6. பதுமாபதியைக்கண்டது

 

இதன்கண்; காமன் கோட்டத்தைஅடைந்த பதுமாபதியை உதயணன் காண்டலும், அவனை அவள் காண்டலும், இருவர் மன நிலைகளும், பதுமாபதி காமன் கோயிலை வலம்வருதலும், தானம் வழங்கலும்,ஒருத்தி காமவேளை வாழ்த்திப் பாடுதலும், பதுமாபதி அரண்மனை சேர்தலும், பதுமாபதி கட்டளைஇடு்தலும் உதயணன் கூனியை வினவுதலும் அவள் விடைகூறலும், கூனி உதயணனை வினாதலும், அவன் விடைகூறுதலும் கூன்மகள் போதலும் கூறப்படும்,
 
              வாயில் புக்கபின் வையம் நிறீஇ
            ஆய்வளைத் தோளி அகம்புக்கு அருளென
            வைய வலவன் வந்தனன் குறுகிப்
            பூண்ட பாண்டியம் பூட்டுமுதல் விட்டபின்
     5      மஞ்சுவிரித்து அன்ன வைய வாயில்
            கஞ்சிகை கதுமெனக் கடுவளி எடுப்ப
            வெண்முகில் பிறழும் மின்னென நுடங்கித்
            தன்னொளி சுடரும் தையலை அவ்வழிக்
 
              குறுஞ்சினைப் புன்னை நறுந்தாது ஆடிக்
     10      கருங்குயில் சேவல் தன்நிறம் கரந்தெனக்
            குன்றிச் செங்கண் இன்துணைப் பேடை
            உணர்தல் செல்லாது அகல்தொறும் விரும்பிப்
            புணர்தல் உணர்வொடு பொங்குசிறை உளரி
            அளிக்குரல் அழைஇத் தெளித்துமனம் நெகிழ்க்குமக்.
     15      குயில்புணர் மகிழ்ச்சி அயிற்கூட் டமைத்த
            செஞ்சுடர் வேலின் நெஞ்சிடம் போழத்
            தன்ஞாழ் நவிற்றிய தாமரை அங்கைப்
            பொன்ஞாண் துயல்வரும் பொங்கிள வனமுலை
            மனைப்பெருங் கிழத்தியை நினைத்தனன் ஆகிக்
 
       20     செம்மை நெடுங்கண் வெம்மை உறாஅத்
            தெண்பனி உறைத்தரத் திருத்துஞ் சகலத்துப்
            பொன்பூத்தன்ன அம்பூம் பசப்பொடு
            நாண்மலர்ப் புன்னைத் தாண்முதல் பொருந்திக்
            கொடிக்குருக் கத்திக் கோலச் செந்தளிர்
     25     பிடிந்த விரலினன் ஆகிக் கெடுத்த
            அவந்திகை மாதர் அணிநலம் நசைஇக்
            கவன்றனன் இருந்த காலை அகன்று
 
              போமின் போமின் என்றுபுடை ஓட்டும்
            காவ லாளரைக் கண்டுஇவண் புகுதரும்
     30     உரிமை உண்டென அரிமான் அன்ன
            வெஞ்சின விடலை நெஞ்சுநிறை துயரமொடு
 
              நீக்கச் சென்றனென்  நெருநல் இன்றிவண்
            நீக்கப் பட்டனென் ஆதலின் நிலையா
            ஆக்கமும் கேடும் யாக்கை சார்வா
     35     ஆழிக் காலில் கீழ்மேல் வருதல்
            வாய்மை யாமென மனத்தின் நினைஇ
 
              நீங்கிய எழுந்தோன் பூங்குழை மாதரை
            வண்ணக் கஞ்சிகை வளிமுகந்து எடுத்துழிக்
            கண்னுறக் கண்டே தன்னமர் காதல்
     40     மான்நேர் நோக்கின் வாசவ தத்தை
            தானே இவளெனத் தான்தெரிந்துஉணரான்
            மந்திர விதியின் அந்த ணாளன்
            தந்தனன் மீட்டெனும் சிந்தையன் ஆகி
            உறுப்பினும் நிறத்தினும் வேற்றுமை இன்மையின்
     45     மறுத்து நோக்கும் மறத்தகை மன்னன்
 
              செஞ்சுடர் முகத்தே செருமீக் கூரிய
            வெஞ்சின வேந்தர்க்கு நஞ்சுமிழ் நாகத்துத்
            தீயோர் அன்ன திறல வாகி
            மூளையேர் முறுவல் முகிழ்த்த சின்நகை
     50     இளையோர் நெஞ்சில் தளைமுதல் பரிந்தவர்க்கு
            அமிழ்தம் பொதிந்த அருளின ஆகித்
            தலைப்பெரும் தாமரைச் செம்மலர் அன்ன
            நலத்தொடு புணர்ந்த இலக்கண நெடுங்கண்
 
              வயப்படல் உற்று வயங்கிழை மாதர்
     55     தானும் கதுமென நேர்முகம் நோக்க
            நெஞ்சிறை கொளீஇய நிறைஅமை நெடுந்தாழ்
            வெந்தொழில் காம வேட்கை திறப்பத்
            திண்பொறி கலங்கி திறல்வேறு ஆகி   
            வேலை எல்லை மீதூர்ந்து இரண்டு
     60     கோலப் பெருங்கடல் கூடி யாங்கும்
 
              இசைந்த வனப்பின் ஏயர் மகன்கும்
            பசைந்த காதல் பதுமா பதிக்கும்
            யாப்புறு பால்வகை நீப்புறவு இன்றிப்
            பிறப்புவழிக் கேண்மையின் சிறப்புவழி வந்த
     65     காமப் பெருங்கடல் கண்உறக் கலங்கி
            நிறைமதி எல்லைத் துறைஇகந்து ஊர்தர
 
              நன்நகர் கொண்ட தன்அமர் விழவினுள்
            கரும்புடைச் செல்வன் விரும்புபு தோன்றித்
            தன்நலங் கதுமெனக் காட்டி யென்னகத்
     70     திருநிறை அளத்தல் கருதிய தொன்றுகொல்
            அந்தண வடிவொடு வந்துஇவண் தோன்றி
            மேவன நுகர்தற்கு மாயைபின் இழிதரும்
            தேவ குமரன் கொல்இவன் தெரியேன்
            யாவன்ஆயினும் ஆக மற்றென்
     75     காவல் நெஞ்சம் கட்டழித் தனன்என
            வெஞ்சின விடலையொடு நெஞ்சுமா றாடி
 
              உலைப்பருந் தானை உதயண குமரற்கு
            இலைக்கொழுந்து குயின்ற எழில்வளைப் பணைத்தோள்
            உரிய வாயினன் உணர்மிஎன்றுதன்
     80     அரிமதர் நெடுங்கண் அயல்நின் றோர்க்கும்
            அறியக் கூறுதல் அமர்ந்தன போல
            நெறியில் றிரியா நிமிர்ந்துசென்று ஆட
 
              வளங்கெழுன் மாவின் இளந்தளிர் அன்ன
            நயத்தகு மேனியும் நல்லோர் நாடிய
     85     பயப்புள் ளுறுத்த.படியிற்று ஆகக்
            கைவரை நில்லாப் பையுள் ஒடுக்கி
            உட்கும் நாணும் ஒருங்குவந்து அடைதர
            நட்புடைத் தோழி நண்ணுவனள் இறைஞ்ச
            மேதகு வையத்தின் மெல்லென இழிந்து
     90     தாதுகு புனைமலர்த் தண்பூங் காவினுள்
            சூடக முன்கைச் சுடர்க்குழை மகளிரொடு
            ஆடுதல்ஆனா அவாவொடு நீங்கி
 
              வனப்பெனப் படூஉந் தெய்வம் தனக்கோர்
            உருவுகொண் டதுபோல் திருவிழை சுடரத்
     95     தன்அமர் தோழி தம்புறத்து அசைஇ
            அன்னம் நாண அண்ணலைக் கவற்றாப்
            பொன்அரிக் கிண்கிணி புடைபெயர்ந்து அரற்ற
            அரிச்சா லேகத்து அறைபல பயின்ற
            திருக்கிளர் மாடம் சேர்ந்துவலம் கொண்டு
 
       100     கழிபெரும் சிறப்பின் கன்னி மகளிர்
            அழியும் தானம் அவ்விடத்து அருளி
            நான்முகன் மகளிர் நூன்முதல் கிளந்த
            ஒழுக்கில் திரியாள் ளுறுபொருள் வேண்டும்
            வழுக்கா அந்தணர் வருக யாவரும்
     105     விலக்கவும் நீக்கவும் பெறீஇர் என்றுதன்
            தலைத்தாள் முதியர்க்குத் தானே கூறி
            நோன்புமுதல் தொடங்கித் தேங்கமழ் கோதை
            தலைநாள் தானம் தக்கவை அளித்தலில்            
 
              பலநாளள் நோற்ற பயனுண்டு எனினே
     110     வளமையும் வனப்பும் வண்மையும் திறலும்
            இளமையும் விச்சையும் என்றிவை பிறவும்
            இன்பக் கிழமையும் மன்பேர் உலகினுள்
            யாவர்க்கு ஆயினும் அடையும் அடையினும்
            வார்கவுள் யானை வணக்குதற்கு இயைந்த
     115     வீணை விச்சையொடு விழுக்குடிப் பிறவுஅரிது
 
              விழுக்குடிப் பிறந்துஇவ் வீறோடு விளங்கிய
            வழுக்கா மரபின் வத்தவர் பெருமகன்
            உதயண குமரனொடு ஒப்போன் மற்றுஇவள்
            புதைபூண் வனமுலைப் போகம் பெறுகென
     120     மரபறி மகடூஉப் பரவினள் பாட
            அன்ன னாக என்நயந் தோன்எனப்
            பொன்னிழை மாதர் தன்மனத்து இழைப்பத்
            தலைநாள் தானம் இலக்கணத்து இயைந்தபின்
 
              மாயிரு ஞாலத்து மன்னவன் மகளே
     125     ஞாயிறு படாமல் கோயில் புகுதல்
            இன்றை நன்னாட்கு - இயல்புமற்று அறிகெனத்
            தொன்றியன் மகளிர் தொழுதனர் கூறச்
 
              செய்வதை அறியலள் வெய்துயிர்ப்பு அளைஇத்
            தெய்வத் தானம் புல்லென வையத்து
     130     இலங்கிழை மாதர் ஏற்ற ஏறிப்
            பொலந்தொடி மகளிர் பொலிவொடு சூழ
            வந்த பொழுதில் கதுமென நோக்கிய
            அந்த ணாளற்கு அணிநலன் ஒழியப்
            பெருநகர் புகழத் திருநகர் புக்கபின்
 
       135     இகல்அடு தானை இறைமீக்கூறிய
            தவலரும் வென்றித் தருசகன் தங்கை
            கொங்கலர் கோதை நங்கைநம் பெருமகள்
            புகழ்தற்கு ஆகாப் பொருவில் கோலத்துப்
            பவழச் செவ்வாய்ப் பதுமா பதிதன்
     140     கன்னி நோன்பின் கடைமுடிவு இதனொடு
            முன்னி முற்றும்இன்னது ஈமென
 
              நச்சுவனர் வரூஉ நான்மறை யாளரை
            அச்சங் கொள்ள அகற்றன்மின் என்றுதன்
            ஆணைவைத்து அகன்றனள் யாணர் அமைத்தஇஃது
     145     அறிமின் நீரெனப் பொறியமை புதவின்
            கடைமுதல் வாயில் கடுங்காப்பு இளையரை
            அடைமுது மாக்கள் அமைத்துஅகன்று அமையின்
 
              கண்டோர் பெயர்த்துக் காண்டல் உறூஉம்
            தண்டா வனப்பின் தகைமையள் ஆகிய
     150     கன்னி ஆகம் கலக்கப் பெறீஇயர்எனப்
            பன்மலர்க் காவினுள் பகலு மிரவும்
            உறையுள் எய்திய நிறையுடை நீர்மை
            இளையோன் அமைந்த காலை மற்றுத்தன்
            தளைஅவிழ் கோதைத் தையல் இவளெனும்
     155     மையல் உள்ளமொடு பைதல்எய்தி
 
              மன்னவன் மடமகள் பின்ஒழிந்து இறக்கும்
            ஏந்திள வனமுலை எழில்வளைப் பணைத்தோள் 
            மாந்தளிர் மேனி மடமான் நோக்கின்
            ஆய்ந்த கோலத்து அயிரா பதியெனும்
     160     கூன்மட மகள்தனைக் கோமகன் குறுகி
            யாவள்இந் நங்கை யாதுஇவள் மெய்ப்பெயர்
            காவலர் கொள்ளுங் காவினுள் வந்த
            காரணம் என்னை கருமம்உண்டு எனினும்
            கூறினை செல்லின் குற்றம்இல்லென
     165     மாறடு குருசில் வேறிடை வினவ
 
              அந்த ணாளன் அரும்பொருள் நசையின்
            வந்தனன் என்னும் வலிப்பினளாகி
            இண்பம் கலந்த இந்நகர்க்கு இறைவன்
            தன்பெரு மாட்டி தலைப்பெருந் தேவி
     170     சிதைவில் கற்பின் சிவமதி என்னும்
            பேருடை மாதர்க்கு ஓரிடம் பிறந்த
            உதையை யோடை என்னும் ஒண்டொடி
            காசி அரசன் காதலி மற்றவள்
            ஆசின்று பயந்த அணியிழைக் குறுமகள்
 
       175    மதுநாறு தெரியல் மகளிருள் பொலிந்த
           பதுமா பதிஎனப் பகர்ந்த பேரினள்
           துன்அரும் சிறப்பின் கன்னி தானும்
           வயந்தக் கிழவற்கு நயந்துநகர் கொண்ட
           விழவணி நாளகத்து அழகணி காட்டி
     180    எழுநாள் கழிந்த வழிநாள் காலை
           வேதியர்க்கு எல்லாம் வேண்டுவ கொடுக்கும்
           போதல் வேண்டா பொருள்குறை உண்டெனின்
           ஏதமில்லைஇவண் இராமின்என்று
 
 

            இந்நாட் டார்அலிர் ஏனையர் போல்வீர்
     185     எந்நாட்டு எவ்வூர் எக்கோத் திரத்தீர்
            யாமும் நும்மை அறியப் போமோ
            வாய்மை யாக மறையாது உரைமின்என்று
            ஏயர் குருசிலைத் தூய்மொழி வினவ

 
              நன்றான் மற்றது கேளாய் நன்னுதல்
     190     கண்டார் புகழும் கலக்கமில் சிறப்பின்
            காந்தாரம் என்னும் மாய்ந்த நாட்டகத்து
            ஈண்டிய பல்புகழ் இரத்தின புரத்துள்
            மாண்ட வேள்வி மந்திர முத்தீச்
            சாண்டியன் என்னும் சால்புடை ஒழுக்கின்
     195     ஆய்ந்த நெஞ்சத்து அந்தணன் மகன்என்
 
              மாணகன் என்பேன் மற்றுஇந் நாடு
            காணல் உறலொடு காதலில் போந்தனென்
            என்றது சொல்ல நன்றென லிரும்பி
            ஆய்புகழ் அண்ணலை அறிந்தனள் ஆகிச்
     200    சேயிழைக் கூன்மகள் சென்றனள் விரைந்தென்