9.கண்ணி தடுமாறியது

 

இதன்கண்: தம்முள் காதல் கொண்ட உதயணனும் பதுமாபதியும் ஒருவர் மாலையை ஒருவர் கைக்கொண்டு மகிழ்ந்த செய்தி கூறப்படும்,
 
 

            மன்னவன் கூற மற்றது நன்றென
            இன்னுயிர்த் தோழர் இயைந்தனர் போகித்
            தண்அரும் பினமலர் தகைபெரிது உடைய
            ஒண்ணிறத் தளிரோடு ஊழ்பட விரீஇக்
     5      கண்விழவு தருஉங் கண்ணி கட்டி

 
              அன்ன மென்நடை அரிவை காணப்
            புன்னையும் ஞாழலும் மகிழும் பொருந்திய
            துன்னரும் பொதும்பில் தொத்திடைத் துளங்கத்
            தளிர்தரு கண்ணி தம்முள் அறிய
     10     ஒளிபெற வைத்துஅவண் ஒளித்த பின்னர்
 
              வளங்கெழு வாழை இளஞ்சுருள் வாங்கித்
            தாமரைப் பொய்கையுந் தண்பூங் கேணியும்
            காமன் கோட்டமுங் கடிநகர் விழவும்
            மாமலர்க் கோதை மடமொழி யூரும்
     15      வையக் கஞ்சிகை வளிமுகந்து எடுக்கஅத்
            தெய்வப் பாவையைத் தேனிமிர் புன்னைத்
            தாள்முதல் பொருந்தித் தான்அவள் கண்டதும்
            காமர் நெடுங்கண் கலந்த காமமும்
            இன்னவை பிறவுந் தன்முத லாக
     20      உள்ளம் பிணிப்ப உகிரில் பொறித்து
 
              வள்ளி்தழ்க் கண்ணி வளம்பெறச் சூட
            அரும்பினும் போதினும் பெருந்தண் மலரினும்
            முறியினும் இலையினுஞ் செறியக் கட்டி
            ஒருங்குபுறம் புதைஇ உதயண குமரனும்
     25     திருந்திழைத் தோளி விரும்புபு நோக்கச்
            சிதர்சிறை வண்டின் செவ்வழி புணர்ந்த
            ததரிதழ் ஞாழல் தாழ்சினைத் தூக்கிப்
            பைந்தாள் பொருந்திச் செஞ்சாந்து உதிரத்
            திருமலி அகலஞ் சேர முயங்கிப்
     30     பொருமுரண் அண்ணலும் போந்த பொழுதின்
 
              ஆடுகொம்பு அன்ன அம்மென் மருங்குல்
            பாடகச் சீறடிப் பல்வளை மகளிரைப்
            பக்கம் நீக்கிப் பைந்தொடிக் கோமாள்
            நற்பூம் பொய்கை புக்குவிளை யாடும்
     35     உள்ளம் ஊர்தர ஒழிநிலத்து ஓங்கிக்
 
              கொடுக்குஞ் சீர்க்கமும் அடுத்தூழ் வளைஇய
            முத்த மாலையும் வித்தக மாகிய
            உளிப்பெருங் கம்மமும் முகத்துமுதல் உறீஇத்
            திண்தூண் சதுரங் கொண்ட எல்லையுள்
     40     சீயமும் ஏறுந் திருவும் பொய்கையும்
            சேஇதழ் மலரும் காம வல்லியும்
            மேயினர் விழைய மேதகப் புணர்ந்த
            கோலக் கோயுள் கொண்டுநிறை அமைத்த
            சூடமை சாந்து மீடறிந்து புலைந்த
     45     மதங்கமழ் நறுமலர்ச் சதங்கைத் தாமமும்
            சாலக் கொள்கெனத் தன்வயிற் றிரியாக்
            கோலக் கூன்மகட்கு அறியக் கூறிச்
 
              செவிலித் தாயுந் தவ்வையும் ஆயமும்
            அகலப் போகிய அமைய நோக்கி
     50     அன்னம் போல மென்மெல ஒதுங்கி
            நன்முலைத் தீம்பால் தம்மனை கொடுப்ப
            ஒருங்குண் டாடிய கருங்கண் மதிமுகத்து
            அந்த ணாட்டி யாப்பியாய் இனிஎனும்
            மந்திரத் தோழியொடு மணங்கமழ் காவின்
     55     அணித்தழை மகளிர் அருங்கடிக்கு அமைந்த
            மணிச்சுதைப் படுகால் மருங்கணி பெற்ற
            அளப்பருங் குட்டத்து ஆழ்ந்த பொய்கைத்
            தாள்கொள் எல்லையுள் வாள்கண் சிவப்பக்
 
              தாள்கொள் எல்லையுள் வாள்கண் சிவப்பக்
            குளித்துங் குடைந்துந் திளைத்து விளையாடிக்
     60     கூட்டமை நறும்புகை ஊட்டமைத்து இயற்றிக்
            கண்எழில் கலிங்கந் திண்ணென அசைந்துப்
            பாரம் ஆகி நீரசைந்து ஒசிந்த
            காரிருங் கூந்தல் நீரறப் புலர்த்தி
            ஏற்ப முடித்துப் பூப்பிறிது அணியாள்
 
              ஏற்ப முடித்துப் பூப்பிறிது அணியாள்
     65     முத்தப் பேரணி முழுக்கலம் ஒழித்துச்
            சிப்பப் பூணும் செம்பொன் கடிப்பும்
            ஏக வல்லியும் ஏற்பன அணிந்து
            தாமரை எதிர்போது வாங்கி மற்றுத்தன்
            காமர் செவ்வியின் காய்நலம் பெற்ற
     70     நாம மோதிரம் தாள்முதற் செறித்துப்
            புனைநறுஞ் சாந்தமும் துணைமலர்ப் பிணையலும்
            மனநிறை கலக்கிய கனல்புரை நோக்கத்துப்
            பொன்வரை மார்பன் என்னோய் அகலக்
            கொள்ளின் நன்றென வள்ளிதழ்க் கோதை
 
              கொள்ளின் நன்றென வள்ளிதழ்க் கோதை
     75     மன்னவன் வைத்த சின்மென் போதுடன்
            நறுமலர் கமழ்சினை செறியச் சேர்த்தி
            நெடுந்தோள் செல்லல் தீரச் சிறந்தவன்
            குறுந்தார் அகவயின் கூடுபு முயங்கிக்
            குவிமுலைச் சாந்தம் நவிர்முதற் பொறித்தே
     80     இழுமென் காவினது இயல்புஞ் செல்வமும்
            கொழுமலர்த் தடங்கணின் குலாஅய் நோக்க
            நண்ணியோர் முன்னர்க் கண்ணியது மறைத்து
            வண்ணமுகிழும்மலருந் தளிரும்
            நண்ணி ஈன்ற நமக்கெனக் கரையா
     85     அரும்பெறல் தோழியும் அகன்ற செவ்வியுள்
 
              விரும்புவனள் ஆகி விண்ணவர் மருள
            வத்தவர் கோமான் வித்தகம் புனைந்த
            இலைவினைக் கம்மத்துப் பலவினை கண்டே
            தன்முத லாகலின் சின்னகை முறுவலொடு
     90     பொற்பூண் முலைமிசை அப்புபு தடாஅக்
            கண்ணி கொண்டுதன் சென்னி சேர்த்தி
            ஒருங்குகலந் தனள்போல் திருந்தொளி திகழ்ந்து
            பசப்புமீது அடர்ந்து மிகப்பொலிந்து இலங்கத்
 
              தன்னமர் தோழியும் பின்னமர்ந்து எய்தி
     95     நீயார் நங்கை நின்னே போலும்எம்
            சேயான் தங்கை செல்வப் பாவை
            மாயோன் தன்னை மலர்த்தகைக் காவினுள்
            இன்னினிக் கெடுத்தேன் அன்னவள் கூறிய
            துன்னரும் தோட்டத்தில் துளங்குவனள் ஆகி
     100     வேறுபட் டனள்என விம்முவனள் இறைஞ்சிக்
            கூறாது நாணிய குறிப்புநனி நோக்கி
            நின்கண் கிடந்த நீரணி ஏஎர்
            என்கண் கவற்றிற்று என்றரோடு இயலித்
 
              தன்னகர் புக்க பின்னர்த் தோழரொடு
     105     மன்ன குமரனும் வந்தவள் குறுகத்
            தண்பூங் கண்ணிகொண்டதன் தாள்முதல்
            ஒண்பூஞ் சாந்தின் உண்பொறி ஒற்றிப்
            போயினள் புரவலன் பூந்தார் மார்பிற்கு
            ஆகிய பாலள் இவளென் றறிந்தே
     110     கூறிய கிளவிக்கு ஒத்தது இன்றென
            உறுபுகழ் நண்பின் உருமண் ணுவாஅவர்க்கு
            அறியக் கூற அங்கை மலர்த்தா
            வியந்த மனத்தர் ஆகி நிகழ்ந்ததற்கு
            யாப்புறு கருமம் ஆராய்ந்து இருந்துழி
 
       115     நீப்பகங் காதல் நிறைந்துடன் ஆடல்
            பண்புடைத்து என்றத் தண்தழை அணிந்த
            காவின் அத்தம் மேவினன் ஆகித்
            தேர்வனன் திரிவுழி வார்தளிர் பொதுனிய
            அருகுசிறை மருங்கின் ஒருமகள் வைத்த
     120     புதுமலர்ப் பிணையலும் புனைநறுஞ் சாந்தமும்
            கதிர்மணி ஆழியுங் கண்டனன் ஆகி
            வலிகெழு மொய்ம்பின் வயந்தக குமரன்
            ஒலிகெழு தானை உதயணற்கு உய்ப்ப           
 
              அரும்பெறல் சூழ்ச்சி அவனையும் பின்னிணைப்
     125     பெகந்திறல் அவரையும் பெற்றோன் போல
            அன்புபுரி பாவை ஆடிய பொய்கையுள்
            நம்புபுரி மன்னனும் நயந்தனன் நாடி
            உடையும் அடிசிலும் உருமண் ணுவாவிற்குக்
            கடனா வைத்தலின் கைபுனைந்து இயற்றி
     130     அகன்மடி அவன்தான் அமர்ந்து கொடுப்ப
 
              வாங்கினன் உடுத்தப் பூந்தண் சாந்தம்
            எழுஉறழ் தோளும் அகலமும் எழுதிப்
            புனைஇருங் குஞ்சித் தோட்டுக் கிடையே
            துணைமலர்ப் பிணையல் தோன்றச் சூடிச்
     135     சுடர்மணி ஆழி படைபயின்று பலித்த
            செறிவிரல் அங்கையின் மறைவுகொள வைத்துக்
            கழுநீர் நறும்போது உளர்த்துபு பிடித்து
            மறங்கெழு வேந்தனும் மம்மர் தீரப்
            போந்த பொழுதின் ஏந்துநிலை மாடத்துப்
 
              போந்த பொழுதின் ஏந்துநிலை மாடத்துப்
     140     பக்கம் நின்ற பொற்பூங் கோதையும்
            கண்உற நோக்கிச் சின்நகை முகத்தினள்
            கண்ணில் கூட்டமும் அன்றி நம்முள்
            கண்ணிய மாயினம் கவலல் என்றுதன்
            நெஞ்சின் அகத்தே அஞ்சில மிழற்றிக்
     145     குன்றாக் கோயில் சென்றவள் சேர்ந்தபின்
 
              தனக்கவள் உரிமை பூண்டமை தமர்களைச்
            சினப்போர் மதலை செவ்வன் தேற்றிப்
            பள்ளி கொண்ட நள்ளிருள் யாமத்துப்
            போரடு தறுகண் பொருந்தலும் பொருக்கென
 
              போரடு தறுகண் பொருந்தலும் பொருக்கென
     150     நீருடை வரைப்பின் நெடுமொழி நிறீஇய
            பிரியாப் பெருக்கத்துப் பிரச்சோ தனன்மகள்
            அரியார் தடங்கண் அதிநா கரிகி
            மணியிருங் கூந்தல் மாசுகண் புதைப்பப்
            பிணியொடு பின்னி அணிபெறத் தாழ்ந்து
     155     புல்லெனக் கிடந்த புறத்தள் பொள்ளென
            நனவிற் போலக் காதலன் முகத்தே
 
              கனவிற் தோன்றக் காளையும் லிரும்பி
            மாசில் கற்பின் வாசவ தத்தாய்
            வன்க ணாளனேன் புன்கண் தீர
     160     வந்தனை யோஎன வாய்திறந்து அரற்றப்
 
              பைந்தளிர்க் கோதை பைஎன மிழற்றி
            ஏதிலன் நன்னாட்டு என்துறந்து இறந்தனை
            காதலர் போலுங் கட்டுரை ஒழிகெனக்
 
              குறுகாள் அகல்தொறும் மறுகுபு மயங்கி
     165     நின்பெயர்ப் பாளன் இப்பதி உளனெனக்
            கல்பயில் பழுவங் கடந்தியான் வந்தனென்
            வெகுளல் நீயெனத் தவளைஅம் கிண்கிணிச்
            சேவடி சேர்ந்து செறியப் பற்றி
            வென்றுஅடு குருசில் வீழ்ந்தனன் இரப்ப
 
       170     மதுநாறு தெரியல் மகதவன் தங்கை
            பதுமா பதிவயின் பசைந்தவள் வைத்த
            கோதையும் சாந்தும் கொண்டணிந் தனைஎன
            மாதர்த் தேவி மறுத்து நீங்கத்
 
              தண்மலர்ப் படலைத் தருசகன் தங்கை
     175     பன்மலர்க் கோதைப் பதுமா பதிஎனும்
            பேருடை மாதர் உளன்மற்று என்பது
            நேரிழை அரிவை நின்வாய்க் கேட்டனென்
            இன்னவும் பிறவும் கூறி மற்றென்
            நன்னர் நெஞ்சம் நாடுவை நீயெனப்
     180     பின்னரும் மிக்குப் பெருமகன் இரப்ப
            மடங்கெழு மாதர் மறைந்தனள் நீங்கக்
            கடுங்கதிர்க் கனலி கால்சீ்த்து எழுதர
            விடிந்தது மாதோ வியலிருள் விரைந்தென்.