பக்கம் எண் :

பக்கம் எண்:979

உரை
 
5. நரவாண காண்டம்
 
  3. இயக்கன் போனது
 
          மேலையம் பாற்கடல் வெள்ளேறு கிடந்த
    195    வாலிதழ் நறுமலர் வைகறை யாமத்துக்
          கனவின் மற்றவன் கையிற் கொடுத்து
          வினையி னெதிர்பொருள் விளங்கக் காட்டென
          இந்திரன் விடுத்த காலை வந்தவன்
          பைந்தளிர்க் கோதைப் பத்திரைக் களிப்ப
 
                    (இதுவுமது)
            194 - 199 : மேலை............அளிப்ப
 
(பொழிப்புரை) பின்னரும் அச்சௌதருமேந்திரன் அச்சோதவனை நோக்கி ''ஐய! நீ அவ்வுதயணனுடைய கனவின்கண் வைகறைப் பொழுதிலே தோன்றி மேற்றிசையின் கண்ணதாகிய அழகிய பாற்கடலின்கண் பிறந்ததும் தன் பொகுட்டின்மேல் ஒரு வெள்ளேறு கிடக்கப் பெற்றதும் ஆகிய வெள்ளிய இதழையுடைய நறிய தாமரைமலர் ஒன்றனை அம்மன்னவன் கையில் கொடுக்கு மாற்றால் ஊழ்வினையின்படி எதிர்காலத்தே நிகழும் செயலை விளங்கும்படி காட்டுக!' என்று ஏவி விடுத்த காலத்தே அக் கட்டளையோடு வந்த அச்சோதவன் அப்பணியைப் பசிய தளிர் விரவிய மாலையினையுடைய பத்திராபதிக்கு வழங்காநிற்ப என்க.
 
(விளக்கம்) மேலை - மேற்றிசை, வாலிதழ் - வெள்ளிய இதழ். வைகறையாமத்துக் கண்ட கனவு உடனே பலிக்கும் என்பதுபற்றி வைகறையாமத்துக் கனவிற் றோன்றிக்கொடு என்றான். இந்திரன் - சௌதருமேந்திரன். வந்தவன் : சோதவன்.