பக்கம் எண் :

பக்கம் எண்:989

உரை
 
5. நரவாண காண்டம்
 
  4. வயாத் தீர்ந்தது
 
           அந்தர விசும்பி னறிவன ணோக்கி
           இவருரு வாகி யிவ்வினை முடிப்பலென்
           றமருரு வொழித்துச் சென்றனள் குறுகிக்
     30    களைக ணீகுவென் கையற லொழிகெனத்
           தளையவிழ் தாமமொடு தச்சுவினைப் பொலிந்தவோர்
           இளையனிற் றோன்றி யிவர்களை யலைத்தல்
           வேண்டா விடுக விரைந்தென வுரைத்தலிற்
 
            (பத்திராபதி தச்சவுருவங் கொண்டு வருதல்)
               27 - 33 : அந்தர............உரைத்தலின்
 
(பொழிப்புரை) இனி ஈண்டுத் தன்னைக் கருதி மந்திரங்கணிக்கும் உதயணன் கருத்தினை வானுலகத்தே இருந்த பத்திராபதி தன் ஓதி ஞானத்தால் உணர்ந்து, இத்தச்சர் உருவங்கொண்டு சென்று யான் இத்தொழிலை முடித்துக் கொடுப்பேன் என்று நினைந்தவளாய்த் தனக்குரிய தெய்வ வுருவத்தை விடுத்துக் கட்டவிழ்ந்து மலர்ந்த மாலையணிந்த தச்சுத் தொழிலால் சிறந்த அழகிய ஓர் இளந்தச்சன் வடிவங்கொண்டு அவ்வமைச்சர்கள் முன்னிலையிற் சென்று ''ஐயன்மீர் ! இவ்வெளிய தச்சர்களை வருத்துதல் வேண்டா ! இவர்களை விட்டொழிக. யானே நுங்கள் இடர் நீக்கும் களைகணாக நீயிர் விரும்பிய வான ஊர்தியை விரைந்து இயற்றித் தருவேன் ! நுங்கள் கவலையை விடுங்கள் என்று கூறுதலாலே என்க.
 
(விளக்கம்) அந்தரவிசும்பு : இருபெயரொட்டு. இவருரு - இத்தச்சர் வடிவம். இவ்வினை - வான ஊர்தி அமைக்குந் தொழில். அமருரு - அமரருரு. கையறவு - துன்பம். அலைத்தல் - வருத்துதல்.