பக்கம் எண் :

பக்கம் எண்:984

உரை
 
5. நரவாண காண்டம்
 
  3. இயக்கன் போனது
 
           கடிகமழ் மார்ப கவல லென்று
    225    தொடியுடைத் தடக்கையிற் றோழனைப் புல்லிப்
           பசும்பொற் பல்கலம் பல்லூ ழிமைப்ப
           விசும்பின் மின்னென மறைந்தனன் விரைந்தென்.
 
                 (இயக்கன் செல்லுதல்)
              224 - 227 : கடி............விரைந்தென்
 
(பொழிப்புரை) மணங்கமழ்கின்ற மார்பினையுடையோய் ! கவலாதே கொள் என்று கூறி வீரவளையணிந்த தன் பெரிய கைகளாலே ஆருயிர்த் தோழனாகிய, உதயணனைத் தழுவிக் கொண்டு விடைகொண்டு வானின்கண் தனது பசிய பொன்னாலியன்ற பல்வேறு அணிகலன்களும் பிறழ்ந்து பன்முறையும் ஒளி வீசாநிற்ப, மின்னல் போன்று விரைந்து விண்ணினூடே மறைந்து போனான் என்க.
 
(விளக்கம்) கடி - மணம். கவலல் - கவலைப்படாதே. தொடி - வீரவளை. பல்லூழ் - பன்முறையும். விரைந்து மறைந்தனன் என மாறுக.

                 3. இயக்கன் போனது முற்றிற்று.