3. யாழ் பெற்றது

 

இதன்கண் : பத்திராபதியின் என்பு முதலியவற்றைக் கொணரும்படி உதயணன் ஒருசிலரை விடுத்தலும், பத்திராபதி வீழ்ந்த இடத்தில் அதற்கு உருவச்சிற்பம் செய்வித்து அதற்குப் பூசை முதலியவற்றை நிகழ்த்துவித்தற்கு முயலலும், அவன் பத்திராபதியின் என்பு முதலியவற்றைக் கொணர்ந்தார்க்குப் பொருள் வழங்குதலும், அருஞ்சுகன் என்னும் அந்தணாளன் இயல்பும், அவன் வேங்கை மரத்திலேறி நோக்குதலும், அவன் உதயணனது கோடபதி என்னும் யாழினைக் காண்டலும், அவன் அந்த யாழினை எடுத்துவந்து தன்தமர் இல்லத்தில் இயக்குதலும், அவ் ஒலியைக் கேட்ட உதயணன் ஆராய்ந்து துணிதலும், அவன் அந்த யாழினை இயக்குபவனை அழைப்பித்தலும், வயந்தகன் செயலும் உதயணன் செயலும் கூறப்படும்.
 
              பாயநன் நாடு பைதல் தீர்ந்தபின்
            ஏயர் பெருமகன் சேயது நோக்கி
            விசையுடை இரும்பிடி வீழ்ந்த தானம்
            அசைவி லாளர்க்கு அறியக் கூறி
    5       என்புந் தோலும் உள்ளவை எல்லாம்
            நன்கனம் நாடிக் கொண்டனிர் வம்மின்என்று
            அங்குஅவர்ப் போக்கிய பின்றை அப்பால்      
 
 

            வெங்கண் செய்தொழில் வேட்டுவத் தலைவரொடு
            குன்றச் சாரல் குறும்பரைக் கூஉய்
    10       அடவியுள் வீழ்ந்த கடுநடை இரும்பிடி
            நம்மாட்டு உதவிய நன்னர்க்கு ஈண்டொரு
            கைம்மாறு ஆற்றுதல் என்றும் இன்மையின்
            உதவி செய்தோர்க்கு உதவார் ஆயினும்
            மறவி இன்மை மாண்புடைத்து அதனால்

 
              மறவி இன்மை மாண்புடைத்து அதனால்
    15       கோடுஉயர் வரைப்பின்ஓர் மாடம் எடுப்பித்து
            ஈடமை படிவம் இரும்பிடி அளவா
            ஏற்ப எடுப்பித்து எல்லியும் காலையும்
            பாற்படல் பரப்பிப் பணிந்துகை கூப்பி
            வழிபாடு ஆற்றி வழிச்செல் வோர்கட்கு
    20      அழிவுநன்கு அகல அரும்பதம் ஊட்டாத்
            தலைநீர்ப் பெருந்தளி நலன்அணி கொளீஇ
            எனைவர் ஆயினும் இனைவோர்க்கு எல்லாம்
            முனைவெம் துப்பின முன்அவண் ஈகென
            விருத்தி கொடுத்துத் திருத்தகு செய்தொழில்
 
              விருத்தி கொடுத்துத் திருத்தகு செய்தொழில்
    25      தச்ச மாக்களொடு தலைநின்று நடாஅம்
            அச்ச மாக்களை அடையப் போக்கிப்
            பத்திரா பதியின் படிமம் இடூஉஞ்
            சித்திர காரருஞ் செல்கெனச் சொல்லி
            ஆராக் கவலையின் அதுபணித்து அதன்பின்
 
      30      ஊரக வரைப்பின் உள்ளவை கொணர்ந்தார்க்கு
            இன்னுரை அமிழ்தமொடு மன்னவன் நீத்துக்
            கோப்புக அமைத்த கொற்ற வாயிலும்
            யாப்புற வதன்பெயர் பாற்படக் கொளீஇ
            வாயின் முன்றில் அவைப்புற மாகச்
    35      சேயுயர் மாடம் சித்திரத்து இயற்றி   
            உயிர்பெற வுருவ மிடீஇ யதனைச
 
              உயிர்பெற வுருவ மிடீஇ யதனைச்
            செயிர்தீர் சிறப்பொடு சேர்ந்துஅவண் வழிபடு
            நான்மறை யாளர் நன்றுஉண் டாகெனத்
            தாமுறை பிழையார் தலைநின்று உண்ணும்
    40      சாலையும் தளியும் பாலமைத்து இயற்றிக்
            கூத்தியர் இருக்கையுஞ் சுற்றிய தாகக்
            காப்பிய வாசனை கலந்தவை சொல்லி
            எண்ணிய துன்னும் ஏண்தொழில் அறாஅக்
            குழாஅம் மக்களொடு திங்கள் தோறும்
    45      விழாஅக் கொள்கென வேண்டுவ கொடுத்துத்
            தன்நகர்க் கடப்பாடு ஆற்றிய பின்னர்
 
              மதில்உஞ் சேனையுள் மாணி ஆகிய
            அதிர்வில் கேள்வி அருஞ்சுகன் என்னும்
            அந்த ணாளன் மந்திரம் பயின்றநல்
    50      வகைஅமை நன்னூல் பயன்நனி பயிற்றித்
            தலமுதல் ஊழியில் தானவர் தருக்குஅறப்
            புலமக ளாளர் புரிநரப்பு ஆயிரம்
            வலிபெறத் தொடுத்த வாக்குஅமை பேரியாழ்ச்
            செலவுமுறை எல்லாஞ் செய்கையில் தெரிந்து
 
      55      மற்றை யாழும் கற்றுமுறை பிழையான்
            பண்ணும் திறனும் திண்ணிதின் சிவணி
            வகைநயக் கரணத்துத் தகைநய நவின்று
            நாரத கீதக் கேள்வி நுனித்துப்
            பரந்தஎந் நூற்கும் விருந்தினன் அன்றித்
    60      தண்கோ சம்பிதன் தமர்நகர் ஆதலின்
            கண்போல் காதலர்க் காணிய வருவோன்
 
              சதுவகை வேதமும் அறுவகை அங்கமும்
            விதிஅமை நெறியில் பதினெட் டாகிய
            தான விச்சையும் தான்துறை போகி
    65      ஏனைக் கேள்வியும் இணைதனக்கு இல்லவன்
            கார்வளி முழக்கின் நீர்நசைக்கு எழுந்த
            யானைப் பேரினத்து இடைப்பட்டு அயலதோர்
 
              யானைப் பேரினத்து இடைப்பட்டு அயலதோர்
            இமையோர் உலகின் கேணி ஆகிய
            கான வேங்கைக் கவர்சினை ஏறி
    70      அச்சம் எய்தி எத்திசை மருங்கினும்
            நோக்கினன் அருகே ஆக்கம் இன்றி
 
              நோக்கினன் அருகே ஆக்கம் இன்றி
            இறைவன் பிரிந்த இல்லோள் போலவும்
            சுருங்ககம் ஞெகிழ்ந்து.........
            பத்தற்கு ஏற்ற பசைஅமை போர்வை
    75      செத்துநிறங் கரப்பச் செழுவளங் கவினிய
            கொய்தகை கொடியொடு மெய்யுற நீடிய
            கரப்புஅமை நெடுவேய் நரப்புப்புறம் வருடத்
            தாஅம் தீம்எனத் தண்இசை முரலத்
            தீந்தொடைத் தேன்இனம் செற்றி அசைதர
    80      வடிவேல் தானை வத்தவர் பெருமகன்
            படிவ விரதமொடு பயிற்றிய நல்லியாழ்
 
              கடிமிகு கானத்துப் பிடிமிசை வழுக்கி
            வீழ்ந்த எல்லை முதலா என்றும்
            தாழ்ந்த தண்வளி எறிதொறும் போகா
    85      அந்தர மருங்கின் அமரர் கூறும்
            மந்திரம் கேட்கும் செவிய போலக்
            கையும் காலும் ஆட்டுதல் செய்யா
            மெய்யொடு மெய்உறக் குழீஇ மற்றவை
            பிறப்புணர் பவைபோல் இறப்பவும் நிற்ப
    90      .................. வேழம் எல்லாம்
            சோர்ந்து கடுங்கதம் சுருங்குபு நீங்கக்
 
              கிடந்தது கண்டே நடுங்குவனன் ஆகி
            யானை நீங்கலும் தான்அவண் குறுகிக்
            கின்னரர் இட்டனர் ஆயினும் மியக்கர்
    95      மெய்ம்மறந்து ஒழிந்தனர் ஆயினும் மேலைத்
            தேவர் உலகத்து இழிந்தது ஆயினும்
            யாவது ஆயினும் யான்கொள துணிந்தனென்
            வலியாது எனக்கு வம்மின் நீரெனப்
            பலியார் நறுமலர் பற்பல தூஉய்
    100      வழுக்கா மரபின் வழுத்தினன் கொண்டு
 
              கானம் நீந்திச் சேனை வேந்தன்
            அழுங்கல்இ லாவணச் செழுங்கோ சம்பி
            மன்னவன் கோயில் துன்னிய ஒருசிறை
            இன்பல சுற்றமொடு நன்கனம் கெழீஇத்
    105      தண்கெழு மாலைத் தன்மனை வரைப்பில்
            இன்ப இருக்கையுள் யாழ்இடந் தழீஇ
            மெய்வழி வெந்நோய் நீங்கப் பைஎனச்
            செவ்வழி இயக்கலின் சேதியர் பெருமகன்
 
              செவ்வழி இயக்கலின் சேதியர் பெருமகன்
            வழிப்பெருந் தேவியொடு வான்தோய் கோயில்
    110      பழிப்பில் பள்ளியுள் பயின்றுவிளை யாடி
            அரிச்சா லேகம் அகற்றினன் இருந்துழி
            ஈண்டைஎம் பெருமகன் வேண்டா யாகி
            மறந்தனை எம்வயின் வலிதுநின் மனன்என
            இறந்தவை கூறி இரங்குவது ஒப்பத்
    115      தொடைப்பெரும் பண்ணொலி துவைத்துச்செவிக்கு இசைப்பக்
 
              கொடைப்பெரு வேந்தன் குளிர்ந்தனன் ஆகிஎன்
            படைப்பரும் பேரியாழ்ப் பண்ஒலி இதுவென
            ஓர்த்த செவியன் தேர்ச்சியில் தெளிந்து
            மெய்காப் பாளனை அவ்வழி ஆய்வோன்
 
      120      மருங்குஅறைக் கிடந்த வயந்தக குமரன்
            விரைந்தனன் புக்கு நிகழ்ந்ததை என்னெனக்
            கூட்டமை வனப்பின் கோட பதிக்குரல்
            கேட்டனன் யானும் கேண்மதி நீயும்
            விரைந்தனை சென்றுநம் அரும்பெறல் பேரியாழ்
    125      இயக்கும் ஒருவனை இவண்தரல் நீயென
 
              மயக்கமில் கேள்வி வயந்தகன் இழிந்து
            புதிதின் வந்த புரிநூ லாளன்
            எதிர்மனை வரைப்பகம் இயைந்தனன் புக்கு
            வீறமை வீணைப் பேறுஅவன் வினாவ
    130      நருமதை கடந்தோர் பெருமலைச் சாரல்
            பெற்ற வண்ணம் மற்றவன் உரைப்பக்
            கொற்றவன் தலைத்தாள் கொண்டவன் குறுகி
            வேற்றோன் பதிநின்று ஆற்றலில் போந்த
            அன்றை நள்இருள் அரும்பிடி முறுகக்
    135      குன்றகச் சாரல் தென்திசை வீழ்ந்த
            பேரியாழ் இதுவெனப் பெருமகன்கு உரைப்பத்
 
              தாரார் மார்பன் தாங்கா உவகையன்
            வருகஎன் நல்லியாழ் வத்தவன் அமுதம்
            தருகவென் தனித்துணை தந்தோய் நீஇவண்
    140      வேண்டுவது உரைஎன்று ஆண்டவன் வேண்டும்
            அருங்கல வெறுக்கையொடு பெரும்பதி நல்கி
            அந்நகர் இருக்கப் பெறாஅய் நீயெனத்
            தன்னகர் அகத்தே தக்கவை நல்கி
            உலவா விருப்பொடு புலர்தலை காறும்
    145      உள்ளியும் முருகியும் புல்லியும் புணர்ந்தும்
            பள்ளிகொண் டனனால் பாவையை நினைந்துஎன்.
 

 3. யாழ் பெற்றது முற்றிற்று.