உரை |
|
5. நரவாண காண்டம் |
|
4. வயாத் தீர்ந்தது |
|
உலக மெல்லா மேறினு
மேறுக பலர்புகழ்
வேந்தே யென்றவன் பணிதலும்
உவந்த வுள்ளமொடு நயந்துட
னிவர வடுத்தீர்
குருசிற் கறிய மற்றவன் 75 கடுப்புந்
தவிர்ப்புநி னுளத்துள் ளனவென
தோடலர் தாரோன் றோன்றக் கூறி
|
|
(இதுவுமது)
71 - 76 : உலகம்..........கூறி
|
|
(பொழிப்புரை) அதுகேட்ட அத்
தச்சன் ''சான்றோர் பலரானும் புகழப்படுகின்ற வேந்தே! இவ் விமானத்தில்
இவர்களேயன்றி இவ்வுலகத்தில் வாழும் மாந்தரெல்லாம் ஏறினும் ஏறுவாராக! அஃது
எல்லோருக்கும் இடந்தரும்,'' என்று கூறி வணங்கா நிற்ப, அதுகேட்ட மற்றையோரும்
மகிழ்ந்த நெஞ்சத்தோடே விரும்பி முன்னர் ஏறியவரோடு ஏறியிராநிற்பப் பின்னரும்
இதழ் விரிந்த மலர் மாலையணிந்த அத் தெய்வத் தச்சன் உதயணனை நோக்கிக்
குற்றந்தீர்ந்த அவ் வேந்தன், அறிந்து கொள்ளும் பொருட்டு ''வேந்தே! இவ் விமானத்தை
விரைந்து செலுத்துதற்கும், செலவினைத் தவிர்த்து நிறுத்துதற்குமுரிய பொறிகள் உன்னுடைய
நெஞ்சினுள்ளேயே இருக்கின்றன காண் ! என்று அக் கருத்து அவனுக்கு விளங்கும்படி கூறி
என்க.
|
|
(விளக்கம்) உலகம் : ஆகுபெயர். உலகமெல்லாம்
ஏறினும் ஏறுக என்றது, இவ் விமானம் எத்தனை பேர் ஏறினும் இடங்கொடுக்கும் என்றவாறு.
குருசில் : உதயணன். அவன் : தச்சன். கடுப்பு - விரைந்து செலுத்துதல். தவிர்ப்பு -
செலவினைத் தவிர்த்து நிறுத்துதல் இவ் விமானம் நீ விரைந்து செல்ல நினையின் விரைந்து
செல்லும் நிறுத்த நினையின் நிற்கும். இதன் செலவிற்கு நின் நினைவே காரணம் என்பான்
கடுப்புந் தவிர்ப்பும் நின் உள்ளத்துள்ளன என்றான். எனவே அதனை மேனோக்கிச்
செலுத்துதலும் திசைகளிலே திருப்பிச் செலுத்துதலும் பிறவும் ஆகிய எல்லாத் தொழில்
விகற்பங்களும் அவன் நினைப்பாலேயே நிகழ்வனவாம் என்பதும் உணர்த்தினா னாயிற்று
என்க.
|