25. அரசமைச்சு

 

இதன்கண் : ஆருணிமன்னன் அரண்மனைக்குப் பிறர் தம்மை அறியாதபடி சென்று ஆங்கு அறியவேண்டியவற்றை ஒற்றி அறிந்து வந்த ஒற்றர் உதயணனுக்குக் கூறுதலும், உதயணன் வருடகாரனுக்குக் கூறுதலும், வருடகாரன் செயலும், ஆருணியின் சேனாதிபதிமகன் வருடகாரனுக்குக் கூறுதலும், வருடகாரன் சேனாதிபதிக்குக் கூறலும், சேனாதிபதிமகன் ஆருணிக்கு அறிவித்தலும், ஆருணியின் செயலும், பிறவும் கூறப்படும்.
 
              வளைத்தனர் கொள்வது வலித்தனர் இருந்துழி
            ஒளித்துஅகத்து ஒடுங்கிய ஒற்றர் ஓடிச்
            சிலைப்பொறித் தடக்கையின் சேதியர் பெருமகற்கு
            இசைத்தனர் புக்குநின்று ஏத்தினர் கூறுவர்
 
         5    தாழ்ச்சி இன்றித் தருசகன் தமரோடு
            ஏழ்ச்சியும் எறிபடை அளவும்எம் பெருமான்
            சூழ்ச்சியுஞ் சூழ்பொருள் துணிவும் எல்லாம்
            படிவ ஒற்றில் பட்டாங்கு உணர்ந்து
            கொடிஅணி வீதிக் கோநகர் வரைப்பில்
       10    படியணி வாயிலும் பரப்பும் நாயிலும்
            அற்றம் பட்டுழித் தெற்றெனத் திருத்திக்
 
              குறும்புழை எல்லாங் கூடெழுக் கொளீஇச்
            செறிந்த பல்படை அறிந்தவண் அடக்கி
            வாயின் மாடமொடு நாயில் உள்வழி
       15    இரவும் பகலும் இகழாக் காப்பொடு
            முரவுந் தூம்பும் முழங்குபு துவைப்ப
 
              ஆண்தகை அமைத்துப் பாம்புரி திருத்தி
            அருஞ்சுழி நீத்தத்து ஆறுபுக அமைத்த
            சுருங்கை வாயில் பெருங்கதவு ஒடுக்கிக்
      20    கொடுந்தாழ் நூக்கி நெடும்புணை களைந்து
            நீள்நீர்க் கிடங்கிலுள் தோணி போக்கிக்
            கல்லிடு கூடை பல்இடத்து இயற்றி
            வில்லுடைப் பெரும்பொறி பல்வழிப் பரப்பிப்
 
              பற்றுஅறத் துறந்த படிவத் தோரையும்
      25     அற்றம் இன்றி ஆராய்ந்து அல்லது
            அகம்புக விடாஅது இகந்துசேண் அகற்றி
            நாட்டுத் தலைவரை நகரத்து நிறீஇ
            நகர மாந்தரை நாட்டிடை நிறீஇ
            ஊரூர் தோறும் உளப்பட்டு ஓவா
      30    ஆர்வ மாக்களை அருஞ்சிறைக் கொளீஇ
 
              ஆணை கேட்ட அகலிடத்து எல்லாம்
            ஓலை போக்கி ஒல்லைவந்து இயைகெனப்
            பேணார்க் கடந்த பிரச்சோ தனன்கு
            மாணாச் செய்தொழில் மனமுணக் காட்டி
      35    அலமதித்து ஒழுகி ஆணை எள்ளி
            மிகைசெய் திருந்ததன் மேலும் மீட்டுஇனி
            மகத மன்னனும் மதுகை ஆகப்
            பகைசெய வலித்தனன் என்பது பயிற்றி
            மந்திர ஓலை போக்கிய வண்ணமும்
 
        40    வெந்திறல் கலந்த விறல்வே சாலியொடு
            சங்க மன்னர்க்குத் தம்படை கூட்டி
            விரைந்தனர் வருகென நினைந்துவிட் டதுவும்
            மன்அடு நெடுவேல் மகத மன்னற்கு
            இன்னது தருவேன் என்னொடும் புணர்கெனத்
      45    தன்னொடு பழகிய தமர்களை விட்டதும்
            இன்னவை பிறவும் பன்னின பயிற்றிய
            அறிந்தஒற் றாளர் செறிந்தனர் உரைப்ப
 
              ஒற்று மாக்களை ஒற்றரின் ஆயா
            முன்தனக்கு உரைத்த மூவர் வாயவும்
      50    ஒத்தது நோக்கி மெய்த்தகத் தேறி
            இரவேறு ஒளித்துச் செருமேந் தோன்ற
            வளைத்திருந்து அழிக்குவம் எனினே மற்றவன்
            வலித்தது நாடி நலத்தகு நண்பின்
            மிலைச்ச மன்னரும் கூடித் தலைத்தலை
      55    வந்தவன் நிதிப்பயம் கருதி முந்துற
            முற்றுபு விடுப்பின் அற்றம் ஈனும்
 
              வேண்டா அஃதுஇவண் மீண்டுஇது கேட்கென
            வாங்குசிலைத் தடக்கை வருட காரன்கு
            ஓங்குபுகழ் வென்றி உதயணன் இசைக்கும்
      60    நின்னொடு என்னிடை நீப்புஇவண் உண்டெனத்
            துன்னிய நமர்கட்குத் தோன்றக் கூறி
            அவன்குப்பாங்கு ஆகிய ஆர்வலர் உளரெனின்
            மிகச்செறி வுடையையாய் விடுமதி விடூஉம்
            மாற்றந் தன்னையும் ஓர்த்தனை கொண்மோ
 
        65    ஆசில் செங்கோல் அவந்தியன் மடமகள்
            வாசவ தத்தையை வலிதில் கொண்ட
            மேநாள் காலை யானே அவனைப்
            பற்றுபு நம்பதி தருகுவேன் என்றசொல்
            முற்றுலகு எல்லாம் மொய்த்துஒருங்கு தருதலின்
      70    வத்தவ மன்னனும் மெய்த்தகக் கேட்டுக்
            கனல்இரும்பு உண்ட நீரின் விடாது
            மனவயின் அடக்கி மறைந்தனன் ஒழுகித்
            தன்குறை முடிதுணைத் தான்அருள் தோற்றி
            நன்கினிது உரைக்குமவன் உரைக்கும் ஆயினும்
 
        75    வெஞ்சொல் மாற்றம் வேந்தரை உரைத்தோர்
            அஞ்சுக என்னுந் தொன்மொழி உண்மையின்
            நெஞ்சுநீ நெகிழ்ந்தவன் தெளியலை செல்லென
            மணித்தகைப் பைம்பூண் மகதவர் கோமான்
            பணித்தது மறாமையில் படையென வந்தனென்
      80    மற்றது மன்னவன் உற்றிவண் செய்ததோர்
            முன்னுப காரம் உடைமையின் ஆகும்
 
              அன்னவன் மதித்துத் தன்மிகத் தருக்கும்
            பெருமீக் கூற்றமும் பேணான் பிறரொடு
            செருமீக் கூற்றமுஞ் செய்கையும் வேண்டாம்
      85    ஒருதலை யாக ஆற்றலன் மற்றுஇவண்
            பழிதலை நம்மேல் வருதலும் இன்றி
            நாமும் எண்ணி விட்டனம் ஆகத்
            தானே சென்று தன்வலி அறியான்
            அழியினும் நமக்குக் கழிவதொன்று இல்லை
 
        90    ஆனிலைப் படாஅது ஈன்நிலைக் கண்ணே
            பற்றா மன்னர் படையொடு புணரின்
            அற்றப் படீஇயர் அதனினும் உவத்துமென்று
            இன்னவை எல்லாந் திண்ணிதின் உரைத்தனன்
            தன்னொடு தொடர்ந்த மன்னரைத் தொகுத்துத்
      95    தான்இவண் வாரான் ஆயினும் யான்இவண்
            செய்வதை எல்லாம் மெய்யெனக் கருதுமென்று
            ஐயம் இன்றி அவனுழை விட்டபின்
 
              மெய்எனத் தெளிந்து மீட்டுஅவன் விட்ட
            கரும மாக்களை ஒருவயின் ஓம்பிச்
      100    செறியச் செய்துஎமக்கு அறிய விடுக்கபின்
            பற்றிக் கொண்டு பற்றா மன்னன்
            ஒற்றர் இவரென உரைத்துஅறி உறீஇக்
            குற்றங் காட்டிக் கொலைக்கடம் பூட்டுதும்
 
              தெற்றென நின்வயின் தெளிந்தனர் ஆகி
      105    உறுபெரும் பகைமை உற்றோர் உணர்ந்து
            செறிவுகொள் வதற்குச் சென்றனர் இசைப்ப
            இதுகா ரணத்தின் இகத்தல் பொருந்தும்
            அதுகா ரணத்தின் யாமும் தெளிவேம்
            பாரப் பண்டியும் பாடிக் கொட்டிலும்
      110    ஆர்எரி கொளீஇ அஞ்சினேம் ஆகி
            மலைஅரண் அல்லது நிலைஅரண் இல்எனத்
            தவதி சயந்தம் புகுதும் புக்கபின்
 
              மிகுதி அச்சம் மீட்டவன்கு உணர்த்தி
            வருக வேந்தன் பெருவிறல் பீடுஅறக்
      115    கலக்கப் பொழுதே கடிது நாமென
            விலக்க நில்லா வேட்கையன் ஆகித்
            தான்புறப் படுதலின் தன்னே போலும்
            மாண்புறு வேந்தரை மதில்அகத்து ஒழித்துப்
            புறமதில் கண்ணும் பொருபடை நிறீஇ
      120    எறிபடை சிறிதினொடுஅணுகிய பின்றைச்
 
              சவரர் புளிஞர் கவர்உறு கடுந்தொழில்
            எழுச்சி கூறி இகல்அடு பெரும்படை
            மாட்டல் வேண்டுமென்று ஓட்டிஎத் திசையும்
            கூட்டத்து உள்ளே கூறுபடப் போக்கிச்
      125    சிறுபடை ஆகிய பொழுதில் கதுமென
            உறுபடை அழித்தும்என்று உடன்றுமேல் வந்தென
            முன்னும் பின்னும் பக்கமும் நெருக்கிஅவன்
            கொள்முரண் இரிப்பின் கோள்எளி தாம்என
            உன்முரண் உதயணன் உரைத்தனன் வணங்கி
 
        130    நன்றெனப் போகித் தன்தமர்த் தழீஇ
            முன்னான் உரைத்த இன்னா வெவ்வுரைக்கு
            ஒன்னார் ஓட்டிய உதயணன் உள்ளத்து
            உவர்த்தல் அன்றியுஞ் சிவக்கும் என்னைப்
            பழியாக் கொண்டனன் அழியின் அடையெனைப்
      135    பகலும் மிரவும் அகலிர் ஆகிக்
            காப்புநன்கு இகழன்மின் கருமம் முடிதுணை
            ஒப்புற ஒருவனை உறப்பெறின் அவனொடு
            தீக்குழி வலித்துயாம் தீரினும் தீர்தும்
            யாதுசெய் வாங்கொல்என்று அஞ்சினம் பெரிதெனக்
      140    காவ லாளர்க்குக் கவன்றனன் உரைப்பப்
 
              பலர்புகழ் விழுச்சீர்ப் பாஞ்சால ராயனொடு
            செலவயர்வு உடைய சேனா பதிமகன்
            என்னுழை விடுத்தனன் இருநூ றியானையும்
            பொன்னணி புனைதார்ப் புரவி பூண்ட
      145    ஐம்பது தேரும் ஆயிரங் குதிரையும்
            தன்பெயர் கொளீஇத் தான்இனிது ஆள்கென
            மன்பெருஞ் சிறப்பின் கொன்னூர் அறுபதும்
            பாஅடி மடப்பிடி பதினைந்து இரட்டியும்
            மாவடி மடக்கண் மாதர் மென்முலை
      150    நாடக மகளிர் நால்இரு பதின்மரும்
            அடுத்து விழுநிதி பலவும் பிறவும்
            ஆணம் உடைத்தாக் கொடுப்பன் மற்றுஅவ்
 
              வாள்மிகு தானை வத்தவன் கைவிட்டு
            என்னொடு கூடி ஒருவ னாகப்
      155    பின்னைச் செய்வ பிறவும் பலஎன
            அன்னவும் பிறவும் அறிந்தவும் அல்லவும்
            ஆருணி உரைத்தவும் உரையா தனவும்
            ஆராய் வாளன் னகமுணக் கிளந்துஅவன்
            காரியக் கிளவியில் காரணங் காட்டலின்
 
        160    ஆய்பெருங் குருசில் அதுநனி விரும்பி
            நீயே சென்றுஅவன் வாயது கேட்டு
            வலிப்பதை எல்லாம் ஒளித்தனை உணர்ந்து
            வல்லே வருதி யாயின் எமக்கோர்
            செல்சார் வாகிச் சிறந்தோய் நீஎன
 
        165    எல்இருள் விடுப்ப வெழுந்தனன் போகி
            வஞ்சச் சூழ்ச்சி வருட காரன்
            தன்சொல் எல்லாம் சென்றவன் உரைப்பக்
 
              கெடல் ஊழ் ஆதலின் கேட்ட பொழுதே
            அடலருஞ் சீற்றத்து ஆருணி தெளிந்து
      170    முகனறிந்து உரைத்து முன்னியது முடிக்கும்
            சகுனி கௌசிகன் வருகெனத் தரீஇ
            ஒட்டா மன்னன் உதயண குமரனை
            நட்டான் ஆகி நாட்ட வந்த
            தண்டத் தலைவன் தளர்வில் ஊக்கத்து
      175    வண்தளிர்ப் படலை வருட காரன்
            நம்பால் பட்டனன் அவன்வலித் ததைஎலாம்
            திண்பாற் றாகத் தெளிந்தனன் இவனெனச்
 
 

            சென்றவன் காட்டி............
            ஒன்றிய கருமத்து உள்பொருள் எல்லாம்
      180    சென்றறிந்து இன்னும் வம்மின் நீரென
            நன்றறி வாளர் நால்வரைப் பணிப்ப
            அருளியது எல்லாம் ஆகென அடிபணிந்து
            இருளிடைப் போந்தவன் குறுகினர் மறைந்துஎன். 

(25. அரசமைச்சு முற்றிற்று)