     75    பொறிமலர் கும்பம் புதைய வுதிர
           அஞ்சாப் பைங்கணோர் வெஞ்சின வேழம்
           எழுவகை மகளி ரின்ப மெய்தி
           அகமகிழ்ந் தாடு மண்ணல் போல
           நின்ற வின்ப நேயங் காணா
 
                     (இதுவுமது)
               70 - 79 : மாறு...............காணர்
 
(பொழிப்புரை) தனக்குப் பகையாய களிற்றியானை ஒன்றும் இன்றித் தனித்து மறப்பண்பில் மிக்கு வழியே தனக்குப் பாதுகாவலாகக் கொண்டு அப்பிடியானைகளின் அழகின்பத்தை நோக்கா னுகர்ந்து அப் பிடியானைகளுள் வைத்துத் தன் மருப்புக்களின் இடையே தூங்குகின்ற பரிய வளைந்த கையினை எடுத்து மதச் செருக்கினையும் இளமையினையுமுடைய ஒரு பிடியானையினது சிறிய பிடரின்கண் வைத்துக்கொண்டு நறிய மலரினையுடைய நாகமரத்தின்கண் ஊழ்த்து முதிர்ச்சியை யெய்திய அகவிதழையும் புள்ளிகளையும் உடைய மலர்கள் தனது மத்தகம் மறையும்படி உதிராநிற்பப் பேதை முதல் பேரிளம் பெண் ஈறாகவமைந்த ஏழுவகைப் பருவமுடைய மகளிரோடே இன்பமுற்று மன மகிழ்ந்து விளையாட்டயரும் ஓரரசனைப் போல இன்ப நுகர்ந்து நின்ற அவ் வின்ப வன்பினைக் கண்டு என்க..
 
(விளக்கம்) பத்திராபதி செல்லும் வழியில் ஓரிடத்தே பல பிடிகளிடையே நின்ற ஒரு களிற்றியானை ஓரிளம் பிடியைப் புணர்ந்து நின்றதனை அவள் கண்டாள் என்றவாறு. மாறு - பகை. மீக்கூரி - மிக்கு. ஆறு - வழி. அணிநலம் - அழகின்பம். அசைஇ - வைத்து. ஊழ் மலர் அல்லி மலர் பொறி மலர் எனத் தனித்தனி கூட்டுக. ஊழ் மலர் - ஊமத்த மலர். முதிர்வு அல்லி எனக் கண்ணழித்துக் கொள்க. முதிர்வு - முதிர்தலையுடைய மலர் என்க. அல்லி - அகவிதழ். பொறி - புள்ளி. நாகத்துமலர் என்க. நாகம் - சுரபுன்னை. வேறுவகை மரமுமாம். கும்பம் - மத்தகம். எழுவகை மகளிர் - பேதை முதலாகப் பேரிளம் பெண் ஈறாக ஏழு பருவங்களையுடைய மகளிர். அண்ணல் - ஈண்டு அரசன் : பிடியோடு ஆடும் களிற்றியானைக்கு மகளிரோடாடும் அரசன் உவமை. இன்ப நேயம் - இன்பத்திற்குக் காரணமான காதலன்பு. காணா - கண்டு.