பக்கம் எண் :

பக்கம் எண்:993

உரை
 
5. நரவாண காண்டம்
 
  4. வயாத் தீர்ந்தது
 
         
     50    அமைவுநனி காண்கென் றாங்கவ னுரைப்ப
           உமையொடு புணர்ந்த விமையா நாட்டத்துக்
           கண்ணணங் கவிரொளிக் கடவுளைப் போலத்
           தடவரை மார்பன்..................
           தானுந் தேவியுந் தகைபெற வேறி
     55    வானோர் கிழவனின் வரம்பின்று பொலியத்
           தேனார் கோதையொடு திறவதி னிருப்ப
 
        (உதயணன் முதலியோர் அவ் வானஊர்தியில் ஏறிச் செல்லல்)
                   51 - 56 : உமை.........இருப்ப
 
(பொழிப்புரை) அதுகேட்ட உதயண மன்னன் மகிழ்ந்து உமையம்மையாரோடு கூடிய இமைத்தலில்லாத திருக் கண்களையுடைய காண்போர் கண்ணை வருத்தாநின்ற விளங்கிய பேரொளியினையுடைய இறைவனாகிய சிவபெருமான்போலே சென்று தானும் தன் பட்டத் தேவியாகிய வாசவதத்தையோடு அழகுண்டாக அவ் வான ஊர்தியின்கண் ஏறித் தேன் நிரம்பிய மலர்மாலையணிந்த அத்தேவியோடே அமரர் கோமான் போன்று எல்லையற்ற அழகோடே அவ்வூர்தியின்கண் நன்கு வீற்றிராநிற்ப என்க.
 
(விளக்கம்) கடவுள் - சிவபெருமான். தேவியோடு உதயணன் இணைந்து சென்றமைக்கு உமையொடு புணர்ந்த கடவுள் உவமம். வானவூர்தியின்கண் தேவியோடு வீற்றிருந்தமைக்கு இந்திரன் உவமம். மார்பன் : உதயணன். தகை - அழகு. வானோர் கிழவன் - இந்திரன். கோதை : வாசவதத்தை.