பக்கம் எண் :

பக்கம் எண்:980

உரை
 
5. நரவாண காண்டம்
 
  3. இயக்கன் போனது
 
         
    200    ஒள்ளரி மழைக்கட் டேவியை யுள்ளிநீ
           பள்ளி கொண்டுழிப் பரிவுகை யகல
           வெள்ளிய நறும்பூத் தந்தனள் விளங்கிழை
           ஆர்வ வுள்ள முடையோர் கேண்மை
           தீர்வதன் றம்ம தேர்ந்துணர் வோர்க்கே
 
          (பத்திரை உதயணன் கனவிற் றோன்றல்)
          200 - 204 : ஒள்ளரி..............உணர்வோர்க்கே
 
(பொழிப்புரை) இத்துணையுங் கூறிய இயக்கன் மேலும் உதயணனை நோக்கிக் கூறுகின்றான் : 'நண்பனே ! நீ ஒள்ளிய செவ்வரி பரந்த குளிர்ந்த கண்ணையுடைய வாசவதத்தையை நினைந்து பள்ளிகொண்டிருந்தபொழுது நினது துன்பம் நின்னை விட்டு அகன்றுபோம்படி விளங்கிய அணிகலன்களையுடைய அப்பத்திராபதி உன் கனவின்கண் தோன்றி அந்த வெண்டாமரை மலரை உனக்குக் கொடுத்தாள். ஆராய்ந்துணரும் அறிவுடையோர்க்கு அன்புள்ளம் படைத்த மேலோர் நட்பு அழிவதன்று காண்' என்று கூறி என்க.
 
(விளக்கம்) தேவி - வாசவதத்தை. பரிவு - துன்பம். விளங்கிழை : பத்திராபதி. அம்ம - கேட்பித்தற்கண் வந்தது.