பக்கம் எண் :

பக்கம் எண்:998

உரை
 
5. நரவாண காண்டம்
 
   4. வயாத் தீர்ந்தது
 
          விளங்கொளி விமானம் வெங்கதிர்ச் செல்வன்
          துளங்கொளி தவிர்க்குந் தோற்றம் போல
          நாளு நாளு நன்கன மேற்றி
    85    ஊழி னூழி னுயர வோட்டிக்
          கோளுங் குறியுங் கொண்டன னாகி
          முகிலுளங் கிழிய வகலப் போகி
          வடக்கு மேற்கும் வானுற நிமிர்ந்து
          தொடக்கொடு தொடர்ந்த தாமந் துயல்வர
 
                      (இதுவுமது)
             82 - 89 : விளங்கொளி.........துயல்வர
 
(பொழிப்புரை) இவ்வாறு அத் தச்சனால் விமானம் பெற்று அதன் இயல்புகளையும் உணர்ந்த அவ்வுதயண மன்னன் அவ் விமானத்தைச் செலுத்தத் தொடங்கி வெவ்விய ஞாயிற்றுமண்டிலத்தின் அசையாநின்ற ஒளியை அகற்றும் மற்றொரு விளங்கிய ஒளியையுடைய மண்டிலமொன்று வானத்தே தோன்றும் தோற்றத்தைப்போல அவ்விமானத்தை முழுத்தந்தோறும் நன்றாக வானத்தே ஏற்றி முறைமுறையே வானத்தின்கண் உயரும்படி செலுத்தி அவ் விமானத்தினது இயல்பினையும் அதனுள் குறிப்புக்களையும் அறிந்துகொண்டவனாய் நிலத்தினின்றும் அகன்று முகில்களின் நெஞ்சு கிழியச் செலுத்தி அப்பாற்சென்று வடக்கினும் பின்பு மேற்கினும் வானத்தைப் பொருந்த உயர்ந்து போய்க் கட்டோடு தொடுக்கப்பட்ட அவ்விமானத்தினது மாலைகள் அசையும்படி செலுத்தி என்க.
 
(விளக்கம்) அவ்விமானம் கதிர்ச்செல்வன் ஒளி தவிர்க்கும் மற்றோர் ஒளி தோன்றிய தோற்றம்போலத் தோன்றும்படி வானத்தில் ஏற்றி என்க. நாளும் நாளும் - முழுத்தந்தோறும் முழுத்தந்தோறும். கோள் - இயல்பு. குறி - குறிப்பு. தொடக்கு - பிணிப்பு. தொடர்ந்த - தொடுத்த. துயல்வர - அசைப்ப.