பக்கம் எண் :

பக்கம் எண்:988

உரை
 
5. நரவாண காண்டம்
 
  4. வயாத் தீர்ந்தது
 
           நீர்சார் பாக வூர்பவு மரத்தொடு
           நிலஞ்சார் பாகச் செல்பவு மலங்குசினை
           இலைசார் பாக வியல்பவு மென்றிந்
           நால்வகை மரபி னல்லதை நூல்வழி
     25    ஆருயிர் கொளினு மதுவெமக் கரிதெனச்
           சார்புபிறி தின்மையிற் சாற்றுவன ரிறைஞ்ச
 
                   (தச்சர் மறுத்தல்)
                21 - 26 : நீர்.............இறைஞ்ச
 
(பொழிப்புரை) அதுகேட்ட அத் தச்சர்கள் எல்லோரும் ஒருசேர ஆராய்ந்து அரசன் வெகுளின் தமக்குப் புகலிடம் பிறிதொன்றும் இல்லாமையால் அஞ்சியவராய் அவ்வமைச்சர் அடிகளில் வீழ்ந்து வணங்கிக் கூறுபவர், ''பெருமானீர் ! அடியேங்கள் நீரைச் சார்பாகக் கொண்டு இயங்கும் இயந்திரங்களும், மரங்களைச் சார்பாகக் கொண்டு இயங்கும் இயந்திரங்களும் நிலத்தைச் சார்பாகக் கொண்டு இயங்கும் எந்திரங்களும் அசைகின்ற மரக்கிளை இலை முதலியனவற்றைச் சார்பாகக் கொண்டு இயங்கும் எந்திரங்களும் என்னும் இந்த நால்வகை இயந்திரங்களையும் எந்தச்சு நூல்வழி நின்று இயற்றுவதல்லது, எமது அரிய உயிரை நீங்கள் கொள்ளினும் நீங்கள் கூறிய சேயுயர் விசும்பிற் செல்லும் எந்திரமியற்றுதல் எங்களுக்கு இயலாது'' என்று கூறாநிற்ப என்க.
 
(விளக்கம்) ஊர்பவும் - இயங்குவனவும், அலங்குசினை - அசையும் கிளை. இயல்பவும் - இயங்குவனவும். ஆருயிர் கொளினும் என்றது நீங்கள் எம்மைக் கொன்றாலும் என்றவாறு. அது - விசும்பிற் செல்லும் எந்திரம் செய்தல்.
          ''யாண்டுச்சென் றியாண்டு முளராகார் வெந்துப்பின்
          வேந்து செறப்பட் டவர்'' (குறள், 895)
என்பவாகலின், மன்னர் ஏவலை மறுத்துழிச் செல்சார்பு பிறிதிலதாயிற்று என்க.