பக்கம் எண் :

பக்கம் எண்:995

உரை
 
5. நரவாண காண்டம்
 
   4. வயாத் தீர்ந்தது
 
          மற்றை மூவருங் கொற்றவற் குறுகி
    65    விசும்பா டூசலின் வேட்கை தீர்க்கெனப்
          பசும்பொற் கிண்கிணிப் பாவைய ரெல்லாம்
          ஒல்லா நிலைமைகண் டுரைத்தனம் யாமென
          வெல்போர் வேந்தனும் விரும்பின னாகித்
          தச்ச னாயவன் றன்னை நோக்கி
    70    அச்சி னமைதி யறியக் கூறென
 
                    (இதுவுமது)
               64 - 70 : மற்றை.........கூறென
 
(பொழிப்புரை) மேலும் அமைச்சருள் எஞ்சிய யூகியும் வயந்தகனும் இடவகனும் ஆகிய மூவரும் உதயணனை யணுகி 'வேந்தே! கோப்பெருந்தேவிபோலவே கருவுற்றிருக்கும் எங்கள் மனைவிமாரும் வானில் ஏறி ஊசலாடுதற்கு விரும்பா நின்றனர். அவர்கள் வயாவிருப்பத்தைத் தீர்ப்பதற்குப் பசிய பொன்னாலியன்ற கிண்கிணியையுடைய அப் பாவைமாரெல்லாம் இதன்கண் ஏறுதற்கியலாத நிலைமையினைக் கண்டு யாங்கள் அம் மகளிர்க்குக் கூறித் தடை செய்துள்ளேம்' என்று கூறா நிற்ப, அதுகேட்ட வெல்லும் போரையுடைய அவ்வேந்தனும் அவர் வரவினையும் விரும்புவானாய் அத் தச்சனை மீண்டும் நோக்கி நண்பனே ! அவர்கள் விரும்புவதுபோல இவ் விமானத்தில் அவர்களும் ஏறுதல் கூடுமோ? இவ் விமானப் பொறியின் அமைப்பினை எனக்குத் தெரியக் கூறுக! என்று வேண்டா நிற்ப என்க.
 
(விளக்கம்) மூவரும் - யூகி, வயந்தகன், இடவகன் ஆகிய மூவரும். தேவியின் வயிற்றிற் பிறக்கும் மகவு வித்தியாதரருலகை ஆளும் ஊழுடையது என்பது முன்னர்க் கண்டாம். இவ்வமைச்சர்கள் மனைவிமார் ஈனும் மகவுகளும் அம் மகவிற்கு அமைச்சராய் அந் நாட்டினை ஆளும் ஊழுடையன ஆதலின் அவர் வயாவிருப்பமும் தேவியின் விருப்பத்தையே ஒத்திருந்தது என்பது ஈண்டு ஊகித்துக் கொள்ளல் வேண்டும். கொற்றவன் - குபேரன். விசும்பில் ஊசலாடும் வேட்கை என்றவாறு. பாவையர் - அமைச்சர் மனைவிமார். ஒல்லா நிலைமை - விமானத்தில் மேலும் மேலும் ஏறுதல்கூடாத தன்மை. உரைத்தனம் என்றது கூறித் தடுத்துள்ளேம் என்பதுபட நின்றது. வேந்தன் - உதயணன். இத் தச்சன் உண்மையான தச்சன் அல்லன் என்பது தோன்றத் தச்சனை நோக்கி என்றொழியாது தச்சனாயவன்றன்னை என வேண்டாது விரித்து வேண்டியது முடித்தார். அச்சு - அச்சின் அமைதி; பொறியின் அமைப்பு. அச்சி னமைதி கூறு என்றது இதன்கண் இன்னும் சிலர் ஏறுதலுங் கூடுமோ? கூடாதோ? என்று எனக்கு அறிவிப்பாயாக என்றவாறு.