11. பிரச்சோதனற்குப் பண்ணிகாரம் விட்டது

 

இதன்கண் : உதயணன் பிரச்சோதனனுக்கு ஓலை விடுத்தலும், யூகிக்குக் கூறியனவும், உதயணன் பிரச்சோதனனுக்கு விடுத்த பொருள்களும், அவன் வாசவதத்தையின் தாய்க்கு வழங்கிய மகளிரும், அவன் கோபாலகன் தாய்க்கு வழங்கிய மகளிரும், கோபாலகற்கும் பாலகுமரற்கும் வழங்கிய மகளிரும், பரதகற்கு அளித்த பொருள்களும், மற்றைத் தம்பியர்க்கு அளித்தனவும், சிவேதனுக்கு அளித்த பொருள்களும், யூகியின் புறப்பாடும், யூகி முதலியோரை விடுத்தலும், வாசவதத்தையின் வருணனையும், உதயணன் தேவிமாரோடு இனிது பொழுது போக்கலும் கூறப்படும்.
 
              விளங்கிழை பயந்த வேந்துபுறம் காக்கும்
            வளங்கெழு திருநகர் வல்லே செல்கென
            நாடுதலை மணந்து நாமுன் ஆண்ட
            காடுகெழு குறும்பும் கனமலை வட்டமும்
      5     எல்லை இறந்து வல்லை நீங்கி
            அழிந்த காலை ஆணை ஓட்டி
            நெருங்கிக் கொண்ட நீர்கெழு நிலனும்
            இவைஇனி எங்கோல் ஓட்டின் அல்லதை
            தமர்புகத் தரியா என்றுதான் எழுதிய
      10     வழிபாட்டு ஓலையொடு வயவரை விடுத்துக
 
              கருமம் எல்லாம் அவனொடு நம்மிடை
            ஒருமையின் ஒழியாது உரைக்கென உணர்த்தி
            ஏற்றோர்ச் சாய்த்தஇக் குருகுலத்து அகத்தோர்
            ஆற்றலி லாளன் தோற்றினும் அவந்தியர்
      15    ஏழ்ச்சி இன்றிக் கீழ்ப்பட்டு ஒழுகினும்
            இகத்தல் இல்லை இருதிறத் தார்க்கெனப்
            பயத்தொடு புணர்ந்த பழிப்பில் செய்கையின்
            நளிபுனல் நாட்டொடு நகரம் அறியத்
            தெளிவிடை இட்ட திண்ணிதின் செய்கெனப்
      20    பல்பொருள் கருமம் சொல்லிய பின்னர்
 
              அருமலை அடுக்கத்து அயிரா பதமெனும்
            பெருமலைப் பிறந்து பெறுதற்கு அரிய 
            தீதுதீர் சிறப்பின் சிங்கச் சுவணமென்று
            ஓசை போகிய ஒண்பொற் கலங்களும்
      25    கலக்கமில் சிறப்பின் காம்போ சத்தொடு
            நலக்காந் தாரமென் னாட்டுப் பிறந்த
            இலக்கணக் குதிரை இராயிரத்து இரட்டியும்
            ஆருணி வேந்தை வென்றுகைப் படுத்தின
            தாரணி புரவி தகைபெறப் பூண்டன
      30    இருநூற்று ஐம்பதிற்று இரட்டி தேரும்
            ஒருநூறு ஆகிய உயர்நிலை வேழமும்
 
              கோல மான கோபத்திற் பிறந்தன
            பாலவா வேறொடு பதினா றாயிரம்
            காவல் வேந்தற்குக் காட்டுபு கொடுக்கெனப்
 
        35    பாய்புனல் படப்பைப் பாஞ்சா லரசன்
            உரிமைப் பள்ளியுள் தெரிவனன் கொண்ட
            ஏற்ற கோலத்து இளமையொடு புணர்ந்தோர்
            நூற்றொரு பதின்மர் கோற்றொடி மகளிருள்
            .................................ட் பணைமுலை மகளிரைப்
      40    பாசிழை ஆயத்து வாசவ தத்தையைப்
            பயந்துஇனிது எடுத்த வயங்கிழைப் பணைத்தோள்
            கோப்பெருந் தேவிக்குக் கொடுக்கெனப் பணித்தே
 
              ஓரிரு பதின்மரை ஆரமர்க் கடந்து
            கோல்கொள வென்ற கோபா லகனைச்
      45    சால்புளிப் பயந்த சாயாக் கற்பின்
            நீல வேற்கண் நிரைதொடிக்கு ஈகெனப்
 
              பொன்கோங்கு ஏய்ப்ப நற்கலன் அணிந்த
            முப்பதின் இரட்டி முற்றிழை மகளிரைப்
            பால குமரற்கும் கோபா லகற்கும்
      50    பால்வேறு இவர்களைக் கொடுக்கெனப் பணித்து
 
              முற்பால் கூறிய வெற்பினுள் பிறந்த
            எட்டுநூ றாயிரம் எரிபுரை சுவணம்
            பட்டாங்கு இவற்றைப் பரதகற்கு ஈகென
 
              மற்றவன் தம்பியர்க்கு அத்துணைப் போக்கிப்
      55    பதினாறு ஆயிரம் சிவேதற்கு ஈத்துப்
            பிறவும் இன்னவை பெறுவோர்க்கு அருளி
 
              வனப்பொடு புணர்ந்த வையாக் கிரமெனும்
            சிலைப்பொலி நெடுந்தேர் செவ்விதின் நல்கி
            வீயா வென்றி விண்ணுத் தராயனோடு
      60    ஊகியுஞ் செல்கென ஓம்படுத் துரைத்து
 
              வினைமேம் படூஉம் மேற்றசை நாளுள்
            நிகழ்ந்த நன்னாள் அறிந்தனர் கொடுப்ப
            அப்பால் அவர்களைப் போக்கி இப்பால்
 
              ஆற்றறல் அன்ன கூந்தல் யாற்றுச்
      65    சுழியெனக் கிடந்த குழிநவில் கொப்பூழ்
            வில்லெனக் கிடந்த புருவம் வில்லின்
            அம்பெனக் கிடந்த செங்கடை மழைக்கண்
            பிறையெனச் சுடருஞ் சிறுநுதல் பிறையின்
            நிறையெனத் தோன்றுங் கரைஇல் வாண்முகம்
      70    அரவென நுடங்கும் மருங்குல் அரவின்
            பையெனக் கிடந்த வைதேந்து அல்குல்
            கிளியென மிழற்றுங் கிளவி கிளியின்
            ஒளிபெறு வாயின் அன்ன ஒள்உகிர்
            வாழையந் தாளுறழ் குறங்கின் வாழைக்
      75    கூம்புமுகிழ் அன்ன வீங்கிள வனமுலை
            வேயெனத் திரண்ட மென்தோள் வேயின்
            விளங்குமுத்து அன்ன துளங்கொளி முறுவல்
            காந்தள்முகிழ் அன்ன மெல்விரல் காந்தள்
            பூந்துடுப்பு அன்ன புனைவளை முன்கை
      80    அன்னத்து அன்ன மென்நடை அன்னத்துப்
            புணர்வின் அன்ன தண்டாக் காதல்
            அணிக்கவின் கொண்ட அதிநா கரிகத்து
            வனப்புவீற்று இருந்த வாசவ தத்தையும்
 
              பழிப்பில் காரிகைப் பதுமா பதியும்என்று
      85    ஒண்துணைக் காதல் ஒருதுணைத் தேவியர்
            முட்டில் செல்வமோடு முறைமையின் வழிபட
 
              மதுக மதிர முதலாக் கூறும்
            பதனுறு நறுங்கள் பட்டாங்கு மடுப்ப
            உண்டுமகிழ் தூங்கித் தண்டா இன்பமொடு
      90    பண்கெழு முழவின் கண்கெழு பாணியில்
            கண்கவர் ஆடல் பண்புளிக் கண்டும்
            எல்எனக் கோயிலுள் வல்லோன் வகுத்த
            சுதைவெண் குன்றச் சிமைபரந்து இழிதரும்
            அந்தர அருவி வந்துவழி நிறையும்
      95    பொற்சுனை தோறும் புக்குவிளை யாடியும்
 
              அந்தர மருங்கின் இந்திரன் போலப்
            புலந்தும் புணர்ந்தும் கலந்துவிளை யாடியும்
            நாள்நாள் தோறும் நாள்கழிப்பு உணராது
            ஆனாது நுகர்பவால் அன்புமிகச் சிறந்துஎன்.
 

11.பிரச்சோதனன்குப் பண்ணிகாரம்விட்டது முற்றிற்று