14. நலன் ஆராய்ச்சி

 

இதன்கண்; கன்னி மாடத்துஇருந்த உதயணமன்னன் தோழி எழுதித் தந்த அரண்மனை வடிவம் முதலியவற்றைக் கண்டு தன்னுள் நினைத்தலும், பதுமாபதி செவ்வி அரியள்ஆதலும்,  கட்டில் வருணனையும், பாக்குவகை வருணனையும், உதயணன் ஓவியத்தைக்  கண்டு  வியத்தலும்,  பதுமாபதி  ஊடலும்,  உதயணன் ஊடல்  தவிர்த்தலும்,  பதுமாபதி யாப்பியாயினிக்குக் கூறுதலும்,யாப்பியாயினி  உதயணனை  வினாதலும்,  அவன் விடையும், உதயணனும்  யாப்பியாயினியும்  உரையாடலும், மாலைக் காலவரவும்,  உதயணன் பாடிக்கொண்டு யாழ் வாசித்தலும்,  உதயணனுடைய இசைச் சிறப்பும், பதுமாபதி வியத்தலும் கூறப்படும்.
 
 

         மதலை மாடத்து மடமொழி மாதரொடு
         உதயண குமரன் ஒடுங்கிய உவகையன்
         விண்உறை தேவரும் விழையும் போகத்துப்
         பெண்உறை உலகம் பெற்றோன் போலவும்

 
     5     நோக்கருங் கதிரவன் நீக்கம் பார்த்துப் 
         பைங்கதிர் விரிக்கும் பனிமதிக் கிழவன்
         அங்கண் ஞாலத்து அளவை ஆகிய
         பன்நாள் பக்கஞ் செல்லாது சின்நாள்
         வெண்முக நிலாஒளி சுருங்க மெல்என
   10     உண்மகிழ் உரோணியொடு ஒளித்தது போலவும்
         திகழ்மணி மார்பன் அகநகர் ஒடுங்கப்
         பொருள்புரி அமைச்சர் புறநகர் கரப்புழி      
 
           இருள்அறு நுண்மதித் தோழியை எழுதெனக்
         கோயில் வட்டமும் கோணப் புரிசையும்
   15     வாயில் மாடமும் வஞ்சப் பூமியும்
         இலவந் திகையும் இளமரக் காவும்
         கலவம் புகலும் கான்கெழு சோலையும்
         உரிமைப் பள்ளியும் அருமைக் காப்பின்
         படைக்கலக் கொட்டிலும் புடைக்கொட் டாரமும்
 
     20    நடைப்பெரு வாயிலும் முடைக்குறும் புழையும்
         அவைமண் டபமும் மாடுஅம் பலமும்
         வகைமாண் தெய்வம் வழிபடு தானமும்
         குதிரைப் பந்தியும் அதிர்தல் ஆனா
         யானைத் தானமும் தானைச் சேக்கையும்
   25    எயிலது அகற்றமும் மயில்விளை யாடும்
         சுதைவெண் குன்றமும் புதையிருள் தானமும்
         உடையன எல்லாம் உள்வுழி உணர்ந்து
         தெளிதல் செல்லாத் தெவ்வன் இவனெனின்
         அளியியல் செங்கோல் அரசுமுதல் வவ்வலும்
   30    எளிதுஎனக்கு என்னும் எண்ணினன் ஆகிப்
 
           பெண்பால் சூழ்ச்சியின் பிழைப்புப் பலவெனும்
         நுண்பான் நூல்வழி நன்கனம் நாடின்
         ஏதம் இல்லை இதுஎனத் தேறி
         மாதர் மாட்டு மகிழ்ச்சியொடு தெளிதல்
   35    நீதி அன்றென நெஞ்சத்து அடக்கிச்
         செருக்கிய நெடுங்கண் செவ்வி பெற்றாங்கு
         உரத்தகை அண்ணல் உறைவது வலிப்பத்
 
           தவ்வை ஆயினுந் தாயே ஆயினும்
         செவ்வி அறியார் சென்றுமெய் சாரின்
   40    காட்டக் காணாள் கதம்பாடு ஏற்றி
         வாள்கண் பாவை மருவற்கு இன்னாக்
         காட்சியள் ஆகிக் கருதுவது எதுவெனின்
 
           வீயா நண்பின் வேத மகள்உழை
         யாழும் பாட்டும் அவைதுறை போகக்
   45    கற்றல் வேண்டும் இனியெனக் கற்பதற்கு
         அன்புடை அருள்மொழி அடைந்தோர் உவப்ப
         நன்பல பயிற்றிய நாவினள் ஆகி
         அமிழ்தின் அன்ன அறுசுவை அடிசிலும்
         இவணே வருக இன்று முதலெனத்
   50    தமர்வயின் நேய தன்மையள் ஆகி  
 
           மழைஅயா உயிர்க்கும் வான்தோய் சென்னி
         இழைஅணி எழுநிலை மாடத்து உயர்அறை
         வாள்வரி வயமான் மூரி நிமிர்வின்
         நிலைக்கால் அமைந்த நிழல்திகழ் திருமணி
   55    கயில்குரல் வளைஇய கழுத்தில் கவ்விய
         பவழ இழிகைப் பத்திக் கட்டத்துப்
         பட்டுநிணர் விசித்த கட்டமை கட்டிலுள்
         பொழுதிற்கு ஒத்த தொழில ஆகி
         எழுதுவினைப் பொலிந்த இழுதுறழ் மென்மைய
   60    முறைமையின் அடுத்த குறைவில் கோலமொடு
         நிரப்பம் எய்திய நேர்பூம் பொங்கணைப்
         பரப்பிற்கு ஒத்த பாய்கால் பிணைஇ
         அரக்குவினைக் கம்மத்து அணிநிலைத் திரள்காழ்
         ஒத்த ஊசி குத்துமுறை கோத்த
   65    பவழ மாலையும் பன்மணித் தாமமும்
         திகழ்கதிர் முத்தின் தெரிநலக் கோவையும்
 
           வாய்முதல் தோறும் தான்முதல் அணிந்த
         அந்தண் மாலையும் அகடுதோறு அணவரப்
         பைம்பொன் புளகம் பரந்துகதிர் இமைப்ப
   70    ஐவேறு உருவின் மெய்பெறப் புனைந்த
         பொய்வகைப் பூவும் வைஎயிற்று அகல்வாய்
         மகரத் தங்கண் வகைபெறப் போழ்ந்த
         காம வல்லியும் களிறும் பிடியும்
         தேமொழிச் செவ்வாய்த் திருமகள் விரும்பும்
   75    அன்ன வீணையும் அரிமான் ஏறும்
         பன்மரக் காவும் பாவையும் பந்தியும்
         பறவையும் பிறவும் உறநிமிர்ந்து ஓவா
         நுண்ணவாப் பொலிந்த கண்ணவா உறூஉம்
         மீமிசைக் கட்டின் வாய்முதல் தாழ்ந்த
   80    வண்ணப் படாஅம் கண்ணுறக் கூட்டிப்
 
           பைங்கருங் காலிச் செங்களி அளைஇ
         நன்பகற்கு அமைந்த அந்துவர்க் காயும்
         இருங்கண் மாலைக்குப் பெரும்பழுக் காயும்
         வைகறைக்கு அமையக் கைபுனைந்து இயற்றிய
   85    இன்தேன் அளைஇய விளம்பசுங் காயும்
         பைந்தளிர் அடுக்கும் பலமுத லாகிய
         மன்பெரு வாசமொடு நன்பல அடக்கிய
         பயில்வினை அடைப்பையொடு படியகந் திருத்தி          
 
           உருவொடு புணர்ந்த உயரணை மீமிசை
   90    இருபுடை மருங்கினும் எழில்பட விரீஇ
         ஏமச் செவ்வி ஏஎர் நுகரும்
         யாமத்து எல்லையுள் மாமறைப் பேரறை
         உலாவும் முற்றத்து ஊழ்சென் றாட
         நிலாவிரி கதிர்மணி நின்று விளக்கலும்
   95    பள்ளி தன்னுள் வள்ளிதழ்க் கோதையொடு
         மன்நயம் உரைத்து நன்நலங் கவர்ந்து
 
           வித்தகர் எழுதிய சித்திரக் கொடியின்
         மொய்த்தலர் தாரோன் வைத்துநனி நோக்கிக்
         கொடியின் வகையும் கொடுந்தாள் மறியும்
  100     வடிவமை பார்வை வகுத்த வண்ணமும்
         திருத்தகை அண்ணல் விரித்துநன்கு உணர்தலின்
         மெய்பெறு விசேடம் வியந்தனன் இருப்பக்
 
           கைவளர் மாதர் கனன்றுகனன்று எழுதரும்
         காம வேகம் தான்மிகப் பெருகப்
  105     புலவி நெஞ்சமொடு கலவியுள் கலங்கிப்
         புல்லுகை நெகிழப் புணர்வுநனி வேண்டாள்
         மல்லிகைக் கோதை மறித்தனள் இருந்து்
 
           சூட்டுமுகம் திருத்தி வேட்டுநறு நீரின்
         மயிரும் இறகுஞ் செயிரறக் கழீஇக்
  110     கோன்நெய் பூசித் தூய்மையுள் நிறீஇப்
         பாலும் சோறும் வாலிதின் ஊட்டினும்
         குப்பை கிளைப்புஅறாக் கோழி போல்வர்
         மக்கள் என்று மதியோர் உரைத்ததைக்
         கண்ணில் கண்டேன் என்று கைந்நெரித்து்
 
    115     ஒண்நுதல் மாதர் உருகெழு சினத்தள்
         தம்மால் வந்த தாங்கரும் வெந்நோய்
         தம்மை நோவது அல்லது பிறரை
         என்னதும் நோவல் ஏதம் உடைத்தெனக்
 
           கருங்கேழ் உண்கண் கயலெனப் பிறழ்ந்து
  120     பெருங்கயத் தாமரைப் பெற்றிய ஆகத்
         திருநுதல் வியர்ப்பெழுந்து இருநிலத்து இழிதர
         நிலாவுறு திருமுகம் நிரந்துடன் மழுங்கிக்
         கருமயிர் இவர்ந்து காண்தகக் குலாஅய்ப்
         புருவம் பலகால் புடைபுடை பெயர்
 
    125     முத்துறழ் ஆலி தத்துவன தவழ்ந்து
         பொன்நிறக் குரும்பை தன்னிறம் அழுங்கத்
         தன்னிறங் கரப்பத் தவாஅ வெம்மையொடு
         வீழ்அனல் கடுப்ப வெய்துயிர்த்து அலைஇக்
         காதல்செய் கலங்கள் போதொடு போக்கி
  130     அந்தண் சாந்தம் ஆகத்துத் திமிர்ந்து
         பண்புரை கிளவி பையெனத் திரியக்
 
           கரும்பேர் கிளவி கதிர்முகை முறுவல்
         பெருந்தடங் கண்ணி பிழைப்பொன்று உணரேன்
         வருந்தல் வேண்டா வாழிய நங்கைஎன்று
  135     இரந்தனன் ஆகி ஏற்பக் காட்டிய
         இலம்புடை நறுமலர் எழுதுகொடிக் கம்மத்துச்  
         சிலம்பிடைத் தங்கிய சேவடி அரத்தம்
         கார்இருங் குஞ்சி கவின்பெறத் திவள
         அரவுவாய்க் கிடப்பினும் மலர்கதிர்த் தண்மதிக்
  140     குருவுக்கதிர் வெப்பம் ஒன்று மில்லை
 
           சிறியோர் செய்த சிறுமைஉண் டெனினும்
         தரியாது விடாஅர் தாநனி பெரியோர்
         என்பது சொல்லி எழில்வரை மார்பன்
         பொன்புனை பாவை புறக்குடை நீவிச்
  145     செங்கையில் திருத்திப் பைந்தோடு அணிந்து
         கலம்பல திருத்தி நலம்பா ராட்டிச்
         சாந்தம் மெழுகிச் சாயல்நெகிழ்பு அறிந்து
         பூம்புறங் கவவப் புனைதார் ஓதி
         பூண்ட பூணொடு பொறையொன்று ஆற்றேன்
  150     தீண்டன்மின் பெருமஎனத் தீரிய உரைத்து
 
 

         மாடத் தகத்தில் ஆடுவினைக் காவினுள்
         கொம்பர் மீமிசைக் கூகைவந்து உலாஅய்
         வித்தகக் கைவினைச் சத்தி யேறி
         உட்குத்தக உரைத்தலுங் கட்கின் பாவை
  155    நெஞ்சந் துட்கென கெடுவிடை நின்ற
         காற்றெறி வாழையின் ஆற்ற நடுங்கி
         அஞ்சில் ஓதி ஆகத்து அசைத்தர்

 
           அச்ச முயக்கம் நச்சுவனன் விரும்பி
         மெல்லியன் மாதரொடு மேவன கிளந்து
  160     புல்லியுந் தளைத்தும் புணர்ந்தும் பொருந்தியும்
         அல்குலும் ஆகமும் ஆற்றநலம் புகழ்ந்தும்
         அமரர் ஆக்கிய அமிழ்தெனக் கினையோள்
         தன்முளை எயிற்றுநீர் தானென வயின்றும்
         ஒழுகா நின்ற காலை ஒருநாள்
 
     165    இன்பப் பேரறை நன்பகல் பொருந்தி
         அருமறை அறிதற்கு அமைந்த ஆர்வத்து
         ஒருதுணைத் தோழியை ஒன்றுவனள் கூவித்
         திருவிற்கு அமைந்த தேந்தார் மார்பன்
         உருவிற்கு அமைந்த உணர்வுநன் குடைமை
  170     அளத்து நாமெனத் துளக்கிலள் சூழ்ந்து
         பலர்புகழ் மார்பன் பயின்ற விச்சைகள்
         வல்லவை ஆய்கென வழிபா டாற்றி்
 
           நல்லவை யாவென நகைக்குறிப்பபு ஊர்தர
         வினவிய மகளிர்க்குச் சினவுநர்ச் சாய்த்தவன்
  175     வேத விழுப்பொருள் ஓதினர் உளரெனின்
         எனைத்துங் கரவேன் காட்டுவென் யானென்
 
           எமக்கவை என்செயும் இசையொடு சிவணிய
         கருவிக் கரண மருவினை யோவென
         நீத்தவர் வேண்டிய துப்புரவு அல்லால்
  180     பார்ப்பன மக்கள் பரிந்துபிற பயிற்றார்
         வேள்விக் குரிய கருவி யாவும்
         வாளேர் கண்ணி வல்லேன் யானென்
 
           நல்லதொன்று உண்டெனிற் சொல்லல்எங் குறையெனச்
         தோளுறு துணைவிக்குத் துயரம் வந்தநாள்
  185    சூளுறு கிளவியில் தொழுதனள் கேட்ப
         இடவரை அருவியின் இம்மென விசைக்கும்
         குடமுழ வென்பது பயிற்றினென் யானென்
 
           அவைக்குரி விச்சை வல்ல அந்தணன்
         சுவைத்தொழின் மகனென நகைத்தொழி லாடி
  190     அந்தர மருங்கின் அமரர் ஆயினும்
         மந்திர மறப்ப மனநனி கலக்கும்
         பைந்தொடி பயிற்றும் பண்யாழ் வருகெனத்
         தந்துகைக் கொடுக்கலுந் தண்பூங் கொடிபோல்
 
           எதிர்முகம் வாங்கி எழினி மறைஇப்
  195     பதுமா நங்கையும் பைஎனப் புகுந்து
         கோன்மணி வீணை கொண்டிவண் இயக்கத்
         தான மறிந்தி யாப்பி யாயினி
         நீநனி பாடென நேரிழை அருளித்
         துணைவன் முன்னதன் தொன்னலந் தோன்றக்
  200     கணைபுணர் கண்ணி காட்டுதல் விரும்பி்
 
           ஒள்உறை நீக்கி யொளிபெறத் துடைத்து
         வன்பிணித் திவவு வழிவயின் இறுத்த
         மெல்விரல் நோவப் பல்கால் ஏற்றி
         ஆற்றா ளாகி அரும்பெறல் தோழியைக்
  205     கோல்தேன் கிளவி குறிப்பில் காட்டக்
 
           கொண்டவள் சென்று வண்டலர் தாரோய்
         வீணைக்கு ஏற்ப விசையொடு மற்றிவை
         தானந் திரீஇத் தந்தீக எமக்கெனக்
 
           குலத்தொடும் வாராக் கோல்தரும் விச்சை
  210     நலத்தகு மடவோய் நாடினை யாகின்
         அலைத்தல் கற்றல் குறித்தேன் யானென
         மற்போர் மார்பஇது கற்கல் வேண்டா
         வலியின் ஆவது வாழ்கநின் கண்ணி
         தரித்தரல் இன்றிய இவற்றை இவ்விடத்து
  215     இருத்தல் அல்லது வேண்டலம் யாமென்
 
           அன்ன தாயின் ஆமெனில் காண்கம்
         பொன்னிழை மாதர் தாவெனக் கொண்டு
         திண்ணிய வாகத் திவவுநிலை நிறீஇப்
         பண்ணறி உறுத்தற்குப் பையெனத் தீண்டிச்
  220     சுவைப்பட நின்றமை யறிந்தே பொருக்கெனப்
         பகைநரம்பு எறிந்து மிகையுறப் படூவும்
         எள்ளல் குறிப்பினை உள்ளகத்து அடக்கிக்
 
           கோடும் பத்தலுஞ் சேடமை போர்வையும்
         மருங்குலும் புறமுந் திருந்துதுறைத் திவவும்
  225     விசித்திரக் கம்மமும் மசிப்பில னாகி
         எதிர்ச்சிக் கொவ்வா முதிர்ச்சித்
         பொத்துஅகத்து உடையதாய்ப் புனனின்று அறுத்துச்
         செத்த தாருச் செய்தது போலும்
         இசைத்திறன் இன்னா தாகியது இதுவென
  230     மனத்தின் எண்ணி மாசற நாடி
         நீட்டக் கொள்ளாள் மீட்டவள் இறைஞ்சிக்
 
           கொண்ட வாறும்அவன் கண்ட கருத்தும்
         பற்றிய வுடன்அவன் எற்றிய வாறும்
         அறியா தான்போல் மெல்ல மற்றதன்
  235     உறுநரம் பெறீஇ புணர்ந்த வண்ணமும்
         செறிநரம்பு இசைத்துச் சிதைத்த பெற்றியும்
         மாழை நோக்கி மனத்தே மதித்தவன்
         அகத்ததை எல்லாம் முகத்தினிது உணர்ந்து்
 
            புறத்தோன் நன்மை திறப்படத் தெளிந்து
  240     தாழிருங் கூந்தல் தோழியைச் சேர்ந்திவன்
          யாழறி வித்தகன் அறிந்தருள் என்றலின்
          இன்னுஞ் சென்றவன் அன்னன் ஆகுதல்
          நன்னுதல் அமர்தர நாடிக் காண்கெனப்
 
            பின்னுஞ் சேர்ந்து பெருந்தகை எமக்கிது
  245     பண்ணுமை நிறீஇயோர் பாணிக் கீதம்
          பாடல் வேண்டுமென்று ஆடமைத் தோளி
          மறுத்துங் குறைகொள மறத்தகை மார்பன்
 
            என்கண் கிடந்த எல்லாம் மற்றிவள்
          தன்கண் மதியில் தான்தெரிந்து உணர்ந்தனள்
  250      பெரிதிவட்கு அறிவெனத் தெருமந்து இருந்திது
          வல்லுநன் அல்லேன் னல்லோய் நானென்
 
            ஒருமனத் தன்ன வுற்றார்த் தேற்றா
          அருவினை இல்லென அறிந்தோர் கூறிய
          பெருமொழி மெய்யெனப் பிரியாக் காதலொடு
  255     இன்ப மயக்கம் எய்திய வெம்மாட்டு
          அன்புதுணை யாக யாதொன்று ஆயினும்
          மறாஅது அருளென உறாஅன் போல்
 
            அலங்குகதிர் மண்டிலம் அத்தஞ் சேரப்
          புலம்புமுந் துறுத்த புன்கண் மாலைக்
  260      கருவி வானம் கால்கிளர்ந்து எடுத்த
          பருவம் பொய்யாப் பைங்கொடி முல்லை
          வெண்போது கலந்த தண்கண் வாடை
          பிரிவருங் காதற்குக் கரியா அதுபோல்
          நுண்சா லேகம் நுழைந்துவந் தாட்
 
     265    ஆராக் காதலின் பேரிசை கனியக்
          குரலோர்த்துத் தொடுத்த குருசில் தழீஇ
          இசையோர் தேய இயக்கமும் பாட்டும்
          நசைவித் தாக வேண்டுதிர் நயக்கெனக்
 
            குன்றா வனப்பில் கோட பதியினை
   270     அன்றாண்டு நினைத்துஅஃது அகன்ற பின்னர்
          நலத்தகு பேரியாழ் நரம்புதொட் டறியா
          இலக்கணச் செவ்விரல் ஏற்றியும் இழித்தும்
          தலைக்கண் தாழ்வும் இடைக்கண் நெகிழ்ச்சியும்
          கடைக்கண் முடுக்குங் கலந்த கரணமும்
   275     மிடறு நரம்பு மிடைதெரி வின்றிப்
          பறவை நிழலில் பிறர்பழித்து ஈயாச்
          செவிச்சுவை அமிர்தம் மிசைத்தலின் மயங்கி்
 
            மாடக் கொடுமுடி மழலையும் புறவும்
          ஆடமை பயிரும் அன்னமுங் கிளியும்
   280    பிறவும் இன்னன பறவையும் பறவா
          ஆடுசிறகு ஒடுக்கி மாடஞ் சோரக்
          கொய்ம்மலர்க் காவில் குறிஞ்சி முதலாப்
          பன்மரம் எல்லாம் பணிந்தன குரங்க
          மைம்மலர்க் கண்ணியும் மகிழ்ந்து மெய்ம்மறப்ப்
 
     285    ஏனோர்க்கு இசைப்பின் ஏதந் தருமென
          மானேர் நோக்கி மனத்திற் கொண்டு
          கண்கவர் உறூஉங் காமனின் பின்னைத்
          தும்புரு வாகும்இத் துறைமுறை பயின்றோன்
          இவனிற் பின்னை நயன்உணர் கேள்வி
   290    வகையமை நறுந்தார் வத்தவர் பெருமகன்
          உதையணன் வல்லன்என் றுரைப்ப அவனினும்
          மிகநனி வல்லன்இத் தகைமலி மார்பன்என்று்
 
            உள்ளங் கொள்ளா உவகையள் ஆகி
          ஒள்ளிழை தோழியொடு உதயணன பேணிக
   295     கழிபெருங் காமங் களவினில் கழிப்பி
          ஒழுகுவனள் மாதோ உரிமையின் மறைந்தென்.