பக்கம் எண் :

பக்கம் எண்:976

உரை
 
5. நரவாண காண்டம்
 
  3. இயக்கன் போனது
 
          பின்னை மற்றவன் மன்னிய வேட்கையொடு
          விச்சை யெய்தி வெள்ளியம் பெருமலை
          அச்சமி லாழிகொண் டரசுவீற் றிருத்தற்கு
          நச்சி நோற்றவோர் கச்சமில் கடுந்தவச்
    180    சோதவ னென்னு மிருடி யுலகத்துத்
          தேவ யாக்கையொடு போக மெய்திய
          நிதான வகையி னினைத்தினி திருந்தனன்
 
        (சௌதருமேந்திரன் குபேரனுக்குக் கூறுதல்)
            176 - 182 : பின்னை.........இருந்தனன்
 
(பொழிப்புரை) அங்ஙனம் குபேரன் பாராட்டிய பின்னர் அச்சௌதருமேந்திரன் அச்செயலின்கண் குபேரனுக்குக் கூறுபவன், ''நண்ப! கேள்! முன்பொரு காலத்தே நிலைபெற்ற விருப்பத்தோடே வித்தைகள் பலவும் பயின்று கைவரப் பெற்று வெள்ளிப் பெருமலையின்மேல் உயிர்கள் அச்சமில்லாமல் வாழுதற்குக் காரணமான ஆணைச் சக்கரத்தைக் கைக்கொண்டு அவ்வெள்ளி மலையின்மேல் அரசுவீற்றிருத்தற்குப் பெரிதும் விரும்பி நோன்பு செய்த அளவற்ற கடிய தவத்தினையுடைய சோதவன் என்னும் ஒரு துறவி நிலவுலகத்தின்கண் தெய்வயாக்கையோடு பிறந்து இன்பம் நுகர்தற்கு உறுதிபூண்டு நெடிது நினைந்து இனிதாக இருந்தனன்'' என்க.
 
(விளக்கம்) அவன் : சௌதருமேந்திரன். அச்சமில்லாமைக்குக் காரணமான ஆழி என்க. நச்சி - விரும்பி. கச்சம் - ஒருவகைப் பேரளவு. இருடி - துறவி. எய்திய - எய்த. நிதானம் - உறுதி.

  ''எண்ணிய வெண்ணியாங் கெய்துப வெண்ணியார்
   திண்ணிய ராகப் பெறின்'' (குறள் - 666)

என்பதுபற்றிப் போகம் செய்த நிதான வகையின் நினைத்திருந்தனன் என்றான்.