பக்கம் எண் :

பக்கம் எண்:974

உரை
 
5. நரவாண காண்டம்
 
  3. இயக்கன் போனது
 
         
    160    தைவந் தளித்துத் தக்கது செய்தோய்
          படர்கூ ரியாக்கையுட் பற்று விட்டகன்
          றிடர்தீர்ந் தினியை யாகவென் குறையெனக்
          கடவது கழித்த காவலன் றனக்கோர்
          மறுவில் சிறப்பினோர் மகனை வேண்டுவேன்
    165    பெறுதற் கொத்த பிழைப்பில னாயினும்
          அறாஅ வருநிதிக் கிழவ னதனை
          மறாஅ தருளென மடமொழி யுரைப்பப்
          பெரிதவ னுணர்ந்து பெற்றனை நீயெனச்
 
                    (இதுவுமது)
            160 - 168 : தைவந்து..............நீயென
 
(பொழிப்புரை) அவ்வுதயணன் என் உடலைத் தழுவிப் 'பிடிநங்காய் ! நீ எனக்குச் சிறந்ததோர் உதவியைச் செய்தாய். இனி நீ துன்பம் மிகுதற்குக் காரணமான இவ் விலங்கின் உடலின்கண் பற்றினை ஒழித்துச் சென்று துன்பம் தீர்ந்து இனிய தெய்வப் பிறப்பினை உடையையாகுக ! இஃதென் விருப்பம்' என்று கூறி அப்பொழுது தான் செய்யத் தகுந்த நீர்க்கடனைச் செய்து முடித்தான்; அவ்வுதயண மன்னனுக்கு ஒப்பற்றவனும் குற்றமற்ற சிறப்பினையுடையவனும் ஆகிய ஒரு மகனைப் பெருமான் அளித்தருள வேண்டுகின்றேன். இதுவே யான் விரும்பும் வரம், இதனைப் பெருமான்பால் பெறுதற்கு ஏற்ற சீரிய வாழ்வினை உடையேன் அல்லேனாயினும் அழியாத அரிய நிதியையுடைய எம்பெருமான் ! இவ் வரத்தை அடிச்சிக்கு மறுக்காமல் அருளுக ! என்று மடப்பமுடைய மொழியினையுடைய பத்திராபதி குபேரனை வேண்டாநிற்ப, அதுகேட்ட அக் குபேரன் அவளின் நன்றியுணர்ச்சியைக் கூர்ந்துணர்ந்து மகிழ்ந்து ''ஏடி ! அவ் வரத்தினை யான் நினக்கு வழங்கினேன் !'' என்று கூறி என்க.
 
(விளக்கம்) தைவந்து - தடவி. தக்கது - தகுந்ததோருதவி. படர் - துன்பம். என்குறை - என் விருப்பம். காவலன் : உதயணன். பிழைப்பிலன் : தன்மையொருமை. பிழைப்பு - வாழ்க்கை. ஈண்டுச் சீரிய வாழ்க்கை இலேன் என்றவாறு. நிதிக்கிழவ : விளி. அதனை - அவ்வரத்தை. மடமொழி : பத்திராபதி. அவன் : குபேரன். தெளிவு பற்றி ''பெற்றனை'' என இறந்தகாலத்தாற் கூறினன்.