பக்கம் எண் :

பக்கம் எண்:969

உரை
 
5. நரவாண காண்டம்
 
  3. இயக்கன் போனது
 
          வீர வேந்தன் விளங்கிழைக் குறுமகள்
    125    வார்வளைப் பணைத்தோள் வாசவ தத்தையை
          ஆர்வ வுள்ளத் தவனுட னேற்றி
          ஊரப் படுநீ யோரிரு ளெல்லையுள்
          உலப்பரு நீளதர் தலைச்செல வோடிக்
          கால கூட மென்னும் வெந்நோய்
    130    சாலவும் பெருக மேன்மே னெருங்கி
          விலக்குவரை நில்லாது வெம்பசி நலிய
          வீழ்ந்த காலை மேயவ னத்தலை
 
                    (இதுவுமது)
             124 - 132 : வீர...............காலை
 
(பொழிப்புரை) வீரவேந்தனாகிய அப் பிரச்சோதனன் மேலும் விளங்கிய அணிகலனணிந்த சிறுமியும் வளையலணிந்த நெடிய பருத்த தோள்களை யுடையவளும் ஆகிய வாசவதத்தையாகிய தன் மகளை ஆர்வமுடைய நெஞ்சத்தோடு உதயணனுடன் ஏற்றிவிட அப்பொழுது உதயணனால் ஊரப்படுகின்ற நீ ஒரே இரவினூடே முடிதலில்லாத அரிய நெடிய வழியின்மேல் விரைந்தோடிச் செல்லுங்கால், உனக்குக் காலகூடம் என்னும் வெவ்விய நோயுண்டாகி மிகவும் பெருகா நிற்றலாலும் மேலும் மேலும் தவிர்க்கும் வரையறை யில்லாமல் வெவ்விய பசி நலிதலாலும் நீ அவ்வழியிடத்தே விழுந்த பொழுது என்க.
 
(விளக்கம்) வேந்தன் : பிரச்சோதனன். ஏற்றி - ஏற்ற. உதயணனால் ஊரப்படும் நீ என்க. உலப்பரு அதர் - உலத்தல் அரிய அதர் என்க. ஈண்டு அருமை இன்மை மேனின்றது. அதர் - வழி. கால கூடம் - யானைகட்கு வரும் ஒரு கொடு நோய்.