பக்கம் எண் :

பக்கம் எண்:964

உரை
 
5. நரவாண காண்டம்
 
3. இயக்கன் போனது
 
           பிடியெழி னயந்து பெயர்ந்தன ளிவளென
           ஒன்றிய வுறுநோ யோதியி னோக்கிச்
           செயிர்த்த வுள்ளமொடு தெய்வ வின்பம்
           பொறுத்தல் செல்லாது வெறுத்தனை போன்மென
 
                 (குபேரன் அவளைச் சபித்தல்)
                91 - 94 : பிடி...............போன்மென
 
(பொழிப்புரை) இப் பத்திராபதி பிடியானையின் அழகினை விரும்பி யீண்டு வந்தனள் என்பதனை அவள் இசைத்த இசைப் பாடலால் அறிந்து கொண்ட அக் குபேரன் அவள் நெஞ்சத்தே பொருந்திய மிக்க காமநோயையும் தன் ஓதி ஞானத்தால் உணர்ந்து வெகுண்ட நெஞ்சத்தோடே, 'ஏடி! நீ முற்செய் தவத்தால் எய்தியுள்ள இத் தெய்வ வின்பத்தை ஏற்றுக் கொள்ளாமல் வெறுத்தனை போலும்' என்று கூறி என்க.
 
(விளக்கம்) பத்திராபதி குபேரன் முன்னிலையில் சென்று பாடுங்கால் தன் மனக் கருத்துத் தோன்றப் பாடினாள். அதனை உணர்ந்த குபேரன் என்னும் பொருளமைந்த சொற்கள் அழிந்த அடியில் இருந்திருத்தல் வேண்டும் என்று ஊகிக்கலாம். இதனை அடுத்துவரும் 'விலங்கின் பிறவி நயந்து நீ கானம் செய்ததுகாரணமாக' எனவரும் குபேரன் கூற்றும் இதனை வலியுறுத்தும். எழில் - அழகு. இவள் : பத்திராபதி. உறுநோய் - மிக்க காமநோய். ஓதியின் - ஓதி ஞானத்தால். செயிர்த்த - வெகுண்ட.. பொறுத்தல் செல்லாது : ஒருசொல்; பொறாது என்றபடி. போன்ம் - போலும்.