8. தேவியைத் தெருட்டியது

 

இதன்கண்: உதயணன் பதுமாபதியை வாசவதத்தையைச் சென்று காணும்படி கூறுதலும், அவள் சென்று வாசவதத்தையைக் காண்டலும், உதயணன் யூகியை வினாதலும், அவன் கூறும் விடையும், உதயணன் யூகியைப் பாராட்டுதலும், வாசவதத்தையும் பதுமாபதியுமாகிய தேவியரிருவர் செயலும், உதயணன் வாசவதத்தைக்குக் கூறுதலும், அவள் சினத்தலும், உதயணன் வாசவதத்தையைத் தெருட்டலும் கூறப்படும்.
 
             மீட்டுத்தலைப் புணர்ந்த காலை மேவார்
           கூட்டம் வௌவிய கொடுஞ்சி நெடுந்தேர்
           உருவ வெண்குடை உதயண குமரன்
           ஒருநலத் தோழன் யூகந்த ராயன்கு
     5     அருளறம் படாஅன் அகத்தே அடக்கி
           முகனமர் கிளவி முன்னின்று உரைப்பின்
           ஏதின்மை ஈனும் ஏனோர் மாட்டெனக்
 
             காதல் தேவிக்குக் கண்ணாய் ஒழுகும்
           தவமுது மகள்குத் தாழ்ந்துஅருள் கூறிப்
    10      பயன்உணர் கேள்விப் பதுமா பதியைத்
           தாங்கரும் காதல் தவ்வையை வந்து
           காண்க என்றலும் கணங்குழை மாதரும்
 
             அரியார் தடங்கண் அவந்திகை அவன்தனக்கு
           உயிரேர் கிழத்தி ஆகலின் உள்ளகத்து
    15      அழிதல் செல்லாள் மொழிஎதிர் விரும்பிப்
           பல்வகை அணிகளுள் நல்லவை கொண்டு
           தோழியர் எல்லாம் சூழ்வனர் ஏந்தச்
           சூடுறு கிண்கிணி பாடுபெயர்ந்து அரற்றக்
           காவலன் நீக்கம் நோக்கி வந்து
 
      20     தாதுஅலர் கோதைத் தையலுக்கு இசைத்தவள்
           அணங்குஅருஞ் சீறடி வணங்கலின் வாங்கிப்
           பொன்பூண் வனமுலை பொருந்தப் புல்லிக்
           கற்புமேம் படீஇயர் கணங்குழை நீயென
           ஆசிடைக் கிளவி பாசிழை பயிற்றி
    25     இன்பம் சிறந்த பின்றை இருவரும்
 
            விரித்தரிது இயற்றிய வெண்கால் அமளிப்
          பழிப்பில் பள்ளி பலர்தொழ ஏறித்
          திருஇரண்டு ஒருமலர் சேர்ந்துஅவண் உறையும்
          பொருவுஅரும் உருவம் பொற்பத் தோன்றி
 
      30    பேர்அத் தாணியுள் பெரியோர் கேட்ப
          ஒன்னார்க் கடந்த யூகியை நோக்கி
          வென்வேல் உதயணன் விதியுளி வினவும்
          முன்னான் எய்திய முழுச்சிறைப் பள்ளியுள்
          இன்னா வெந்துயர் என்கண் நீக்கிய
    35    பின்னாள் பெயர்த்துநின் இறுதியும் பிறைநுதல்
          தேவியைத் தீயினுள் மாயையின் மறைத்ததும்
          ஆய காரணம் அறியக் கூறுஎனக்
          கொற்றவன் கூற மற்றுஅவன் உரைக்கும்     
 
             செங்கால் நாரையொடு குருகுவந்து இறைகொளப்
    40     பைங்கால் கமுகின் குலைஉதிர் படுபழம்
           கழனிக் காய்நெல் கவர்கிளி கடியும்
           பழன வைப்பில் பாஞ்சால ராயன்
           ஆற்றலின் மிக்க ஆருணி மற்றும்
           ஏற்றலர் பைந்தார் ஏயர்க்கு என்றும்
    45     நிலத்தொடு தொடர்ந்த குலப்பகை அன்றியும்
           தலைப்பெரு நகரமும் தனக்குஉரித் தாக்கி
           இருந்தனன் மேலும் இகழ்ச்சிஒன்று இலனாய்ப்
 
             இருந்தனன் மேலும் இகழ்ச்சிஒன்று இலனாய்ப்
           பிரச்சோ தனனோடு ஒருப்பாடு எய்தும்
           ஓலை மாற்றமும் சூழ்ச்சியும் துணிவும்
    50     காலம் பார்க்குங் கருமமும் எல்லாம்
           அகத்துஒற் றாளரின் அகப்பட அறிந்தவன்
           மிகப்பெரு முரட்சியை முருக்கும் உபாயம்
           மற்றுஇக் காலத்து அல்லது மேற்சென்று
           வெற்றிக் காலத்து வீட்டுதல் அரிதென
 
      55     அற்புப் பாசம் அகற்றி மற்றுநின்
           ஒட்ப இறைவியை ஒழித்தல் மரீஇக்
           கருமக் கட்டுரை காணக் காட்டி
           உருமண் ணுவாவோடு ஒழிந்தோர் பிறரும்
           மகதநன் னாடு கொண்டுபுக்கு அவ்வழி
    60     இகல்அடு நோன்தாள் இறைமகற்கு இளைய
           பதுமா பதியொடு வதுவை கூட்டிப்
           படைத்துணை யவனாப் பதிவயின் பெயர்ந்தபின்
 
             கொடைத்தகு குமரரைக் கூட்டினேன் இசையக்
           கொடித்தலை மூதுஎயில் கொள்வது வலித்தனென்
    65     மற்றவை எல்லாம் அற்றம் இன்றிப்
           பொய்ப்பொருள் பொருந்தக் கூறினும் அப்பொருள்
           தெய்வ உணர்வில் தெரிந்துமாறு உரையாது
           ஐயம் நீங்கிஎம் அறிவுமதித்து ஒழுகிய
           பெருமட மகடூஉப் பெருந்தகை மாதால்
    70     நின்னினும் நின்மாட்டுப் பின்னிய காதல்
           துன்னிய கற்பின் தேவி தன்னினும்
           எண்ணிய எல்லாம் திண்ணிய ஆயின்
 
             இருநிலம் விண்ணோடு இயைந்தனர் கொடுப்பினும்
           பெருநில மன்ன ரேஅதை அல்லது
    75     பழமையில் திரியார் பயன்தெரி மாக்கள்
           கிழமையில் செய்தனன் கெழுதகை தரும்எனக்
           கோல்நெறி வேந்தே கூறுங் காலை
           நூல்நெறி என்றியான் உன்னிடைத் துணிந்தது
           பொறுத்தனை அருளென நெறிப்படுத்து உரைப்ப
 
      80     வழுக்கிய தலைமையை இழுக்கம் இன்றி
           அமைத்தனை நீஎன அவையது நடுவண்
           ஆற்றுளிக் கூற அத்துணை ஆயினும்
           வேற்றுமைப் படும்அது வேண்டா ஒழிகென
           உயிர்ஒன் றாதல் செயிர்அறக் கூறி
 
      85     இருவரும் அவ்வழித் தழீஇயினர் எழுந்துவந்து
           ஒருபெருங் கோயில் புகுந்த பின்னர்
           வாசவ தத்தையொடு பதுமா பதியை
           ஆசில்அ லயினி மேவரத் தரீஇ
           ஒருகலத்து அயில்கென அருள்தலை நிறீஇயபின்
 
      90     வளங்கெழு செல்வத்து இளம்பெருந் தேவி
           அரும்பெறல் காதலன் றிருந்தடி வணங்கிஅப்
           பெருந்தகு கற்பின்எம் பெருமகள் தன்னொடு
           பிரிந்த திங்கள் எல்லாம் பிரியாது
           ஒருங்குஅவண் உறைதல் வேண்டுவல் அடிகள்
    95     அவ்வரம் மருளித் தருதஅன் குறைஎனத்
           திருமா தேவியொடும் தீவிய மொழிந்துதன்
           முதல்பெருங் கோயில்கு விடுப்பப் போயபின்
 
             பாடகச் சீறடிப் பதுமா பதியொடு
           கூடிய கூட்டக் குணம்தனை நாடி
    100     ஊடிய தேவியை உணர்வினும் மொழியினும்
           நாடுங் காலை நன்நுதல் மடவோய்
           நின்னொடு ஒத்தமை நோக்கி மற்றுஅவள்
           தன்னொடு புணர்ந்தேன் தளரியல் யான்என 
 
             ஒக்கும் என்றசொல் உள்ளே நின்று
    105     மிக் குநன்கு உடற்ற மேவலள் ஆகிக்
           கடைக்கண் சிவப்ப எடுத்துஎதிர் நோக்கி
           என்நேர் என்ற மின்நேர் சாயலைப்
           பருகுவனன் போலப் பல்ஊழ் முயங்கி
 
             உருவின் அல்லது பெண்மையின் நின்னொடு
    110     திருநுதல் மடவோய் தினைஅனைத்து ஆயினும்
           வெள்வேல் கண்ணி ஒவ்வாறு அன்றுஅவள்
           உவக்கும் வாயில் நயத்தகக் கூறித்
 
             தெருட்டியும் தெளித்தும் மருட்டியும் மகிழ்ந்தும்
           இடைஅறவு இல்லா இன்பப் புணர்ச்சியர்
    115     தொடைமலர்க் காவில் படைஅமை கோயிலுள்
           ஆனாச் சிறப்பின் அமைதி எல்லாம்
           ஏனோர்க்கு இன்றென எய்திய உவகையர்
           அறைகடல் வையத்து ஆன்றோர் புகழ
           உறைகுவனர் மாதோ உவகையின் மகிழ்ந்துஎன்.
 

8. தேவியைத் தெருட்டியது முற்றிற்று.