12 அமாத்தியர் ஒடுங்கியது

 

இதன்கண்: தருசகனுடைய விருப்பத்தை வாயிலோனால் அறிந்த உதயணன் நன்நீர்ஊற்றும் நிதிப் புதையலும் உள்ள இடங்களை அவனுக்குக் காட்டி அவனால் பெரிதும் மதிக்கப்பட்டு அரண்மனையிலேயே தங்கிஇருந்தமையும் உருமண்னுவா முதலிய அமைச்சர்கள் அந்நகரத்தில் வேறு வேறு தொழில் செய்வோராய்ப் பிறர் காணாதபடி அவ்உதயணனைப் பாதுகாத்துக் கொண்டு அந்நகரின்கண் கரந்து உறைந்தமையும் பிறவும் கூறப்படும்.
 
              . .. . . . . ... ... . . .. . . .. . ... ... . .வணி தோங்கி
         ஆரணங்கு ஆகிய அகல்விசும்பு உகக்கும்
         தோரண வாயில் துன்னினன் ஆகி
         அருமொழி உணரும் பெருமொழி ஆளனைத்
 5       தாக்கரும் தானைத் தருசக குமரன்
         வேட்கும் விச்சை யாதுஎன வினவப
 
           .......................................................
         பயந்தோன் படைத்த படைப்பரும் வெறுக்கை
         இருந்துழி இசையான் இகந்தயர்த்து ஒழிந்தனன்
         அன்னவை அறிநர் உளர்எனின்அவர்கட்கு
 10       இன்னுயிர் ஆயினும்ஈவன் அவனென
         மன்னவன் மனத்ததை எல்லாம் மதித்து
         நன்மூ தாளன் பன்னினன் மொழிய       
 
          வாரி மருங்கற வற்றினும் அகவயின்
        நீர்வளஞ் சுருங்கா நெற்றித் தாரைக்
 15      கூவலும் பொய்கையுங் கோயில் வட்டத்து
        எவ்வழி வேண்டினும் அவ்வழிக் காட்டும்
        ஞான வல்லியத்து அரும்பொருள் நுனித்தனென
 
          ஏனை நூற்கும் ஏதிலன் அல்லேன்
        கரந்துழி அறிய அருங்கல வெறுக்கை
 20     வைத்துழிக் காட்டும் வாய்மொழி விச்சை
        கற்றுக்கை போகிக் காணவும் பட்டது
        கொற்றவன் இவற்றுக் குறைஒன்று உடையது
        காணவும் அமையும் காணான் ஆயினும்
        காவ லாளனைக் கண்படல் உறுவென்
 25     காட்டுதல் குறையெனக் கேட்டவன் விரும்பி
        நல்லவை நாப்பண் செல்வனைச் சேர்ந்தவன்
        வல்லவை எல்லாம் வலிதின் கூறக்
 
          கற்றோர்க் காண்டல் ஆகுங் காவலின்
        பெற்ற பயனென வெற்ற வேந்தனும்
 30     காண்பது விரும்பி மாண்பொடு புணர்ந்த
        பேரத் தாணிபிரிந்த பின்றை
        நேரத் தாணி நிறைமையில் காட்டலின்
        பகையறு குருசிலைப்பண்டுபயின் றன்ன
        உவகை உள்ளமொடு ஒழுக்க மறாது
  35    கண்ணினுங் கையினும் அன்றிநாவின்
        இன்னுழி  இருக்கென இருந்த பின்றைக்
 
          கற்றவை எல்லாந் தெற்றென  வினாஅய்த்
        தானே கேட்டு வியந்துதலை துளக்கி
        ஆனாக் கட்டுரை கழிந்தபின் மேனாள்
 40     தள்ளா வென்றித் தம்இறை வைத்த
        விள்ளா விழுப்பொருள் உள்வழி உணரா
        மன்னவன் மற்றிது நின்னின் எய்துவேன்
        கற்றறி விச்சையில் காட்டுதல் குறைஎன      
 
          உற்றனன் உரைப்ப உள்வழித் தெரிந்து
 45     தான்வைத் தனன்போல் காட்டலின் தருசகன்
        ஆனாக் காதலொடு ஆருயிர் அன்ன
        தோழ னாகித் தோன்றா தோற்றும்
        ஞானம் நவின்ற நல்லோன் இவனென
        எனைத்துஇவன் வேண்டினும்ஈவன் என்றுதன்
 50     கணக்குவினை யாளரொடு கரணம் ஒற்றி
        அகத்தே உறைகென அமைத்த பின்னர்
 
          எப்பான் மருங்கினும் அப்பால் நாடி
        அகத்துநீ ருடைய அதனது மாட்சி
        மிகுத்தநூல் வகையின் மேவரக் காட்டக்
 55     கன்னியங் கடிநகர் காண்அவா உடைய
        இளமரக் காவினுள் வளமைத் தாய
        நீர்நலன் உணர்ந்து சீர்நலக் குருசிற்கு
        எழுகோல் எல்லையுள் எழுமிது நீர்மற்று
        அன்றியும் அதனது நன்றி நாடின
 
    60    நாவிற்கும் இனிதாய்த் தீதற எறியும்
        தன்மையும் நுண்மையும் தமக்குஇணை ஆவன
        தெண்ணீர் ரெவ்வழித் தேரினும் இல்லை
        புகழ்வரை மார்பின் பூந்தார் அண்ணல்
        அகழும் பொழுதில் நிகழ்வ கேண்மதி
 
   65    இருமுழத்து எல்லையுள் வரிமுகம் பொறித்த
       பொன்நிறத் தேரை பொதரும் பின்னர்
        மும்முழத்து எல்லையுள் தெண்ணிறங் குயின்றது
        தோற்றம் இனிதாய் நாற்றம் இன்னாப்
        பருமணல் உண்டது பண்ணுநர் வீழ
 70     உட்காழ் ஈன்ற ஒருகோல் அரையின்
        எட்பூ நிறத்தொடு கண்கா முறுத்தும்
        விளங்கறல் வெள்ளியின் வீசுறும் என்றதன்
        அகம்புக் கனன்போல் அகன்ற ஞானத்தின்
        உண்ணெறிக் கருத்தின் நண்ணிய தாகிய
 75     மண்ணின் சுவையும் இன்னதென்று ஒழியாது
        உரைப்பக் கேட்டே ஓங்கிய பெரும்புகழ்த்     
 
          திருப்பேர் உலகம் பெற்றோன் போல
        அகழ்வினை யாளரை அவ்வயின் தரீஇ
        இகழ்வில் அத்தொழில் இறைவன் ஏவப்
 
   80     பெருமண் வேந்தனைப் பிழைப்பின்று ஓம்புதற்கு
        உருமண் ணுவாவும் உள்ளகத் தொடுங்க
        வாய்மொழி இசைச்சனும் வயந்தக குமரனும்
        தேமொழி மாதர் தாய்முதற் கோயிலுள்
        தரும நூலும் தந்துரை கதையும்
 85     பெருமுது கிளவியொடு பிறவும் பயிற்றி
        நங்கை  விழையும் நாளணி கலங்கள்
        கொங்கணி மலரில் கூட்டுவனர் உய்த்துச்
        சென்றுவந்து ஆடல் செய்வது வலிப்பப்
        பிறவுறு தொழிலொடு மறவோர் எல்லாம்
 90     ஆய்புகழ் அரசனை அற்றப் படாமல்
        காவல்புரிந் தனரால் கடிமனைக் கரந்தென்.