9. விருத்தி வகுத்தது

 

இதன்கண்: உதயணமன்னன் உருமண்ணுவா முதலியோர்க்குச் சீவிதம் நல்கியதும், யூகியின் சீவிதமும் இடவகன் சீவிதமும் வயந்தகன் சீவிதமும் இசைச்சன் முதலாயினோர் சீவிதமும் தேவிமார் சீவிதமும் கூறப்படும்.
 
 

         உவகையின் மகிழ்ந்துஆண் உறையுங் காலை
         உயர்பெருந் தொல்சீர் உருமண் ணுவாவிற்கு
         எழுநாள் தோறும் முழுநகர் புகழப்
         படிவ முத்தீக் கடிகைக் கணனும்
    5    ஐம்பெருங் குழுவும் அத்தி கோசமும்
         மன்பெருஞ் சிறப்பின் மனைப்பெருஞ் சனமும்
         தேன்நேர் தீஞ்சொல் தேவி மார்களும்
         தானையுஞ் சூழத் தானே அணிந்துதன்
         நாம மோதிரம் நன்னாள் கொண்டு
   10    சேனா பதிஇவன் ஆகெனச் செறித்துப்

 
          பன்னூறு ஆயிரம் பழுதின்று வருவன
        மன்னூர் வேண்டுவ மற்றுஅவற்கு ஈத்துக்
        குதிரையுந் தேரும் கொலைமருப் பியானையும்
        எதிரிய சிறப்போடு எனைப்பல நல்கிப்
   15   பண்பார் சாயல் பதுமா பதிதன்
        கண்போல் தோழி காண்தகு காரிகை
        இயைந்த வேற்கண் இராசனை என்னும்
        வயங்கிழை மாதரொடு வதுவை கூட்டிப்
        பெருங்கடிச் சிறப்பும் பெயர்த்துஒருங்கு அருளி
 
     20   இருங்கடல் வரைப்பின் இசையொடு விளங்கிய
        சயந்தியம் பதியும் பயம்படு சாரல்
        இலாவா ணகமும் நிலவ நிறீஇக்
        குரவரைக் கண்டவர் பருவரல் தீர
        ஆண்டுஇனி திருந்தியாம் வேண்ட வருகென
   25   விடுத்தவற் போக்கிய பின்றை அடுத்த
 
          ஆதி யாகிய சேதிநன் நாடு
        யூகிக்கு ஆகென ஓலை போக்கி
உரை
 
          இடவகற்கு இருந்த முனையூர் உள்ளிட்டு
        அடவி நன்னாடு ஐம்பது கொடுத்து
   30   விறற்போர் மன்னர்இ ரிறுக்குந் துறைதொறும்
        புறப்பது வாரமொடு சிறப்புப்பல செய்து
        புட்பகம் புக்குநின் நட்புடன் இருந்து
        விளித்தபின் வாஎன அளித்தவன் போக்கி
 
          வயந்தகன் தனக்கு வழக்குப்புறம் ஆகெனப்
   35   பயம்படு நன்நகர் பதினொன்று ஈத்து
        வைகல் ஆயிரங் கைவயின் கொடுத்துப்
        பிரியாது உறைகென அருள்தலை நிறீஇ
 
          இசைச்சன் முதலா ஏனோர் பிறர்க்கும்
        பயத்தின் வழாஅப் பதிபல கொடுத்துப்
   40   பெயர்த்தனன் போக்கிப் பிரச்சோ தனன்நாட்டு
        அருஞ்சிறைக் கோட்டத்து இருந்த காலைப்
        பாசறை உழந்த படைத் தொழி லாளரை
        ஓசை முரசின் ஒல்லெனத் தரூஉ
 
          னெச்சத் தோர்கட்கு இயன்றவை ஈத்து
   45   நிச்ச மாயிரம் உற்றவை நல்கிப்
        பக்கற் கொண்டு பாற்படுத்து ஓம்பி
        இலாவா ணகவழிச் சாதகன் என்னும்
        குலாலன்கு ஏற்பப் பெருங்குயம் அருளி
        இருந்தினிது உறைகென இரண்டுஊர் ஈத்து
 
     50   மகதத் துழந்த மாந்தர்க்கு எல்லாம்
        தகுநல் விருத்தி தான்பால் படுத்துத்
        தத்தம் ஊர்வயின் சென்றுவரப் போக்கி
        ஆய்ந்த சிறப்பின் ஆதித்திய தருமற்கு
        ஓங்கிய சிறப்பின் ஓரூர் நல்கி
   55   அத்தறு வாயில் ஆருயிர் வழங்கிய
        சத்திய காயன் மக்களைக் கூஉய்த்
        தந்நிலைக்கு எல்லாந் தலைமை இயற்றித்
 
          தொன்றிற் கொண்டு தொடர்ச்சியில் பழையோர்
        ஒன்றிற்கு உதவார் என்றுபுறத்து இடாது
   60   நன்றி தூக்கி நாடிய பின்றை
        யூகி தன்னோடு ஒழிய ஏனைப்
        பாகியல் படைநர் பலரையும் விடுத்து
        மாசின் மாணகக் கோயில் குறுகிக்
        குடிப்பெருங் கிழத்திக்குத் தானம் செய்கென
   65   நடுக்கமில் சேம நன்னாடு அருளி
 
          வாசவ தத்தைக்கும் பதுமா பதிக்கும்
        தேவி விருத்தி ஆவன அருளி
        ஆடலும் பாடலும் மணியினும் மிக்கோர்
        சேடி மாரையும் இருகூ றாக்கிக்
   70   கொள்கென அருளிக் குறைபாடு இன்றி
 
          நாள்நாள் தோறும் ஆனா உவகையொடு
        காட்சி பெருமுத லாகக் கவினிய
        மாட்சி நீரின் மாண்சினை பல்கிய
        வேட்கை என்னும் விழுத்தகு பெருமரம்
   75   புணர்ச்சிப் பல்பூ இணர்த்தொகை ஈன்று
        நோயில் இன்பக் காய்பல தூங்கி
        யாழ அற்புக்கனி ஊழறிந்து ஏந்த
        ஓவாது நுகர்ந்து தாவாச் செல்வமொடு
        ஒழிவில் மாநகர் அறக்கடம் தாங்கி
   80   ஒழுகுப மாதோ ஒருங்குநன்கு இயைந்துஎன்.
 

9.விருத்தி வகுத்தது முற்றிற்று