பக்கம் எண் :

பக்கம் எண்:973

உரை
 
5. நரவாண காண்டம்
 
  3. இயக்கன் போனது
 
          நிவந்த வன்பி னுவந்தது கூறெனக்
          கவிழ்ந்த சென்னியள் கைவிரல் கூப்பி
          வன்க ணுள்ளத்து மன்னர்க் கொவ்வா
          அங்கவ னுள்ளமோ டருண்முந் துறீஇ
    155    என்குறை முடித்தே னினியென் னாது
          துன்புறு கிளவியிற் றொன்னல மழுங்கத்
          திருமலர் நெடுங்கண் டெண்பனி யுறைத்தந்
          தருமணி யாகத் தகல நனைப்ப
          எவ்வ வுள்ளமோ டிரத்த லாற்றான்
 
                    (இதுவுமது)
             151 - 159 : நிவந்த.........ஆற்றான்
 
(பொழிப்புரை) அது கேட்ட குபேரன் தன் நெஞ்சத்தே பெருகிய அன்பினாலே, 'ஏடி ! நீ விரும்பும் வரத்தைக் கூறுக' என்று கட்டளையிட அது கேட்ட அப் பத்திராபதி தலைவணங்கிக் கை கூப்பித் தொழுது, 'பெருமானே ! யானைப் பிறப்பின்கண் என்னை ஊர்தியாகப் பெற்று ஊர்ந்து வந்த உதயணன் யான் காட்டினூடே கடும் பிணி எய்தி நலிந்து வீழ்ந்த காலத்தே என் காரியத்தை ஓரளவு முடித்துக் கொண்டேன் என்றொழியாது அப் பெருமகன் அருள் முற்பட்ட நெஞ்சத்தோடே தறுகண்மையுடைய நெஞ்சத்தையுடைய பிற மன்னர்க்குப் பொருந்தாத அவனுடைய கண்ணோட்டமிக்க நெஞ்சத்தோடே என்பால் அருளை முற்படச் செலுத்தித் துயரமிக்க மொழிகளோடே தனது பழைய அழகு கெடும்படி வருந்தி அழகிய தாமரை மலர் போன்ற தனது நெடிய கண்ணினின்றும் தெளிந்த கண்ணீரைத் துளித்தலாலே அக் கண்ணீர் பெறற்கரிய மணியணிகலனணிந்த தனது மார்பினை நனையாநிற்பப் பெரிய துன்பம் நிறைந்த நெஞ்சத்தோடே என்னை விட்டுச் செல்ல ஒருப்படானாய் என்க.
 
(விளக்கம்) நிவந்த - பெருகிய. வன்கண்மையுடைய மன்னர்க்குப் பொருந்தாத அருள் நெஞ்சத்தோடே என்க. திருமலர் - ஈண்டுத் தாமரைமலர். ஆகத்தகலம் : இருபெயரொட்டு. ஆகத்தின் கண்ணதாகிய அகலம் எனினுமாம். எவ்வம் - துன்பம். இரத்தலாற்றான் என்னும் பாடம் பொருந்திற்றில்லை. ஆகலின் இறத்தலாற்றான் எனக் கொண்டாம். இதனால் பத்திராபதி உதயணன் தனக்குச் செய்த நன்றியைக் குபேரனுக்குக் கூறுகின்றாள்.