6. பதுமாபதியை வஞ்சித்தது

 

அஃதாவது : உதயணன் பதுமாபதியை வஞ்சித்து அகற்றித் தனித்துத் துயில்கொண்ட செய்தியைக் கூறும் பகுதி என்றவாறு.
 
             பிரிந்துபின் வந்த பெருந்திறல் அமைச்சனொடு
           அருந்திறல் வேந்தன் அமைவரக் கூடி
           இருந்த பின்றை நிகழ்ந்தது கூறுஎனசி
 
             செருச்செய் மன்னன் சிறையிடைச் செய்தலும்
    5      தருசகன் தன்வயின் விடுத்த தன்மையும்
           பொருவகை புரிந்தவர் புணர்ந்த நீதியும்
           தெரிய எல்லாம் விரியக் கூறி
 
             அந்நிலை கழிந்த பின்நிலைப் பொழுதின்
           இன்புறு செவ்வியுள் இன்னது கூறுஎன
    10      வன்புறை ஆகிய வயந்தகன்கு உணர்த்த
 
             உருமண் ணுவாவினொடு ஒருங்குகண் கூடித்
           தருமணல் ஞெமரிய தண்பூம் பந்தருள்
           திருமலி மார்பன் தேவி பயிற்றிய
           வீணை பெற்றது விரித்தவன் உரைத்துத்
    15      தேன்நேர் கிளவியைத் தேடி அரற்ற
 
             மானங் குன்றா வயந்தகன் கூறும்
           நயந்துநீ அரற்றும் நன்னுதல் அரிவையும்
           பயந்த கற்பின் பதுமா பதியும்என்
           திருவ ருள்ளும் தெரியுங் காலை
    20     யாவர் நல்லவர் அறிவினும் ஒழுக்கினும்
           யாவரை உவத்தி யாவதை உணரக்
           காவ லாள கரவாது உரைஎன  
 
             முறுவல் கொண்டவன் அறியும் ஆயினும்
           பல்பூண் சில்சொல் பட்டத் தேவியைச்
    25     சொல்லாட்டு இடையும் செல்லல் தீர்தலின்
           பீடுடை ஒழுக்கின் பிரச்சோ தனன்மகள்
           வாடிடை மழைக்கண் வாசவ தத்தை
           கண்அகன் ஞாலத்துப் பெண்அருங் கலம்அவள்
           செறுநர் உவப்பச் செந்தீ அகவயின்
    30     உறுதவம் இல்லேற்கு ஒளித்தனள் தான்என
           மறுகுஞ் சிந்தை மன்னனை நோக்கி     
 
             வெங்கண் வேந்தர் தங்கட்கு உற்ற
           தங்கண் ஞாலத் தாரே ஆயினும்
           அகல்இடத்து உரைப்பின் அற்றம் பயத்தலின்
    35     அவரின் வாழ்வோர் அவர்முன் நின்றவர்
           இயல்பின் நீர்மை இற்றென உரைப்பின்
           விம்மம் உறுதல் வினாவதும் உடைத்தோ
           அற்றே ஆயினும் இற்றுங் கூறுவென்
 
             நயக்குங் காதல் நல்வளைத் தோளியைப்
    40     பெயர்க்கும் விச்சையின் பெரியோன் கண்டவன்
           உவக்கும் உபாயம் ஒருங்குடன் விடாது
           வழிபாடு ஆற்றி வல்லிதின் பெறீஇய
           கழிபெருங் காதலொடு சென்றபின் அவ்வழிக்
 
             கழிபெருங் காதலொடு சென்றபின் அவ்வழிக்
           காசி அரசன் பாவையைக் கண்டே
    45     வாசவ தத்தையை மறந்தனை யாகிப்
           பரவை அல்குல் பதுமா பதியோடு
           இரவும் பகலும் அறியா இன்புற்று
           உள்குவரு கோயிலுள் ஒடுங்குவனை உறைந்தது
           மற்போர் மார்ப மாண்புமற்று உடைத்தேர்
 
      50     அன்னதும் ஆக அதுவே ஆயினும்
           திண்ணிதின் அதனையும் திறப்படப் பற்றாய்
           பின்இது நினைக்கும் பெற்றியை ஆதலின்
           ஒருபால் பட்டது அன்றுநின் மனன்எனத்
 
             திருவார் மார்பன் தெரிந்தவற்கு உரைக்கும்
    55     வடுவாழ் கூந்தல் வாசவ தத்தையொடு
           இடைதெரிவு இன்மையின் அவளே இவளென
           நயந்தது நெஞ்சம் நயவாது ஆயினும்
           பால்வகை வினையில் படர்ந்த வேட்கையை
           மால்கடல் வரைப்பின் மறுத்தனர் ஒழுகுதல்
    60     யாவர்க்கு ஆயினும் ஆகாது அதுவென
           மேவரக் காட்டலும் மீட்டுங் கூறுவனி
 
             அறியான் இவன்எனல் நெறியில் கேண்மதி
           அன்றுநாம் கண்ட அரும்பெறல் அந்தணன்
           இன்றுநாம் காண இந்நகர் வந்தனன்
    65     மான்நேர் நோக்கி மாறிப் பிறந்துழித்
           தானே ஆகத் தருகுவென் என்றனன்
           பனிமலர்க் கோதைப் பதுமையை நீங்கித்
           தனியை ஆகித் தங்குதல் பொருளெனக்
 
             கேட்டே உஉவந்து வேட்டவன் விரும்பி
    70     மாற்றும் மன்னரை மருங்குஅறக் கெடுப்பதோர்
           ஆற்றம் சூழ்ச்சி அருமறை உண்டெனத்
           தேவி முதலா யாவிரும் அகல்மின்என்று
           ஆய்மணி மாடத்து அவ்விடத்து அகன்று
           திருமணக் கிழமைப் பெருமகள் உறையும்
    75     பள்ளிப் பேர்அறை யுள்விளக்கு உறீஇ.
 
             மயிரினும் தோலினும் நூலினும் இயன்ற
           பயில்பூஞ் சேக்கையுள் பலர்அறி வின்றி
           உழைக்கலச் சுற்றமும் ஒழித்தனன் ஆகி
           விழுத்தகு வெண்துகில் விரித்தனன் உடுத்துத்
    80     தூயன் ஆகி வாய்மொழி பயிற்றித்
           தோள்துணை மாதரை மீட்டனை பணிஎன
           வாள்படை மறவன் காட்டிய வகைமேல்
           சேண்புலம்பு அகலச் சிந்தை நீக்கி
           வீணை கைவலத்து இரீஇ விதியுளி
    85     ஆணை வேந்தன் அமர்ந்தனன் துயில்என்.
 

6.பதுமாபதியை வஞ்சித்தது முற்றிற்று