22. பதுமாபதி வதுவை

 

இதன்கண்: உதயணனுடைய உடன்பாடு பெற்று மீண்ட அமைச்சன் தருசகனுக்குக் கூறுதலும், அவன் மகிழ்தலும், உதயணன் எண்ணுதலும், உதயணன் வயந்தகனைத் தருசகன்பால் உய்த்தலும், வயந்தகன் தருசகன்பால் சென்று கூறுதலும், தருசகன் யாப்பியாயினியை இசைச்சனுக்கு மணம் செய்விப்பதாகச்  சொல்லிவிடுத்தலும், உதயணன் முதலியோர் உடன்படுதலும், தருசகன் தன்தாயின் உடன்பாட்டைஅறிதலும், தருசகன் செயலும், உதயணன் செயலும் யாப்பியாயினி உதயணனே மணமகன் என்றுணர்தலும், யாப்பியாயினி பதுமாபதியைக் காண்டலும், அவ்விருவர் தம் சொல்லாட்டமும், யாப்பியாயினியின் செயலும், உதயணன் செயலும், யாப்பியாயினியின் செயலும், பதுமாபதி செயலும், பதுமாபதியின் மகிழ்ச்சியும், மணவினைச் செயலும், பதுமாபதியைக் கோலம் செய்தலும், உதயணன் மணமண்டபம் புகுதலும், பதுமாபதி வருதலும், உதயணன் பதுமாபதியை மணம் புரிந்து கோடலும் கூறப்படும்.
 
              அகநனி புகன்றுஆண்டு அமைச்சன் போகித்
            தகைமிகு தானைத் தருசகன் குறுகி
            மாற்றோர்ச் சாய்த்தவன் மறுத்த வண்ணமும்
            ஆற்றல் சான்றஅவன் அன்புகந் தாகத்
      5  தொல்லுரைக் கயிற்றில் தொடரப் பிணிக்கொளீஇ
            வல்லிதின் அவனை வணக்கிய வண்ணமும்
            பல்பொரு ளாளன் பணிந்தனன் உரைப்ப
 
              உவந்த மனத்தின் இகழ்ந்ததை மதியாக்
            கொடுக்குங் கேண்மை கோமகன் புரிய
 
        10  வடுத்தொழில் அகன்ற வத்தவர் பெருமகன்
            மாய உருவொடு மாடத்து ஒடுங்கிய
            ஆய கேண்மையன் அந்தணன் என்பது
            சேயிழை மாதர் தேறலள் ஆகி
            ஒன்றுபுரி உள்ளமொடு ஒன்றாள் ஆதலின்
      15  நன்றுபுரி நாட்டத்து நான்அவ னாதல்
            அறியத் தேற்றுவோர் அயல்வேறு இல்லென
            நெறியிற்கு ஒத்த நீர்மை நாடி
 
              வயத்தகு நோன்தாள் வயந்தகன் தழீஇ
            இசைச்சன் என்னும் என்னுயிர்த் தோழன்
      20  அருமறை நாவின் அந்தணன் அவன்தனக்கு
            இருமுது குரவரும் இறந்தனர் ஆதலின்
            வேதத்து இயற்கையின் ஏதந் தீரக்
            கிரிசையின் வழாஅ வரிசை வாய்மையோர்
            அந்தணன் கன்னியை மந்திர விதியின்
      25    அவன்பால் படுத்த பின்னர் என்னையும்
            இதன்பால் படுக்க எண்ணுக தானென
            என்கூற் றாக இயையக் கூறி
            முன்கூற்று அமைத்து முடித்தல்நின் கடனென
 
              வயந்தக குமரனும் நயந்தது நன்றென
      30  இன்னொலிக் கழல்கால் மன்னனைக் குறுகிப்
            பொருத்தம் படஅவன் உரைத்ததை உணர்த்தலின்
 
              விருப்பொடு கேட்டு விறல்கெழு வேந்தன்
            நங்கை தோழி நலத்தொடு புணர்ந்த
            அங்கலுழ் பணைத்தோள் ஆப்பியா யினிஎனும்
      35    செழுக்கயல் மழைக்கண் சேயிழை அரிவை
            ஒழுக்கினும் குலத்தினும் விழுப்பம் மிக்கமை
            சென்றுரை செம்மற்கு என்றவன் ஒருப்பட
            வயந்தக குமரன் வந்து கூறத்
 
              தோழர் எல்லாம் தோழிச்சி யாகத்
      40  தாழ்வ ளாம்எனத் தாழாது வலிப்ப
            நன்னெறி அறியுநர் நாள்தெரிந்து உரைப்பத்
 
              தன்னெறி வழாஅத் தருசக குமரன்
            தன்பயந்து எடுத்த கற்பமை காரிகைக்
            கோப்பெருந் தேவிக்கு யாப்புடைத் தாகத்
      45    தங்கை திறவயின் வலித்தது மற்றவள்
            இன்பத் தோழியை இசைச்சன்கு இசைத்ததும்
            தெருளக் கூறி அருள்வகை அறிந்து
            வம்மின் என்று தம்மியல் வழாஅப்
            பெருமூ தாளரை விடுத்தலிற் கேட்டே
 
        50  திருமா தேவியும் தேன்புரை தீஞ்சொல்
            கணங்குழை மகளைக் காமன் அனைய
            வணங்குசிலைத் தடக்கை வத்தவர் பெருமகன்கு
            எண்ணினன் எனவே உள்மலி உவகையள்
            அதிநா கரிகத்து அந்தணிக் கணியும்
      55    முற்றணி கலங்கள் கொற்றவி கொடுப்பப்
 
              பதுமா நங்கையும் அதன்திறம் அறிந்து
            மாணகன் பிரிந்தஎன் மம்மர் வெந்நோய்க்கு
            ஆணம் ஆகிய ஆயிழை தனக்கு
            நீங்குதிறன் உண்டுஎனில் தாங்குதிறன் அறியேன்
      60  விலக்குதல் இயல்பும் அன்றால் கலக்கும்
            வல்வினை தானே நல்வினை எனக்கென
            ஒள்ளிழை மாதர் உள்வயின் நினைஇ
 
              மடுத்தணி கலனும் மாலையும் பிறவும்
            கொடுத்தனள் ஆகிக் கோமான் பணித்த
      65    வடுத்தீர் வதுவையின் மறந்தனை ஒழியாது
            வல்லே வாஎன மெல்லியல் புல்லிக்
            கவற்சி கரந்த புகற்சியள் ஆகிச்
            சிறுமுதுக் குறைவி அறிவொடு புணர்ந்த
            தாயர் இயற்கை சேயிழைக்கு ஆற்றித்
      70  தானுடை உழைக்கலம் எல்லாந் தரீஇச்
            சேயொளிச் சிவிகையொடு சேயிழைக்கு ஈயத்
 
              தங்கை தலைமை தன்னையும் உவந்து
            கொங்கலர் கோதையைக் கொடுக்குநாள் ஆதலின்
            இலக்கணச் செந்தீத் தலைக்கையின் இரீஇ
      75    இழுக்கா இயல்பின் இசைச்ச குமரன்
            விழுப்பெரு விதியின் வேட்டுஅவள் புணர்கென
            முழுப்பெருங் கடிநகர் முழுதுடன் உணரக்
            கோப்பெரு வேந்தன் யாப்புறுத்து அமைத்தபின்
 
              வதுவைச் செல்வத்து ஒளிநகைத் தோழனை
      80  நீங்கல் செல்லான் பூங்கழல் உதயணன்
            முதல்கோ சம்பியும் மொய்புனல் யமுனையும்
            சிதர்ப்பூங் காவும் சேயிழை மாதர்
            கண்டுஇனிது உறைவது காரண மாக
            வண்டுஇமிர் காவின் மகதத்து அகவயின்
      85    வந்தனம் யாம்என்று அந்தணி கேட்ப
            இன்இசைக் கிளவி இறைமகன் இசைத்தலின்
 
              சின்நகை முறுவல் சேயிழை கேளா
            வாள்நகை மாதரொடு மனைவயின் ஒடுங்கிய
            மாணகன் வாய்மொழி யிதுவான் மற்றெனத்
      90  தேனார் காந்தள் திருமுகை அன்ன
            கூட்டுவிரல் அகற்றிக் கொழுங்கயல் மழைக்கண்
            கோட்டுவனள் மேலைக் குமரனை நோக்கி
            ஐயம் இன்றி அறிந்தன ளாகி
 
              வையங் காவலன் வத்தவர் பெருமகன்
      95    பார்ப்பன உருவொடு பதுமா நங்கையை
            யாப்புடை நெஞ்சம் அழித்தனன் அறிந்தேன்
            ஒப்புழி அல்லது ஓடாது என்பது
            மிக்கதென் மனன்என மெல்லியல் நினைஇ
            நகைத்துணைத் தோழிக்கு நன்னலத் தோன்றல்
      100  தகைப்பெரு வேந்தன் ஆகலின் மிகச்சிறந்து
            ஆனா நன்மொழி தான்அவள் கொண்டு
            கோட்டிச் செவ்வியுள் வேட்டனள் விரும்பா
            உரைத்தல் ஊற்றமொடு திருத்தக இருப்ப
 
              இயைந்த வதுவை எழுநாள் நீங்கலும்
      105    பசும்பொன் கிண்கிணிப் பதுமா நங்கையும்
            நயந்த தோழி நன்நலம் காணும்
            விருப்பினள் ஆகி விரைந்துஇவண் வருகெனத்
            திருக்கிளர் சிவிகையொடு சிலதரை விடுத்தலின்
 
              ஆரா அன்பினொடு அகன்ற எழுநாள்
      110  ஏழாண்டு அமைந்தன தன்மையள் ஆயினும்
            நலங்கவர்ந்து அகன்ற நண்பனைக் கண்டனென்
            புலம்புஇனி ஒழிக புனைவளைத் தோளி
            வளங்கெழு தானை வத்தவ னாம்என
            விளங்கக் கூறும் விருப்பும் நாணும்
      115    தேறிய தோழி ஏறினள் சென்றுதன்
            துணைநலத் தோழிமுன் மணநலக் கோலமொடு
 
              நாணிநின் றோளைநின் பூண்இள வனமுலை
            புல்லினது உண்மையில் புல்லேன் யானென
            மெல்லியன் மாதர் நகுமொழி பயிற்ற
 
        120  நினக்கும் ஒக்கும்அஃது எனக்கே அன்றென
            மனத்தின் அன்னோள் மறுமொழி கொடுப்பச்
            சின்நகை முகத்தள் நன்னுதல் வாவென
            நுகர்ச்சியின் உகந்த வனமுலை நோவப்
            புகற்சியொடு புல்லிப் புனைஇழை கேண்மதி
 
        125    வண்டார் மார்பின் வடிநூல் வயவனைக்
            கண்டேன் அன்ன தன்மையன் ஆகிக்
            கள்ள உருவொடு கரந்தகத்து ஒடுங்கிநின்
            உள்ளங் கொண்ட உறுவரை மார்பன்
            வசையின் நோன்றாள் வத்தவர் பெருமகன்
      130  உதையண குமரன் போலும் உணர்கெனச்
            சிதைபொருள் இல்லாச் சின்நெறிக் கேண்மை
            மணங்கமழ் மாதர் துணிந்தனள் உரைப்ப
 
              நின்னை வேட்ட வந்தணன் அவற்குத்
            துன்னிய தோழனது முன்னே கேட்டனன்
      135    பெருமகன் உள்ளத்து உரிமை பூண்டஎன்
            அதிரா நன்நிறை கதுவாய்ப் படீஇத்
            தணத்தல் தகுமோ நினைக்கெனக் கலங்கித்
            திருவிழை தெரியாள் திட்பங் கூறப்
 
              பின்னருங் காண்பாம் அன்னன் ஆகுதல்
      140  பொன்னே போற்றெனத் தன்மனைப் பெயர்ந்து
            நன்னுதல் நிலைமை இன்னதென்று உரைக்கவம்
 
              மாற்றங் கேட்டுஅவள் தேற்றல் வேண்டி
            வத்தவர் பெருமகன் வண்ணங் கூட்டிச்
            சித்திரக் கிழிமிசை வித்தக மாக
      145    உண்கண் கிழமையுள் பண்பின் தீராது
            மறைப்பியல் வழாஅக் குறிப்புமுதல் தொடங்கி
            ஆங்குஅப் பொழுதே பூங்குழை உணர
            வாக்கமை பாவை வகைபெற எழுதி
            வாள்நுதல் மாதரொடு மனைவயின் இருப்புழி
      150  உருவக் கோயிலுள் இரவுக் குறிவயின்
            வெருவக் குழறிய விழிகண் கூகைக்
            கடுங்குரல் அறியாள் கதுமென நடுங்கினள்
            ஒடுங்கீர் ஓதி என்பதை உணர்த்தென
 
              மன்னவன் உரைத்த மாற்றமும் மன்னவன்
      155    தன்ஒப் பாகிய தகைநலப் பாவையும்
            கொண்டனள் போகிக் கோமகள் குறுகி
            வண்டுஅலர் படலை வத்தவன் வடிவில்
            பாவை காட்டிப் பைங்கொடி இதுநம்
            ஆய்பூங் காவின் அந்தண உருவொடு
      160  கரந்துநலம் கவர்ந்த காவலன் வடிவுஎனத்
 
              திருந்துஇழை மாதர் திண்ணிதின் நோக்கி
            இன்உயிர்க் கிழவன் எழுதிய பாவை
            என்னும் வேற்றுமை இல்லை ஆயினும்
            ஓராங்கு இதனை ஆராய்ந்து அல்லது
      165    தீண்டலும் தேறலும் திருத்தகைத்து அன்றெனப்
            பூண்தயங்கு இளமுலைப் புனைவளைத் தோளி
            உள்ளே நினைஇக் கொள்ளாள் ஆக
 
              நள்ளென் யாமத்து நன்நுதல் வெரீஇய
            புள்ளின் நற்குறி உரைத்தலும் பொருக்கெனப்
      170  பெருவிறல் கொழுநன் இன்னுயிர் மீட்டுப்
            பெற்ற ஒழுக்கிற் பெரியோள் போலச்
            செங்கடை மழைக்கண் சேயிழைத் தோழியை
            அங்கை எறிந்து தங்கா விருப்பமொடு
            காமக் காதலன் கைவினைப் பொலிந்த
      175    ஓவியப் பாவையை ஆகத்து ஒடுக்கி
 
              நீண்ட திண்தோள் ஈண்டுவனள் நணக்கு
            நெஞ்சங் கொண்ட நெடுமொழி யாள
            வஞ்ச உருவொடு வலைப்படுத்து அனையெனப்
            புலவி நோக்கமொடு நலமொழி நயந்து
      180  கோமான் குறித்ததுந் தோழி கூற்றும்
            தானொருப் பட்ட தன்மையள் ஆகிச்
            செல்லா நின்ற சின்நாள் எல்லை
 
              நன்னாள் தலைப்பெயல் நன்றென எண்ணிக்
            கோட்டமில் உணர்வின் கொற்றவன் குன்றாச்
      185    சேனைப் பெருங்கணி செப்பிய நன்னாள்
            தானைத் தலைத்தாள் தானறி உறுத்தலின்
            வையக விழவில் தானுஞ் செய்கையின்
            அழுங்கல் நன்னகர் ஆவணந் தோறும்
            செழும்பல் யாணர்ச் சிறப்பின் வழாஅது
      190  வண்ணப் பல்கொடி வயின்வயின் எடுத்தலின்
            விண்வேய்ந்து அன்ன வியப்பிற்று ஆகிப்
 
              பெருமதில் அணிந்த திருநகர் வரைப்பின்
            ஆய்ந்த கேள்வி மாந்தரும் மகளிரும்
            ஆரா உவகையர் ஆகிய காலைச்
      195    சேரார்க் கடந்த சேதியர் மகனையும்
            மதுநாறு ஐம்பால் பதுமா பதியையும்
            மரபிற்கு ஒத்த மண்ணுவினை கழிப்பிய
            திருவிற் கொத்துத் தீதுபிற தீண்டா
            நெய்தலைப் பெய்து மையணி உயர்நுதல்
      200    இருங்களிற்று யாயானை எருத்தில் தந்த
            பெருந்தண் நறுநீர் விரும்புவனர் ஆட்டிப்
            பவழக் கொட்டைப் பொற்செருப்பு ஏற்றித்
            திகழ்செய் கோலத்து இருமணை இரீஇச்
 
              செங்கயல் கண்ணியை நங்கை தவ்வையர்
      205    கோலம் மீத்தக வாலணி கொளீஇத்
            திருந்தடி வணங்கி வருந்தல் ஓம்பிப்
            பீடத்து இரீஇய பாடறிந்து ஏற்றி
            நறுநீர்த் துவர்க்கை வயின்வயின் உரீஇக்
            கறைமான் காழ்அகில் கொழும்புகை கொளீஇ
      210  நெறித்து நெறிப்பட வாருநர் முடித்து
            மங்கல நறுஞ்சூட்டு மரபின் அணிந்து
 
              வல்லோன் வகுத்த நல்வினைக் கூட்டத்து
            யவனப் பேழையுள் அடைந்தோர் ஏந்திய
            தமனியப் பல்கலம் தளிரியல் மாதர்
      215    ஆற்றுந் தகையன ஆற்றுளி வாங்கி
            வெண்சாந்து வரித்த அம்சில் ஆகத்து
            இணைமுலை இடைப்பட்டு இலங்குபு பிறழும்
            துணைமலர்ப் பொற்கொடி துளங்கு நுசுப்பினை
            நிலைபெற விசிப்பது போல வேர்ப்ப
      220  மேற்பால் பிறையென விளங்க அமைந்தது
            ஒருகாழ் ஆரம் ஒளிபெற அணிந்து
 
              திருக்கேழ்க் களிகை செவ்வனம் சேர்த்திப்
            பைம்பொன் திலகமொடு பட்டம் அணிந்த
            ஒண்கதிர் மதிமுகம் ஒளியொடு சுடரச்
      225    செம்பொன் ஓலை சேடுபடச் சுருக்கி
            ஐவகை வண்ணத்து அம்நுண் மேகலை
            பையரவு அல்குல் பரப்பிடை இமைப்பக்
            கொய்துகொண்டு உடீஇய கோடி நுண்துகில்
            மைவளர் கண்ணி மருங்குல் வருத்தக்
      230  கடுங்கதிர் முத்துங் கைபுனை மலரும்
            தடந்தோள்கு ஒப்ப உடங்கணிந்து ஒழுகிய 
 
              சின்மயிர் முன்கைப் பொன்வளை முதலாக்
            கண்ணார் கடகமொடு கைபுனைந்து இயற்றிய
            சூடகத் தேற்ற சுடரொளிப் பவளமொடு
      235    பாடக நூபுரம் பரட்டுமிசை அரற்ற
            ஆடமைத் தோளியை அணிந்துமுறை பிறழாது
            வதுவைக்கு ஏற்ற மங்கலப் பேரணி
            அதிநா கரிகியை அணிந்தனர் அமைய
 
              ஓங்கிய பெரும்புகழ் உதயண குமரனைத்
      240  தாங்கருந் தோழர் தாம்புனைந்து அணியக்
            கடிநாள் கோலத்துக் காமன் இவனென
            நெடுநகர் மாந்தர் நெஞ்சந் தெளியக்
            காட்சிக்கு அமைந்த மாட்சி எய்த
 
              வெற்ற வேந்தன் கொற்றப் பெருங்கணி
      245   கூறிய முழுத்தம் குன்றுதல் இன்றி
            ஆர்வச் செய்தொழில் அகன்பெருங் கோயிலுள்
            ஆயிரம் பொன்தூண் அணிமணிப் போதிகைக்
            காய்கதிர் முத்தம் கவினிய அணிமின்
            அத்தூண் நடுவண் ஒத்த உருவின
     250  சந்தனப் பெருந்தூண் ஒன்பது நாட்டிய
            மைந்தர் அழகிற்கு ஏற்ற ... ... ... ...
            ... ... ... ... ... ... ... ... ...
            அழல்மணி நெடுமுடி அரசருள் அரசன்
            நிலமமர் செங்கோல் நித்திலம் ஏர்தரத்
            தலைமலை படலைத் தருசகன் புகுந்து
     255    தீவேள் சாலை திறத்துளி மூட்டிப்
            புகுதுக வத்தவன் என்றலின் பூந்தார்
            அரசிளங் குமரரொடு அண்ணல் புகுதரக்
 
              கதிர்மதி முகத்தியைக் காவல் கண்ணி
            ஆயிரத்து எண்மர் பாங்கியர் அன்னோர்
      260  பாசிழைத் தோழியர் பாடகஞ் சுடரத்
            தண்பெரும் பந்தருள் கண்பிணி கொள்ள
            உயர்வினும் ஒழுக்கினும் ஒத்தவழி வந்த
            மங்கல மன்னற்கு மந்திர விழுநெறி
            ஆசான் முன்னின்று அமையக் கூட்டித்
      265    தீமாண் புற்ற திருத்தகு பொழுதில்
 
              புதுமலர்க் கோதைப் பூந்தொடிப் பணைத்தோள்
            பதுமா நங்கையைப் பண்புணப் பேணி
            மணநல மகளிர் மரபிற்கு ஒத்தவை
            துணைநல மகளிரொடு துன்னிய காதல்
      270  மூதறி மகளிர் முடித்த பின்றை
 
              ஏதம்இல் காட்சி ஏயர் பெருமகன்
            நன்நுதல் மாதரை நாட்கடிச் செந்தீ
            முன்முதல் இரீஇ முறைமையில் திரியா
            விழுத்தகு வேள்வி ஒழுக்கியல் ஓம்பிச்
      275    செம்பொன் பட்டம் பைந்தொடிப் பாவை
            மதிமுகம் சுடர மன்னவன் சூட்டித்
            திருமணிப் பந்தருள் திருக்கடங் கழிப்பி
 
 

            ஒருமைக்கு ஒத்த ஒன்றுபுரி ஒழுக்கின்
            வல்லோர் வகுத்த வண்ணக் கைவினைப்
      280  பல்பூம் பட்டில் பரூஉத்திரள் திருமணிக்
            காலொடு பொலிந்த கோலக் கட்டில்
            கடிநாள் செல்வத்துக் காவிதி மாக்கள்
            படியில் திரியாது படுத்தனர் வணங்கப்
            பட்டச் சின்நுதல் பதுமா பதியொடு
      285    கட்டில்ஏ றினனால் கருதியது முடித்தென். 

(22.பதுமாபதி வதுவை முற்றிற்று)