2. மகத நாடு புக்கது

 

இதன்கண்; உருமண்ணுவா முதலியோர் வளமிக்க மகத நாட்டின்ஊடே சென்றதும், அந்நாட்டு வளமும் அருவிச் சிறப்பும் பிறவும் விரிவாகக் கூறப்படும்.
 
 

            பெருவழி முன்னிப் பெருந்தகை வேந்தனை
            உருமண் ணுவாவும் வயந்தக குமரனும்
            அருமறை நாவின் அந்த ணாளன்
            மயக்கமில் கேள்வி இசைச்சனு மென்றிக்
     5      கடனறி தோழர் காவல் போற்றி
            மடநடை மாதர் மாறிப் பிறந்துழி
            மீட்கும் வேட்கையொடு சேட்புலம் போகி

 
 

            விரிகதிர்த் திங்கள் வெண்குடை யாக
            ஒருவயின் கவித்தல் உற்ற வேந்தற்கு
     10      அருமை அமைச்சர் பெருமலை ஏறிக்
            கொண்டுயாம் தருதும் கண்டனை தெளிகென
            நண்புணத் தெளித்த நாடகம் போலப்
            படைச்சொல் பாசத் தொடக்குள் உறீஇக்
            கலாவேல் குருசில் விலாவணை ஓம்பி

 
 

     15     வயல்கொள் வினைஞர் கம்பலை வெரீஇக்
            கயமூழ்கு எருமை கழைவளர் கரும்பின்
            விண்ட இளமடல் முருக்கித் தண்டாது
            தோகைச் செந்நெல் சவட்டிப் பாசிலை
            ஒண்கேழ்த் தாமரை உழக்கி வண்டுகள்
     20     ஆம்பல் அகலிலை முருக்கிக் கூம்பல்
            குவளைப் பன்மலர் குழைத்துத் தவளைத்
            தண்துறை கலங்கப் போகி வண்டினம்
            பாடல் ஓவாப் பழனப் படப்பைக்
            கூடுகுலைக் கமுகின் கொழுநிழல் அசைந்து
     25     மன்றுஅயல் பரக்கும் மருதந் தழீஇக்

 
 

            குன்றயல் பரந்த குளிர்கொள் அருவி
            மறுவின் மானவர் மலிந்த மூதூர்
            வெறிது சேறல் விழுப்பம் அன்றெனக்
            கான வாழைத் தேனுறு கனியும்
     30     அள்ளிலைப் பலவின் முள்ளுடை அமிர்தமும்
            திரள்தாள் மாஅத்துத் தேம்படு கனியும்
            வரைதாழ் தேனொடு உகாய்விரை சூழ்ந்து
            மணி முத்து மணிபெற வரன்றிப்
            பணிவில் பாக்கம் பயங்கொண்டு கவரா
     35     நிறைந்துவந்து இழிதரும் நீங்காச் செல்வமொடு

 
 

            சிறந்த சீர்த்திக் குறிஞ்சி கோலிக்
            கல்லென் சும்மையொடு கார்தலை மணந்த
            முல்லை முதுதிணைச் செல்வம் எய்திப்
            பாலையும் நெய்தலும் வேலி யாகக்
     40     கோலம் எய்திக் குறையா உணவொடு
            துறக்கம் புரியும் தொல்லையின் இயன்றது
            பிறப்பற முயலும் பெரியோர் பிறந்தது
            சிறப்பிடை அறாத தேசிகம் உடையது
            மறப்பெருந் தகையது மாற்றோர் இல்லது
     45     விறற்புகழ் உடையது வீரியம் அமைந்தது

 
 

            உலகிற்கு எல்லாந் திலகம் போல்வது
            அலகை வேந்தன் ஆணை கேட்பது
            அரம்பும் அல்லலுங் கரம்பும் இல்லது
            செல்வப் பெருங்குடி சிறந்தணி பெற்றது
     50     நல்குர வாளரை நாடினும் இல்லது
            நன்பெரும் புலவர் பண்புளி பன்னிய
            புகழ்ச்சி முற்றா மகிழ்ச்சியின் மலிந்தது
            இன்னவை பிறவும் எண்ணுவரம்பு இகந்த
            மன்பெருஞ் சிறப்பின் மகதநன் னாடு
     55     சென்றுசார்ந் தனரால் செம்மலொடு ஒருங்கெனும்