பக்கம் எண் :

பக்கம் எண்:962

உரை
 
5. நரவாண காண்டம்
 
3. இயக்கன் போனது
 
         
     80    விழுநிதிக் கிழவன் விழையுங் காதலின்
           நாடக மகளிர் நலத்தொடு புணர்ந்த
           பாடகச் சீறடிப் பத்தி ராபதி
           தான மகளிரொடு தண்புனல் யாற்றயற்
           கானத் தாடிக் கடவா நின்றோள்
     85    ஊழலர்ச் சோலையூ டுவந்துவிளை யாடும்
           வேழப் பிறவும் விழைதக் கதுவென
           உள்ளம் பிறழ்ந்ததை யுள்ளகத் தடக்கி
 
           (பத்திராபதி யானைப் பிறப்பை விரும்பல்)
                80 - 87 : விழுநிதி...............அடக்கி
 
(பொழிப்புரை) சிறந்த நிதிக் கிழவனாகிய குபேரனும் விரும்புதற்குக் காரணமான காதலையுடைய நாடக மகளிர்க்குரிய அழகோடுகூடிய பாடக மணிந்த சிற்றடிகளையுடைய அப்பத்திராபதி நங்கை தானும் ஊழ்த்து மலருகின்ற சோலையினுள்ளே ஆணும் பெண்ணுமாய்க் கூடி மகிழ்ந்து விளையாடாநின்ற யானைப் பிறப்பும் விரும்பத்தக்கதே யாகும் ! என்று எண்ணி அப் பிறப்பினை அவாவித் தன் மனம் பிறழ்ந்ததனைப் பிறர் அறியாதபடி தன்னுள்ளேயே அடக்கிக் கொண்டவளாய் வித்தியாதரமகளிராகிய தன் தோழிமாரோடு தண்ணிய நீரையுடைய யாற்றையுடைய அவ் வாலங்கானத்தில் ஆடிச் செல்பவள் என்க.
 
(விளக்கம்) விழுநிதிக் கிழவன் - சிறந்த பொருளுக்கு உரிமை பூண்ட குபேரன். நாடக மகளிர் நலம் என்றது ஆடலும் பாடலும் அழகும் ஆகிய இம் மூவகைச் சிறப்புமாம் என்க. பாடகம் - ஒரு காலணி. தானவமகளிர் - விச்சாதரர் மகளிர். ஊழ்த்து அலரும் சோலை என்க. பிறவு - பிறப்பு.
             'அறவாழி யந்தணன் றாள்சேர்ந்தார்க் கல்லால்,
              பிறவாழி நீந்த லரிது' (குறள்- 8)
என்புழியும், 'பிறவாழிக் கரைகண்டாரே' (வில்லி-பாரதம்-கிருட்டிணன் தூது. 1.) என்புழியும் அஃதப் பொருட்டாதல் அறிக. விழைதக்கது - விரும்பத்தகுந்தது.