12. பந்தடி கண்டது

 

இதன்கண் : வாசவதத்தையும் பதுமாபதியும் பந்தடி காணுதலும், வயந்தகன் உதயணனுக்குக் கூறுதலும், உதயணன் மறைந்து சென்று பந்தடி காணுதலும், இராசனை இயல்பும், பந்து வண்ணனையும், இராசனை பந்தடித்தலும், காஞ்சனமாலை பந்தடித்தலும், அயிராபதி பந்தடித்தலும், விச்சுவலேகை பந்தடித்தலும், ஆரியை பந்தடித்தலும், வாசவதத்தை தன் தோழியரை நோக்கலும், கோசல நாட்டின் பெருமையும், கோசலத்தரசன் மகள் வண்ணனையும், கோசலத்தரசன் மகள் பந்தடித்தலும், வாசவதத்தை தன்னுள் நினைதலும் உதயணன் கோசலத்தரசன் மகளை விரும்பலும் கூறப்படும்.
 
              அன்புமிகச் சிறந்தாண்டு அமருங் காலை
            மன்பெருஞ் சிறப்பின் மறப்போர் உதயணன்
            அருமை சான்ற ஆருணி அரசன்
            உரிமைப் பள்ளியுள் தெரிவனன் கொண்ட
      5     ஆயிரத்து எண்மர் அரங்கியன் மகளிர்
            மாசில் தாமரை மலர்மகள் அனையோர்
            ஆடலும் பாடலும் நாடொறும் நவின்ற
            நன்நுதல் மகளிரை மின்நேர் நுண்இடை
 
              வாசவ தத்தைக்கும் பதுமா பதிக்கும்
      10     கூறுநனி செய்து வீறுயர் நெடுந்தகை
            கொடுத்த காலை அடுத்த அன்போடு
            அரசன் உலாவெழும் அற்றம் நோக்கித்
            தேவியர் இருவரும் ஓவியச் செய்கையின்
            நிலாவரி முற்றத்துக் குலாவொடு ஏறிப்
      15     பந்தடி காணிய நிற்ப இப்பால்
 
              வெங்கோல் அகற்றிய வென்றித் தானைச்
            செங்கோன் சேதிபன் செவிமுதல் சென்று
            வயந்தகன் உரைக்கும் நயந்தனை அருளின்
            மற்றுநின் தோழியர் பொன்தொடிப் பணைத்தோள்
      20    தோழியர் தம்மோடு ஊழூழ் இகலிப்
            பந்துவிளை யாட்டுப் பரிந்தனர் அதனால்
 
              சிறப்பின்று உலாப்போக்கு அறத்தகை அண்ணல்நின்
            மாண்குழைத் தேவியர் இருவரும் இகறலின்
            காண்தகை உடைத்தது கரந்தனை ஆகி
      25    வடிவேல் தடக்கை வத்தவர் இறைவ
            பிடிமிசை வந்து பிணாஉரு வாகிச்
            சென்றனை காண்கென நன்றென விரும்பிப்
 
              படைஉலாப் போக்கி இடைதெரிந்து இருந்தாங்கு
            யாவரும் அறியா வியல்பில் கரந்து
      30    காவலன் பிடிமிசைக் காண்டக ஏறிப்
            பல்வகை மகளிரொடு பைஎனச் சென்றுதன்
            இல்லணி மகளிரொடு இயைந்தனன் இருப்ப
 
              இகலும் பந்தின் இருவரும் விகற்பித்து
            அடிநனி காண்புழி அணங்கேர் சாயல்
      35    கொடிபுரை நுண்இடைக் கொவ்வைச் செவ்வாய்
            மதுநூறு தெரியல் மகதவன் தங்கை
            பதுமா பதிதன் பணிஎதிர் விரும்பி
            விராய்மலர்க் கோதை இராசனை யென்போள்
            கணங்குழை முகத்தியை வணங்கினள் புகுந்து
      40    மணங்கமழ் கூந்தலும் பிறவுந் திருத்தி
            அணங்கெனக் குலாஅய் அறிவோர் புனைந்த
 
             கிடையும் பூளையும் இடைவரி உலண்டும்
            அடையப் பிடித்தவை அமைதியில் திரட்டிப்
            பீலியும் மயிரும் வாலிதின் வலந்து
      45    நூலினுங் கயிற்றினும் நுண்ணிதில் சுற்றிக்
            கோல மாகக் கொண்டனர் பிடித்துப்
            பாம்பின் தோலும் பீலிக் கண்ணும்
            பூம்புனல் நுரையும் புரையக் குத்திப்
            பற்றிய நொய்ம்மையில் பல்வினைப் பந்துகள்
 
        50    வேறுவேறு இயற்கைய கூறுகூறு அமைத்த
            வெண்மையுஞ் செம்மையுங் கருமையும் உடையன
            தண்வளி எறியினுந் தாம்எழுந்து ஆடுவ
            கண்கவர் அழகொடு நெஞ்சுஅக லாதன
            ஒண்பந்து ஓர்ஏழ் கொண்டனள் ஆகி
      55    ஒன்றொன்று ஒற்றி உயரச் சென்றது
            பின்பின் பந்தொடு வந்துதலை சிறப்பக்
            கண்ணிமை யாமல் எண்ணுமின் என்று
            வண்ண மேகலை வளையொடு சிலம்பப்
            பாடகக் கால்மிசைப் பரிந்தவை விடுத்தும்
 
        60    சூடக முன்கையில் சுழன்றுமாறு அடித்தும்
            அடித்த பந்துகள் அங்கையின் அடக்கியும்
            மறித்துத் தட்டியும் தனித்தனி போக்கியும்
            பாயிரம் இன்றிப் பல்கலன் ஒலிப்ப
            ஆயிரம் கைநனி அடித்தவள் அகல
 
        65    அன்ன மென்நடை அவந்திகை யுவந்தவள்
            கண்மணி அனைய ஒண்ணுதற் பாவை
            காஞ்சன மாலை வாங்குபு கொண்டு
            பிடித்த பூம்பந்து அடித்துவிசும்பு ஏற்றியும்
            அடித்த பந்தால் விடுத்தவை ஓட்டியும்
      70    குழல்மேல் வந்தவை குவிவிரல் கொளுத்தியும்
            நிழல்மணி மேகலை நேர்முகத்து அடித்தும்
            கண்ணியில் சார்த்தியும் கைக்குள் போக்கியும்
            உள்நின்று திருத்தியும் விண்உறச் செலுத்தியும்
            வேயிருந் தடந்தோள் வெள்வளை ஆர்ப்ப
      75    ஆயிரத்து ஐந்நூறு அடித்தனள் அகலச்
 
              செயிர்தீர் பதுமைதன் செவிலித் தாய்மகள்
            அயிரா பதிஎனு அம்பணைத் தோளி
            மான்நேர் நோக்கின் கூனி மற்றவள்
            தானேர் வாங்கித் தனித்தனி போக்கி
      80    நாற்றிசைப் பக்கமும் நான்கு கோணமும்
            காற்றினும் கடிதாக் கலந்தனள் ஆகி
            அடித்தகைத் தட்டியுங் குதித்தும்முன் புரியா
            அகங்கை யொட்டியும் புறங்கையில் புகுத்தியும்
            தோள்மேல் பாய்ச்சியும் மேன்மேல் சுழன்றும்
 
        85    கூன்மேல் புரட்டியும் குயநடு வொட்டியும்
            வாக்குறப் பாடியும் மேற்படக் கிடத்தியும்
            நோக்குநர் மகிழப் பூக்குழல் முடித்தும்
            பட்ட நெற்றியில் பொட்டிடை ஏற்றும்
            மற்றது புறங்கையில் தட்டினர் எற்றியும்
      90    முன்னிய வகையான் முன்ஈ ராயிரங்
            கைந்நனி அடித்துக் கையவள் விடலும்
 
             பேசிய முறைமையின் ஏசா நல்எழில்
            வாசவ தத்தைக்கு வலத்தோள் அனைய
            அச்சமில் காரிகை விச்சுவ லேகைஎன்று
      95    உற்ற நாமப் பொற்றொடிக் குறளி
            யானிவண் நிற்பக் கூனியைப் புகழ்தல்
            ஏலாது என்றவள் சேலந் திருத்திக்
            கருவிக் கோல்நனி கைப்பற் றினளாய்
            முரியுங் காலைத் தெரிய மற்றதில்
      100    தட்டினள் ஒன்றொன்று உற்றனள் எழுப்பிப்
            பத்தியிற் குதித்துப் பறப்பனள் ஆகியும்
            வாங்குபு கொண்டு வானவில் போல
            நீங்கிப் புருவ நெரிவுடன் எற்றியும்
            முடக்குவிரல் எற்றியும் பரப்புவிரல் பாய்ச்சியும்
 
        105    தனித்துவிரல் தரித்து மறித்தெதிர் அடித்தும்
            குருவிக் கவர்ச்சியின் அதிரப் போக்கியும்
            அருவிப் பரப்பின் முரியத் தாழ்த்தியும்
            ஒருபால் பந்தின் ஒருபால் பந்துற
            இருபால் திசையும் இயைவன ளாகிப்
      110    பாம்புஒழுக் காக ஓங்கின ஓட்டியும்
            காம்பிலை வீழ்ச்சியின் ஆங்கிழித் திட்டும்
            முன்னிய வகையான் முன்ஈ ராயிரத்து
            ஐந்நூ றடித்துப் பின்னவள் விடலும்
 
              சீரியல் பதுமைதன் சிந்தைக்கு ஒப்பெனும்
      115    காரிகை மயிலன வாரியை புகுதா
            நுணங்குகொடி மருங்கு நோவ அசைஇ
            மணங்கமழ் கூந்தல் வகைபெற முடித்தும்
            சூடகம் ஏற்றியும் பாடகம் திருத்தியும்
            நாடக மகளிரின் நன்கனம் உலாவியும்
      120    இருகையு மடிப்ப விசும்பொடு நிலத்திடை
            திரிபுவீழ் புள்போல் ஒருவயி னில்லாது
            எழுந்துவீழ் பந்தோடு எழுந்துசெல் வனள்போல
 
              கருதரு முரிவொடு புருவமுங் கண்ணும்
            வரிவளைக் கையும் மனமும் ஓட
      125    அரியார் மேகலை ஆர்ப்பொடு துளங்கவும்
            வருமுலை துளும்பவும் கூந்தல் அவிழவும்
            அரிமலர்க் கோதையொடு அணிகலம் சிதறவும்
            இருந்தனள் நின்றனள் என்பதை அறியார்
            பரந்த பல்தோள் வடிவினள் ஆகித்
      130    திரிந்தனள் அடித்துத் திறத்துளி மறித்தும்
            முரியுந் தொழிலொடு மூவாயி ரங்கை
            முறையின் ஏற்றிப் பந்துநிலத்து இடலும்
 
              வரிநெடும் பந்து வந்தெதிர் கொள்ளுநர்
            ஒருவரும் இன்றி நின்றுழிப் பொருவரும்
      135    வாளேர் தடங்கண் வாசவ தத்தை
            கோளேர் மதிமுகம் கோட்டி நோக்கக்
உரை
 
              கிடையோர் போலக் காமத்தில் கழுமாது
            இடையோர் இயல்பின தாகி இல்லது
            உடையோர்க் குரிய உதவி நாடி
      140    ஆனாச் சிறப்பின் யாவர்க் காயினும்
            தானப் பெரும்பயந் தப்புத லின்றி
            ஓசை யோடிய உலவாச் செல்வத்துக்
            கோசல வளநாட்டுக் கோமான் பிழையாத்
 
              தேவியர்க் கெல்லாந் தேவி யாகிய
      145    திருத்தகு கற்பின் தீங்குயிற் கிளவி
            வரிக்குழல் கூந்தல் வசுந்தரி தன்மகள்
            மானே அன்ன மயிலே மால்வரைத்
            தேனே பவளந் தெண்கடல் நித்திலம்
            கயலே காந்தள் புயலே பொருவில்
      150    பையே பொற்றுடி படைநவில் யானைக்
            கையே குரும்பை கதிர்மதி வேயே
 
             நோக்கினும் ஒதுக்கினும் மாக்கேழ் அணிந்த
            சாயல் வகையினுஞ் சால்புடை மொழியினும்
            ஆசில் வாயினும் அணிபெற நிரைத்த
      155    பல்லினுங் கண்ணினும் மெல்விரல் வகையினும்
            நறுமென் குழலினுஞ் செறிநுண் புருவத்து
            ஒழுக்கினும் இழுக்கா அல் குல் தடத்தினும்
            மெல்லிய இடையினும் நல்லணி குறங்கினும்
            குற்றமின் முலையினும் முகத்தினுந் தோளினும்
      160    மற்றவை தொலையச் செற்றொளி திகழத்
 
 

      160    மற்றவை தொலையச் செற்றொளி திகழத்
            தனக்கமை எய்திய தவளையங் கிண்கிணி
            வனப்பெடுத் துரைஇ வையகம் புகழினும்
            புகழ்ச்சி முற்றாப் பொருவரு வனப்பில்
            திருக்கண் டன்ன வுருக்கிளர் கண்ணி
      165    கோசலத் தரசன் கோமகள் பூவணி
            வாசச் சுரிகுழல் மாணிழை ஒருத்தியென்று
            ஆங்கொரு காரணத்து அவள்வயின் இருந்தோள்

 
              பூங்குழை தோற்றது பொறாஅ நிலைமையள்
            எழுந்தனள் தேவியைப் பணிந்தனள் புகுந்து
      170    மடந்தையர் ஆடலை இகழ்ந்தனள் நகையா
            வந்தரி வையரெதிர் வரசதி வகையால்
            பந்தாடு இலக்கணம் நின்றுபல பேசி
            இளம்பிறைக் கோடெனக் குறங்கிரு பக்கமும்
            விளங்கியேர் பிறழ வேற்கணி யிருந்து
      175    முரண்டெழு வனப்பின் மூவேழ் ஆகிய
            திரண்டவொண் பந்து தெரிவனள் ஆகி
            ஓங்கிய ஆடலின் ஒன்றிது ஆகலின்
            தான்சம நின்று பாங்குறப் பகுந்து
            மண்டலம் மாக்கி வட்டணை முகத்தே
 
        180    கொண்டனள் போக்கிக் குறிவயிற் பெயர்த்துப்ப்
            பூவீழ்த் தெழுப்பிப் புறங்கையின் மற்றவை
            தான்மறித் தடித்துத் தகுதியின் எழஎழக்
            காம தேவியர் காண்பனர் உவப்பப்
            பூமி தேவியிற் புறம்போ வனள்போல்
      185    பைய எழுவோள் செய்தொழிற்கு ஈடாக்
            கையுங் காலும் மெய்யும் இயையக்
            கூடுமதி முகத்திடைப் புருவமுங் கண்ணும்
 
              ..................................................................
            ஆடன் மகளி ரவிநயம் வியப்பவும்
            பேசிய விலயம் பிழையா மரபிற்
      190    பாடன் மகளிர் பாணி யளப்பவும்
            மருவிய கதியிற் கருவிக் கூற்றோர்
            இருபதம் பெயர்க்கு மியல்கொண் டாடவும்
            சிந்தை பெயராத் திறத்திற மவையவை
            பந்தாட் டியலோர் தந்தமி லுவப்பவும்
     195     ஓதிய முறைமையின் யாதுங் காணார்
            தேவிய ரிருவருந் திகைத்தன ரிருப்பவும்
 
              காந்தண் முகிழ்நனி கவற்றுமெல் விரலின்
            ஏந்தின ளெடுத்திட் டெறிவுழி முன்கையிற்
            பாய்ந்தவை நிலத்தினும் விசும்பினு மோங்கிச்
      200    சூறை வளியிடைச் சுழலிலை போல
            மாறுமா றெழுந்து மறிய மறுகி
            ஏறுப விழிபவா காய நிற்பன
            வேறுபடு வனப்பின் மும்மைய வானவை
            ஏர்ப்பொலி வளைக்கை யிரண்டே யாயினும்
      205    தேர்க்கா லாழியிற் சுழன்றவை தொழில்கொள
 
              ஓடா நடவா வொசியா வொல்காப்
            பாடாப் பாணியி னீடுயிர்ப் பினளாய்க்
            கண்ணின் செயலினுங் கையின் றொழிலினும்
            விண்ணவர் காணினும் வீழ்வர்கொல் வியந்தெனப்
      210    பாடகத் தரவமுஞ் சூடகத் தோசையும்
            ஆடுபந் தொலியுங் கேட்பி னல்லதை
            ஐயபந் தெழவெழ வதனுட னெழுதலிற்
            கையுங் காலு மெய்யுங் காணார்
 
              மண்ணினள் விண்ணின ளென்றறி யாமை
      215    ஒண்ணுதன் மாதரை யுள்ளுழி யுணரும்
            தன்மையு மரிதெனத் தனித்தனி மயங்கி
            மாயங் கொல்லிது மற்றொன் றில்லென
            ஆய நவின்றமை யறிந்தன ளாகிச்
            சொல்லிய மகளி ரெல்லாங் காணச்
      220    சில்லரிக் கண்ணி மெல்லென முரியாச்
            செந்தளிர் பொருவச் சிவந்த கையாற்
            கந்துக மேந்திக் கசிந்த கோதைக்கு
            மிகைக்கை காணார் நகைப்படும் அவளென
            உகைத்தெழு பந்தின் உடனெழு வனபோல்
      225    சுழன்றன தாமம் குழன்றது கூந்தல்
 
              அழன்றது மேனி அவிழ்ந்தது மேகலை
            எழுந்தது குறுவியர் இழிந்தது சாந்தம்
            ஓடின தடங்கண் கூடின புருவம்
            அங்கையின் ஏற்றும் புறங்கையிடன் ஓட்டியும்
      230    தங்குற வளைத்துத் தான்புரிந்து அடித்தும்
 
              இடையிடை இருகால் தெரிதர மடித்தும்
            அரவணி அல்குல் துகில்நெறி திருத்தியும்
            நித்திலக் குறுவியர் பத்தியில் துடைத்தும்
            பற்றிய கந்துகஞ் சுற்றுமுறை உரைத்தும்
      235    தொடையுங் கண்ணியும் முறைமுறை இயற்றியும்
            அடிமுதன் முடிவரை இழைபல திருத்தியும்
            படிந்தவண்டு எழுப்பியுங் கிடந்தபந்து எண்ணியும்
            தேமலர்த் தொடையல் திறத்திறம் பிணைத்தும்
            பந்துவரல் நோக்கியும் பாணிவர நொடித்தும்
      240    சிம்புளித் தடித்துங் கம்பிதம் பாடியும்
 
              ஆழியென உருட்டியும் தோழியொடு பேசியும்
            சாரிபல வோட்டியும் வாழியென வாழ்த்தியும்
            அந்தளிர்க் கண்ணி அவந்திகை வெல்கெனப்
            பைந்தொடி மாதர் பற்பல வகையால்
      245    எண்ணா யிரங்கை ஏற்றினள் ஏற்றலும்
 
              கண்ணார் மாதர் மதிமுகங் காணில்
            காவல் மன்னன் கலங்கலும் உண்டெனத்
            தேவியும் உணர்வாள் தீதென நினைஇ
            நின்ற அளவில் சென்றவண் முகத்தே
 
        250    ஒன்றிய இயல்போடு ஒன்றுக்கு ஒன்றவை
            ஒளித்தவும் போலுங் களித்தவும் போலும்
            களித்தவும் அன்றி விளித்தவும் போலும்
            வேலென விலங்குஞ் சேலென மிளிரும்
            மாலென நிமிருங் காலனைக் கடுக்கும்
      255    குழைமேல் எறியுங் குமிழ்மேன் மறியும்
            மலருங் குவியுங் கடைசெல வளரும்
            சுழலும் நிற்குஞ் சொல்வன போலும்
 
              கழுநீர் பொருவிச் செழுநீர்க் கயல்போல்
            மதர்க்குந் தவிர்க்குஞ் சுருக்கும் பெருக்கும்
      260   இவைமுதல் இனியன வவிநயப் பல்குறி
            நவையற இருகண் சுவையொடு தோன்ற
            நீலப் பட்டுடை நிரைமணி மேகலை
            கோலமொடு இலங்கத் தானுயிர்ப் பாற்றி
            ஓடரிக் கண்ணி உலாவர நோக்கிப்
 
        265   பூண்திகழ் கொங்கைப் புயலேர் கூந்தல்
            மாண்குழை புதுநலங் காண்டகச் சென்ற
            உள்ளந் தன்னை ஒருப்படுக் கல்லா
            வெள்ளத் தானை வேந்தன் பெயர்ந்து
            பிடிமிசைத் தோன்றலும் பேதையர் தத்தம்
      270   இடவயின் பெயர்ந்தனர் எழுந்தனர் விரைந்துஎன்

 

(12. பந்தடி கண்டது முற்றிற்று)