பக்கம் எண் :

பக்கம் எண்:999

உரை
 
5. நரவாண காண்டம்
 
   4. வயாத் தீர்ந்தது
 
         
    90    ஏற்றரு மலையுஞ் செலற்கருந் தீவும்
          நோற்றவ ருறையு மாற்றயற் பள்ளியும்
          பதினா றாயிரம் பரந்த செல்வத்து 
          விதிமாண் டந்தை வியனா டெய்தலும்
          ஐயமோ டிவனு மமரரூ ராமெனக்
    95    கைவயிற் கொண்டு காழகி னறும்புகை
          பலிவீ டெய்திப் பரவுவன னொத்துக்
          கலிகொன் மன்னன் கழலடிக் கணவாக்
          கணையிற் றேறிக் கலந்துகண் ணுறாது
          பணைவேய் மென்றோட் பதுமா தேவி
    100    நன்னகர் குறுகலி னயந்துமுக நோக்கிப்
 
                    (இதுவுமது)
             90 - 100 : ஏற்றரும்............நோக்கி
 
(பொழிப்புரை) ஏறுதற்கரிய மலைகளையும் செல்லுதற்கரிய தீவுகளையும் துறவோர் உறையும் ஆற்றின் பக்கத்திலுள்ள பள்ளிகளையும் பதினாறாயிரம் என்னும் கணக்கிற்பரவிய செல்வத்தையும் உடைய நன்னெறியாலே மாட்சிமைபெற்ற பிரச்சோதனனுடைய அகன்ற நாட்டினையடைதலும் அதன் அழகிய தோற்றத்தால் இஃது அமரர் நாடோ என்று ஐயுற்றவனாய்த் தன் கையின்கண் காழ்த்த அகலினது நறிய புகையைக் கொண்டு மலர் முதலிய பலிப்பொருளை இட்டு வணங்கப் போவான் போன்று உயிரினங்களின் துன்பத்தைத் துவர நீக்கும் அவ்வமர மன்னனைக் காணவெண்ணி அவன் திருவடி நீழலை அடையத் தாழப் பறந்து சென்று ஆங்குப் பிரச்சோதன மன்னனைக் கண்டு இந்திரன் போன்று ஆயிரங் கண்ணின்றி இரண்டே கண்ணுடைமையால் இவன் பிரச்சோ தனனே என்று தன் ஐயத்தினின்றும் தெளிந்து அவனோடு அளவளாவுதலின்றி அவனைக் கண்ட துணையானே அவ்விடத்தினின்றும் விமானத்தைச் செலுத்திப் பருத்த மூங்கிலையொத்த மெல்லிய தோளையுடைய பதுமாபதியினது இராசகிரியம் என்னும் நல்ல நகரத்தை அவ்விமானம் அணுகுதலாலே அவ்வுதயணன் வாசவதத்தையின் திருமுகத்தை விரும்பிப் பார்த்து என்க.
 
(விளக்கம்) ஆற்றயற்பள்ளி - யாற்றின் பக்கத்தேயமைந்த துறவோர் பள்ளி. பதினாறாயிரம் - பதினாறாயிரம் என்னும் கணக்கில் அமைந்த பல்வேறு செல்வமும் என்க. விதி - நூல் நெறி. இவனும் - உதயணனும். கலிகொல் மன்னன் - இந்திரன். பிரச்சோதன நாட்டை அமரர் ஊர் என்று கருதி அங்குறையும் இந்திரனைப் பணியச் செய்வான் போன்று சென்றென்க. கண் காரணமாக ஐயிற்றேறி என்க. ஐயம் - ஈறுகெட்டு ஐ என்று நின்றது என்க. கலிகொண்......கண்ணுறாது - என்னுந் துணையும் வேறுபொருள் தோன்றினுங் கொள்க.