7. வாசவதத்தை வந்தது

 

இதன்கண்: அமைச்சர் தனித்துத் துயிலா நின்ற உதயணன் பால் வாசவதத்தையைக் கொணர்ந்து விடுத்தலும், உதயணனுடைய நிலையும், வாசவதத்தை செயலும் உறங்கும் உதயணனுடைய செயலும், வாசவதத்தை வாளாவிருத்தலும், உதயணன் அரற்றலும், அமைச்சர் வாசவதத்தையை உதயணனிடமிருந்து பிரித்தலும், உதயணன் விழித்து அரற்றலும், வயந்தகன் உதயணனிடம் கூறலும், உதயணன் கூற்றும், வயந்தகன் கூற்றும், உதயணன் செயலும், அவன் வயந்தகனுக்குக் கூறலும் யூகியின் நிலைமையும், வாசவதத்தையின் நிலைமையும், உதயணன் யூகியை அறிந்துகொண்டு தழுவலும் வாசவதத்தை வருகையும் அவள் செயலும், உதயணன் சாங்கியத் தாயை நோக்கிக் கூறலும், யாவரும் நகர் செல்லுதலும் கூறப்படும்.
 
             ஆணை வேந்தன் அமர்ந்துதுயில் பொழுதின்
           வாள்நுதல் மாதரை மதியுடை அமைச்சர்
           அன்புயாத்து இயன்ற தன்பால் கணவன்
           மண்பால் செல்வ மாற்றி மற்றோர்
    5      பெண்பால் செல்வம் பேணுதல் இன்மையும்
 
             எரிசின மொய்ம்பின் தரிசகன் தங்கை
           பண்பொடு புணர்ந்த பதுமா பதியையும்
           பொருபடை வேந்தனை வெரீஇப் புணர்த்த
           கருமக் காமம் அல்லது அவள்மாட்டு
    10      ஒருமையின் ஓடாது புலம்பும் உள்ளமும்
           இரவும் பகலும் அவள்மாட்டு இயன்ற
           பருவரல் நோயோடு அரற்றும் படியும்
           இன்னவை பிறவும் நன்னுதல் தேற
 
             மறப்பிடைக் காட்டுதல் வலித்தனர் ஆகிச்
    15      சிறப்புடை மாதரைச் சிவிகையில் தரீஇப்
           பெறற்குஅருங் கொழுநன் பெற்றி காண்கென
           ஆய்மணி விளக்கத்து அறையகம் புகுத்தலின
 
             மாமணித் தடக்கை மருங்கில் தாழ்தரத்
           தன்பால் பட்ட அன்பினன் ஆகிக்
    20     கரண நல்லியாழ் காட்டுங் காலை
           மரணம் பயக்கும் மதர்வைத் தாயநின்
           கடைக்கண் நோக்கம் படைப்புண் அகவயின்
           அழல்நெய் பெய்தென்று ஆற்றேன் என்னை
           மழலைஅம் கிளவி மறந்தனை யோஎன
    25     வாய்சோர்ந்து அரற்றா வாசம் கமழும்
           ஆய்பூந் தட்டத்து அகத்தோடு தெற்றிய
           தாமம் வாட்டும் காம உயிர்ப்பினன்
           கனவில் நினையுங் கணவனைக் கண்டே
 
             நனவினும் இதுவோ நறுந்தார் மார்பன்
    30     தன்அலது இல்லா நன்நுதல் மகளிரை
           மறுதரவு இல்லாப் பிரிவிடை அரற்றுதல்
           உறுகடல் வரைப்பின் உயர்ந்தோற்கு இயல்பெனல்
           கண்டனென் என்னுந் தண்டா உவகையள்
 
             நூல்நெறி வழாஅ நுனிப்பொழுக்கு உண்மையின்
    35     ஏனை உலகமும் இவற்கே இயைகெனக்
           கணவனை நோக்கி இணைவிரல் கூப்பி
           மழுகிய ஒளியினள் ஆகிப் பைஎனக்
           கழுமிய காதலொடு கைவலத்து இருந்த
           கோட பதியின் சேடுஅணி கண்டே
    40     மகக்காண் தாயின் மிகப்பெரிது விதும்பிச்     
 
             சார்ந்தனள் இருந்து வாங்குபு கொண்டு
           கிள்ளை வாயின் அன்ன வள்உகிர்
           நுதிவிரல் சிவப்பக் கதிஅறிந்து இயக்கலின்
           காதலி கைந்நயக் கரணம் காதலன்
    45     ஏதம்இல் செவிமுதல் இனிதின் இசைப்ப
 
             வாசவ தத்தாய் வந்தனை யோஎனக்
           கூந்தல் முதலாப் பூம்புறம் நீவி
           ஆய்ந்த திண்தோள் ஆகத்து அசைஇ
           என்வயின் நினையாது ஏதிலை போல
    50     நன்நுதல் மடவோய் நாள்பல கழிய
           ஆற்றிய வாறுஎனக்கு அறியக் கூறுஎன்
 
             மாற்றுஉரை கொடாஅள் மனத்தோடு அலமரீஇக்
           கோட்டுவனள் இறைஞ்சிக் கொடுங்குழை இருப்ப
 
             மயங்குபூஞ் சோலை மலைவயின் ஆடிப்
    55     பெயர்ந்த காலை நயந்தனை ஒருநாள்
           தழையும் கண்ணியும் விழைவன தம்என
           வேட்டம் போகிய போழ்தில் கோட்டம்
           கூர்எரி கொளுவ ஆரஞர் எய்தி
           இன்னுயிர் நீத்த இலங்கிழை மடவோய்
    60     நின்அணி எல்லாம் நீக்கி ஓராப்
           பின்அணி கொண்டு பிறளே போன்றனை
 
             எரிஅகப் பட்டோர் இயற்கை இதுவோ
           தெரியேன் எனக்கிது தெரியக் கூறுஎன
           ஆனா உவகையொடு அவள்மெய் தீண்டியும்
    65     தேன்ஆர் படலைத் திருவளர் மார்பன்
           கனவென அறியான் காதலின் மறுத்தும்
 
             சினமலி நெடுங்கண் சேர்த்திய பொழுதின்
           வழுக்கில் சீர்த்தி வயந்தகன் அடைஇ
           ஒழுக்கியல் திரியா யூகியொடு உடனே
    70     நாளை யாகும் நண்ணுவது இன்றுநின்
           கேள்வன் அன்பு கெடாஅன் ஆகுதல்
           துயிலுறு பொழுதின் தோன்றக் காட்டுதல்
           அயில்வேல் கண்ணி அதுநனி வேண்டித்
           தந்தேம் என்பது கேளெனப் பைந்தொடி
 
             தந்தேம் என்பது கேளெனப் பைந்தொடி
    75     புனைகொல் கரையின் நினைவனள் விம்மி
           நிறைஇலள் இவளென அறையுநன் கொல்என
           நடுங்கிய நெஞ்சமொடு ஒடுங்கீர் ஓதி
           வெம்முலை ஆகத்துத் தண்எனக் கிடந்த
           எழுப்புரை நெடுந்தோள் மெல்என எடுத்து
    80     வழுக்கில் சேக்கையுள் வைத்தனள் வணங்கி
           அரும்பெறல் யாக்கையின் அகலும் உயிர்போல்
           பெரும்பெயர்த் தேவி பிரிந்தனள் போந்துதன்
           ஈனாத் தாயோடு யூகியை எய்தப்
 
             போரார் குருசில் புடைபெயர்ந்து உராஅய்
    85     மறுமொழி தாராய் மடவோய் எனக்கென
           உறுவரை மார்பத்து ஒடுக்கிய புகுவோன்
           காணான் ஆகிக் கையறவு எய்தி
           ஆனா இன்துயில் அனந்தர் தேறிப்
           பெருமணி பெற்ற நல்குர வாளன
    90     அருமணி குண்டு கயத்திட் டாங்குத்
           துயிலிடைக் கண்ட துணைநலத் தேவியை
           இயல்புடை அம்கண் ஏற்றபின் காணாது
           அரற்றும் மன்னனை அருமறை நாவின்
 
             அரற்றும் மன்னனை அருமறை நாவின்
           வயத்தகு வயந்தகன் வல்விரைந்து எய்தி
    95     இருளும் பகலும் எவ்வமொடு இரங்குதல்
           பொருள்அஃ தன்றே புரவலர் மாட்டெனக்
           காரணக் கிளவி கழறுவனன் காட்டத்
 
             தேரணி சேனைத் திறன்மீக் கூரிய
           பிடிமகிழ் யானைப் பிரச்சோ தனன்மகள்
    100     வடிமலர்த் தடங்கண் வாசவ தத்தைஎன்
           பள்ளிப் பேரறை பைஎனப் புகுந்து
           நல்லியாழ் எழீஇ நண்ணுவனள் இருப்ப
 
             வாச வெண்ணெய் இன்றி மாசொடு
           பிணங்குபு கிடந்த பின்னுச்சேர் புறத்தொடு
    105     மணங்கமழ் நுதலும் மருங்குலும் நீவி
           அழிவுநனி தீர்ந்த யாக்கையேன் ஆகிக்
           கழிபேர் உவகையொடு கண்படை கொளலும்
           மறுத்தே நீங்கினள் வயந்தக வாராய்
           நிறுத்தல் ஆற்றேன் நெஞ்சம் இனிஎனக்
 
      110     கனவில் கண்டது நனவின் எய்துதல்
           தேவர் வேண்டினும் இசைதல் செல்லாது
           காவ லாள கற்றோர் கேட்பின்
           பெருநகை இதுவெனப் பேர்த்துஉரை கொடாஅ
           ஆடலும் நகையும் பாடலும் விரைஇ
    115     மயக்கமில் தேவி வண்ணங் கொண்டோர்
           இயக்கி உண்டுஈண்டு உறைவதை அதற்கோர்
           காப்பமை மந்திரம் கற்றனென் யான்என
           வாய்ப்பறை அறைந்து வாழ்த்துப்பல கூறி
           ஒருதலைக் கூற்றொடு திரிவிலன் இருப்பப்
 
      120     பண்டே போலக் கண்படை மம்மருள்
           கண்டேன் நானே கனவன்று ஆயின்
           மாறி நீங்குமோ மடமொழி தான்எனத்
           தேறியுந் தேறான் திருஅமர் மார்பன்
           நள்இருள் நீங்கலும் பள்ளி எழுந்து
    125     காமர் சுற்றம் கைதொழுது ஏத்தத்
           தாமரைச் செங்கண் தகைபெறக் கழீஇக்
 
             குளம்புங் கோடும் விளங்குபொன் அழுத்திச்
           சேடுஅணி சேதா விளையன இன்னே
           கோடி முற்றிக் கொண்டனிர் வருகஎனத்
    130     தெரிமலர்க் கோதைத் தேவியை உள்ளி
           அருமறை யாளர்க்கு எழுமுறை வீசி
 
             நனவில் கண்ட நன்னுதல் மாதரைக்
           கனவெனக் கொண்டலின் இனியோர்க்கும் உரையான்
           காமுறு நெஞ்சில் காதலர்ப் பிரிந்தோர்க்கு
    135     ஏமுறு வேட்கை ஆகும் என்பது
           ஈதுகொல் என்னப் பற்பல நினைஇ
           இருந்த செவ்வியுள் வயந்தகன் குறுகி
 
             ஆனாச் செல்வத்து அந்தணன் மற்றுநாம்
           மேனாள் நிகழ்ந்த மேதகு விழுமத்து
    140     அறம்பொருள் இன்பம் என்ற மூன்றினும்
           சிறந்த காதலி சென்றுழித் தரூஉம்
           மகதத்து எதிர்ந்த தகுதி யாளன்
           மதுகாம் பீர வனம்எனுங் காவினுள்
           புகுதந்து இருந்து புணர்க்கும் இன்வண்
    145     சேறும் எழுகெனச் சிறந்தனன் ஆகி
 
             மாறா மகிழ்ச்சியொடு மன்னவன் விரும்பிக்
           கொடுஞ்சி நெடுந்தேர் கோல்கொள ஏறி
           நெடுங்கொடி வீதி நீந்துபு போகி
           வித்தக வினைஞர் சித்திரம் ஆக
    150     உறழ்படச் செய்த ஒண்பூங் காவின்
           எறுழ்மிகு மொய்ம்பன் இழிந்தகம் புகவே
 
             நோயற எறியும் மருந்தோர் அன்ன
           வாய்மொழிச் சூழ்ச்சித் தோழற்கு உணர்த்தலின்
           குழன்ற குஞ்சி நிழன்றுஎருத்து அலைத்தரக்
    155     கழுவாது பிணங்கிய வழுவாச் சடையினன்
           மறப்போர் ஆனையின் மதந்தவ நெருக்கி
           அறப்பேர் ஆண்மையின் அடக்கிய யாக்கையன்
           கல்உண் கலிங்கம் கட்டிய வரையினன்
           அல்ஊண் நீத்தலின் அஃகிய உடம்பினன்
    160     வெற்ற வேந்தன் கொற்றம் கொள்கெனச்
           செற்றம் தீர்ந்த செய்தவச் சிந்தையன்
 
             நன்நுதல் அரிவையும் பொன்எனப் போர்த்த
           பசலை ஆக்கையொடு பையுள் எய்தி
           உருப்புஅவிர் மண்டிலத்து ஒருவயி னோடும்
    165     மருப்புப் பிறையின் மிகச்சுடர்ந்து இலங்காது
           புல்எனக் கிடந்த நுதலினொடு அலமந்து
           இயல்பில் திரியா இன்பெருங் கிழவனை
           வியலக வரைப்பின் மேவர வேண்டி
           விரத விழுக்கலம் விதியுளி அணிந்து
 
      170     திரிதல் லில்லாச் செந்நெறிக் கொள்கையள்
           பொன்நிறை சுருங்கா மண்டிலம் போல
           நன்நிறை சுருங்காள் நாள்தொறும் புறந்தரூஉத்
           தன்னெறி திரியாத் தவமுது தாயொடும்
           விருத்துக் கோயிலுள் கரப்பறை இருப்ப
 
      175     யாப்புடைத் தோழன் அரசனோடு அணுகிக்
           காப்புடை முனிவனைக் காட்டினன் ஆக
           மாசின் மகதத்துக் கண்டோன் அல்லன்
           யூகி மற்றிவன் ஒளியலது எல்லாம்
           ஆகான் ஆகலும் அரிதே மற்றுஇவன்
    180     மார்புற முயங்கலும் வேண்டும்என் மனன்என
           ஆராய் கின்றோற்கு அகலத்துக் கிடந்த
           பூந்தண் மாலையொடு பொங்குநூல் புரள
           இதுகுறி காண்என இசைப்பது போல
           நுதிமருப் பிலேகை நுண்ணிது தோன்ற
 
      185     ஐயந் தீர்ந்து வெய்துயிர்த்து எழுந்துநின்று
           ஊறில் சூழ்ச்சி யூகந்த ராய
           நாறிருங் கூந்தலை மாறிப் பிறந்துழிக்
           காணத் தருகுறு முனிவனை நீஇனி
           யாணர்ச் செய்கை உடைத்தது தெளிந்தேன்
    190     வந்தனை என்றுதன் சந்தன மார்பில்
           பூந்தார் குழையப் புல்லினன் பொருக்கெனத்
 
             தீந்தேன் கலந்த தேம்பால் போல
           நகையுருத்து எழுதரு முகத்தன் ஆகித்
           துறந்தோர்க்கு ஒத்தது அன்றுநின் சிறந்த
    195     அருள்வகை என்னா அகலுந் தோழனைப்
           பொருள்வகை ஆயினும் புகழோய் நீயினி
           நீங்குவை ஆயின் நீங்குமென் உயிரெனப்
 
             பூங்குழை மாதரைப் பொருக்கெனத் தம்மென்று
           ஆங்கவன் மொழிந்த அல்லல் நோக்கி
    200     நன்னுதல் மாதரைத் தாயொடு வைத்த
           பொன்னணி கோயில் கொண்டனர் புகவே
 
             காரியம் இதுவெனச் சீரிய காட்டி
           அமைச்சர் உரைத்தது இகத்தல் இன்றி
           மணிப்பூண் மார்பன் பணித்தொழில் அன்மை
    205     நல்ஆ சாரம் அல்லது புரிந்த
           கல்லாக் கற்பிற் கயத்தியேன் யானென
           நாண்மீ தூர நடுங்குவனள் எழுந்து
 
             தோள்மீ தூர்ந்த துயரம் நீங்கக்
           காந்தள் நறுமுகை கவற்று மெல்விரல்
    210     பூண்கலம் இன்மையிற் புல்லெனக் கூப்பிப்
 
             பிரிவிடைக் கொண்ட பின்னணி கூந்தல்
           செருவடு குருசில் தாள்முதல் திவள
           உவகைக் கண்ணீர் புறவடி நனைப்பக்
           கருவி வானில் கார்த்துளிக் கேற்ற
    215    அருவி வள்ளியின் அணிபெறு மருங்குலள்
           இறைஞ்சுபு கிடந்த சிறந்தோள் தழீஇச்
           செல்லல் தீரப் பல்லூழ் முயங்கி
 
             அகல நின்ற செவிலியை நோக்கித்
           துன்பக் காலத்துத் துணைஎமக் காகி
    220    இன்பம் ஈதற்கு இயைந்துகை விடாது
           பெருமுது தலைமையின் ஒருமீக் கூரிய
           உயர்தவக் கிழமைநும் முடம்பின் ஆகிய
           சிற்றுப காரம் வற்றல் ; செல்லாது
           ஆல வித்தில் பெருகி ஞாலத்து
    225     நன்றி ஈன்றது என்றவள்கு ஒத்த
           சலமில் அருண்மொழி சாலக் கூறி     
 
             இரவிடைக் கண்ட வண்ணமொடு இலங்கிழை
           உருவம் ஒத்தமை உணர்ந்தனன் ஆகி
           ஆய்பெருங் கடிநகர் அறியக் கோயிலுள்
    230    தேவியை எய்திச் சிறப்புரை பரப்ப
           இருங்கண் முரசம் பெருந்தெரு அறைதலின்
 
             மாநகர் உவந்து மழைதொட நிவந்த
           சேணுயர் மாடத்து மீமிசை எடுத்த
           விரிப்பூங் கொடியொடு விழவயர்ந்து இயற்றி
    235    அமைச்சன் ஆற்றலும் நண்பினது அமைதியும்
           நயத்தகு நன்நுதல் இயற்பெரு நிறையும்
           வியத்தனர் ஆகி மதித்தனர் பகரப்
 
             பஞ்ச வண்ணத்துப் படாகை நுடங்கக்
           குஞ்சர எருத்தில் குடைநிழல் தந்த
    240    புண்ணிய நறுநீர் துன்னினர் குழீஇ
           அரசனும் தேவியும் தோழனும் ஆடி
           விலைவரம்பு அறியா விழுத்தகு பேரணி
           தலைவரம் பானவை தகைபெற அணிந்து
           கூறுதற்கு ஆகாக் குறைவில் இன்பமொடு
    245    வீறுபெற் றனரால் மீட்டுத்தலைப் புணர்ந்துஎன்.
 

7.வாசவத்தை வந்தது முற்றிற்று