பக்கம் எண் :

பக்கம் எண்:990

உரை
 
5. நரவாண காண்டம்
 
  4. வயாத் தீர்ந்தது
 
           பூண்டாங் ககலத்துப் புரவலற் குறுகி
     35    உருமண் ணுவாவும் பெருவிதுப் பெய்திக்
           கண்ணியன் கழலினன் கச்சினன் றாரினன்
           வண்ண வாடையன் வந்திவட் டோன ன் விளங்கி
           என்னே மற்றிவ ரறியா ரொழிகெனத்
     40    துன்னிய துயரந் துடைப்பான் போன்றனன்
           மன்னருண் மன்னன் மறுமொழி யாதென
 
              (உதயணனுக்கு உருமண்ணுவா அறிவித்தல்)
                  34 - 41 : பூண்..........யாதென
 
(பொழிப்புரை) அவ்விளந் தச்சன் மொழியைக் கேட்ட உருமண்ணுவாவும் மிக விரைந்து சென்று பேரணிகலந்தாங்கிய மார்பினையுடைய மன்னனை யணுகி, 'வேந்தர் வேந்தே! ஓர் இளைஞன் தச்சுத் தொழிலில் பொலிவுற்று அவ்வித்தையிலே விளங்கியவனாய்த் தலையில் மாலையினையும் காலில் வீரக்கழலையும் இடையில் கச்சினையும் மார்பில் மலர்மாலையினையும் வண்ணமிக்க ஆடையினையும் உடையனாய் யாண்டிருந்தோ வந்து எம்முன்னே தோன்றி ''இவ்வெளிய தச்சர்களை வருத்துதல் என் கொலோ ? இவர் நீவிர் கூறும் எந்திரமமைக்க அறியார். ஆதலால் அத்தொழிலை விடுக'' என்று கூறி ''யானே அத்தகைய எந்திரத்தை இயற்றித் தருகுவல், வருந்தற்க !'' என்கின்றான். அவன் நம்பால் எய்திய துன்பத்தை அகற்றுபவனைப் போன்று தோன்றுகின்றான். இதற்குப் பெருமான் மறுமொழி என்னையோ ?' என்று கூறாநிற்ப என்க.
 
(விளக்கம்) புரவலன் : உதயணன். பெருவிதுப்பெய்தி - மிக விரைந்து. இவர் - இத்தச்சர். வருத்துதலொழிகென என்க. மறுமொழி - விடை.