13. முகஎழுத்துக்காதை

 

இதன்கண்: மானனீகையைக் கண்ட உதயணன் செயலும், தேவியர் இருவரும் உதயணன்பால் வருதலும், உதயணன் தோழியரை அழைத்து வினவுதலும், அவன் வாசவதத்தையை வினவுதலும், அவள் சினந்துரைத்தலும், உதயணன் அவட்குக் கூறுதலும், உதயணன் மானனீகையை வினவுதலும், மானனீகை விடைகூறலும், உதயணன் செயலும், மானனீகை செயலும், அவன் செயலும், வாசவதத்தையின் முகவெழுத்தை மானனீகை காண்டலும், மானனீகை எழுத்தைக் கண்டு உதயணன் மீட்டும் எழுதி விடுதலும், மானனீகை மறுமொழி எழுதி விடுத்தலும், அது கண்டு உதயணன் மகிழ்தலும், மானனீகை மறைந்திருத்தலும், உதயணன் செயலும், வாசவதத்தை உதயணன் செயலை ஒற்றி வருமாறு காஞ்சனமாலையை விடுத்தலும், உதயணன் மானனீகையுடன் காதல் மொழி பேசிக் கலத்தலும், காஞ்சனமாலை  அந்நிகழ்ச்சியை வாசவதத்தைக் குணர்த்தலும், வாசவதத்தை உதயணனைக் கண்டு கூறலும், அவன் வினவுதலும், அவள் விடை கூறலும், இருவரும் சொல்லாடுதலும், இருவரும் தனித்தனிச் செயல் செய்தலும், உதயணன் திகைத்தலும் வாசவதத்தை ஊடிச் செல்லலும் கூறப்படும்.
 
              விரைந்தனர் பெயர வேந்தன் காம
            சரம்பட நொந்து தளர்வுடன் அவணோர்
            பள்ளி அம்பலத்து உள்ளினி திருந்து
            மேவத் தகுமுறைத் தேவியர் வருகென
      5     ஏவல் சிலதியர் தாமவர்க்கு உரைப்பக்
 
              காவல் வேந்தன் கரைந்ததற்கு அயிர்த்து
            மேவுகந் துகத்தியைக் கோயிலுள் மறைத்து
            மறுவில் தேவியர் இருவரும் வந்து
            திருவமர் மார்பனைத் திறத்துளி வணங்கலின்
 
        10    பெருகிய வனப்பின் பேணுந் தோழியர்
            புகுதுக என்றலும் புக்கவர் அடிதொழச்
            சுற்றமும் பெயருஞ் சொல்லுமின் நீரென
            முற்றிழை மாதரை முறைமுறை வினவலின்
            மற்றவர் எல்லாம் மறுமொழி கொடுப்பக்
 
        15    கொற்றவன் உரைக்கும் பொற்றொடித் திரளினைப்
            பாரான் பார்த்தொரு பைந்தொடி நின்னொடு
            வாராது ஒழிதல் கூறெனக் கூறலும்
 
              ஒழிந்த மாதர்க்கு உரைப்பதை உண்டெனில்
            தனித்துநீ கண்டருள் அவைக்குள் என்னெனப்
 
        20    படைமலி நயனம் கடைசிவப் பூரும்
            திறனவள் மொழியொடு தெளிந்தனன் ஆகிப்
            பற்றா மன்னன் படைத்தவும் வைத்தவும்
            உற்றவள் அறியும் உழையரில் தெளிந்தேன்
            மதிவேறு இல்லென வாசவ தத்தையும்
      25    கரும முன்னிக் குருசில்..........
 
              பூக்கமழ் குழலி புகுந்தடி வணங்கலின்
            நோக்கினன் ஆகி வேற்படை வேந்தன்
            பைந்துணர்த் தொடையல் பாஞ்சா லரசற்கு
            மந்திர ஓலையும் வழக்கறை காவலும்
      30    தந்திர நடாத்தலும் தகையுடைக் கோலம்
            அந்தப் புரத்திற்கு அணிதலும் எல்லாம்
            நின்னைச் சொல்லுவர் நன்நுதல் பெயரும்
            துன்னருஞ் சுற்றமும் முன்னுரை என்றலும்
 
              வாள்திறல் வேந்தனை வணங்கித் தன்கை
      35    கூட்டின ளாகி மீட்டுஅவண் மொழிவோள்
            கோசலத்து அரசன் மாபெருந் தேவி
            மாசில் கற்பின் வசுந்தரி என்னும்
            தேன்இமிர் கோதை சேடி யேன்யான்
            மான னீகை என்பதென் நாமம்
 
        40    எம்மிறை படையை எறிந்தன ஓட்டிச்
            செம்மையில் சிலதியர் தம்மொடுஞ் சேரப்
            பாஞ்சா லரசன் பற்றிக் கொண்டு
            தேன்தேர் கூந்தல் தேவியர் பலருளும்
            தன்னமர் தேவிக்கு ஈத்த பின்றை
      45    வண்ண மகளா இருந்தனென் அன்றி
            அருளியது யாதும் அறியேன் யானெனக்
            கடல்புரண் டெனப்பயந்து அழுதனள் நிற்ப்
 
              வாகை வேந்தன் மதித்தனன் ஆகிக்
            கேளுடை முறையால் கிளரொளி வனப்பின்
      50    வாசவ தத்தைக்கும் வண்ண மகளாய்
            நாளும் புனைகென நன்னுதல் பெயர்ந்தவள்
 
              அடிமுதல் தொட்டு முடிஅள வாகப்
            புடவியின் அறியாப் புணர்ப்பொடு பொருந்தி
            ஓவியர் உட்கும் உருவக் கோலம்
      55    தேவியைப் புனைந்தபின் மேவிய வனப்பொடு்
 
              காவலன் காட்டக் கண்டனன் ஆகி
            அழித்துஅலங் காரம் அறியாள் இவளெனப்
            பழித்தியான் புனைநெறி பாரெனப் புனைவோன்
            பற்றிய யவன பாடையில் எழுத்தவள்
      60    கற்றனள் என்றெடுத்து உற்றவர் உரைப்ப
            கேட்டனன் ஆதலின் கோற்றொடி நுதல்மிசைப்
            பூந்தா தோடு சாந்துறக் கூட்டி்
 
              ஒடியா விழுச்சீர் உதயணன் ஓலை
            கொடியேர் மருங்குல் குயில்மொழிச் செவ்வாய்
      65    மான னீகை காண்க சேணுயர்
            மாட மீமிசை மயில்இறை கொண்டென
            ஆடன் மகளிரொடு அமர்ந்தொருங்கு ஈண்டி
            முந்துபந் தெறிந்தோர் முறைமையில் பிழையாப்
            பந்துவிளை யாட்டினுள் பாவைதன் முகத்துச்
      70    சிந்தரி நெடுங்கண்என் நெஞ்சகங் கிழிப்பக்
 
              கொந்தழல் புண்ணொடு நொந்துயிர் வாழ்தல்
            ஆற்றேன் அவ்வழழ் அவிக்குமா மருந்து
            கோல்தேன் கிளவிதன் குவிமுலை ஆகும்
            பந்தடி தான்உறப் பறையடி உற்றஎன்
      75    சிந்தையும் நிலையும் செப்புதற்கு அரிதெனச்
            சேமம் இல்லாச் சிறுநுண் மருங்குற்கு
            ஆதார மாகி அதனொடு தளரா
            அருந்தனம் தாங்கி அழியுமென் நெஞ்சில்
            பெருந்துயர் தீர்க்கும் மருந்து தானே
 
        80    துன்றிய வேல்கண் தொழிலும்மெய் அழகும்
            பைங்கொள் கொம்பாப் படர்தரும் இந்நோய்
            ஆழ்புனல் பட்டோர்க்கு அரும்புணை போலச்
            சூழ்வளைத் தோளி காமநல் கடலில்
            தாழ உறாமல் கொள்க தளர்ந்துயிர்
      85    சென்றால் செயன்முறை ஒன்றுமில் அன்றியும்
            அடுக்கிய இளமை தலைச்செலின் ஆந்தரக்
            கிடைப்பதில் இரப்போர்க்கு அளிப்பது நன்றென்
 
              நினைத்த வாசகம் நிரப்பின்று எழுத
            இடத்தளவு இன்மையில் கருத்துஅறி வோர்க்குப்
      90    பரந்துரைத்து தென்னை பாவை இக்குறை
            இரந்தனென் அருளென இறைமகன் எழுதி
            மெல்லியற்கு ஒத்த இவைஎனப் புகழ்ந்து
            புல்லினன் தேவியைச் செல்கென விடலும்
 
              கோயில் குறுக வாய்வளை அணுகலும்
      95    காவலன் புனைந்தது காண்எனக் கண்ட
            காசறு சிறப்பின் கோசலன் மடமகள்
            வாசகம் உணராக் கூசினள் ஆகிப்
            பெருமகன் எழுதிய பேர்அலங் காரத்
            திருமுகம் அழகுடைத் தெனமருட் டினளாய்
      100    உட்கும் நாணும் ஒருங்குவந்து அடைய
            நற்பல கூறி அப்பகல் கழிந்தபின்
 
              வழிநாள் காலைக் கழிபெருந் தேவியைப்
            பழுதற அழகொடு புனைநலம் புனையாக்
            குங்குமம் எழுதிக் கோலம் புனைஇ
      105    அங்கவள் நுதல்மிசை முன்பவள் எழுதிய
            பாடை கொண்டுதன் பெயர்நிலைக் கீடா
            நீல நெடுங்கண் நிரைவளைத் தோளி
            மறுமொழி கொடுக்கும் நினைவினள் ஆகி
            நெறிமயிர்க்கு அருகே அறிவரி தாக்
 
        110    முழுதியல் அருள்கொண்டு அடியனேன் பொருளா
            எழுதிய திருமுகம் பழுதுபடல் இன்றிக்
            கண்டேன் காவலன் அருள்வகை என்மாட்டு
            உண்டே ஆயினும் ஒழிகஎம் பெருமகன்
            மடந்தையர்க்கு எவ்வாறு இயைந்ததை இயையும்
      115    பொருந்திய பல்உரை உயர்ந்தோர்க்கு ஆகும்
            சிறியோர்க்கு அருளிய உயர்மொழி வாசகம்
            இயைவது அன்றால் இவ்வயின் ஒருவரும்
 
              காணார் என்று காவலுள் இருந்து
            பேணா செய்தல் பெண்பிறந் தோருக்கு
      120    இயல்பும் அன்றே அயலோர் உரைக்கும்
            புறஞ்சொலும் அன்றி அறந்தலை நீங்கும்
            திறம்பல ஆயினுங் குறைந்தஎன் திறத்து
            வைத்ததை இகழ்ந்து மறப்பது பொருளென
            உற்றவண் மறுமொழி மற்றுஎழு தினளாய்
      125    அடியேற் கியைவ திதுவென விடலும்
 
              வடிவேல் உண்கண் வாசவ தத்தை
            திண்திறல் அரசனைச் சென்றனள் வணங்கலும்
            கண்டனன் ஆகிக் கணங்குழை எழுதிய
            இயல்நோக் கினனாய் இயையா வாசகம்
      130    தழலுறு புண்மேல் கருவி பாய்ந்தெனக்
            கலங்கினன் ஆகி இலங்கிழைக்கு ஈதோர்
 
              கலங்கினன் ஆகி இலங்கிழைக்கு ஈதோர்
            நலங்கவின் காட்ட நணுகென அணுகிக்
            கண்ட முறைமையில் பண்டுஇய லாக்கவல்
            கொண்டனன் ஆகி ஒண்டொடி ஆகம்
      135    இன்றை எல்லையுள் இயையாது ஆயின்
            சென்றதென் உயிரெனத் தேவிமுகத்து எழுதி
            வாள்திறல் வேந்தன் மீட்டனன் விடுத்தலின்
 
              பெருமகள் செல்லத் திருமகள் வாசகக்
            கருமம் எல்லாம் ஒருமையின் உணர்ந்து
      140    வயாத்தீர் வதற்கோர் உயாத்துணை இன்றி
            மறுசுழிப் பட்ட நறுமலர் போலக்
            கொட்புறு நெஞ்சினைத் திட்பம் கொளீஇ
            விளைக பொலிக வேந்தன் உறுகுறை
            களைகுவல் இன்றெனுங் கருத்தொடு புலம்பி
 
        145    அற்றை வைகல் கழிந்தபின் அவளை
            மற்றுயர் அணிநலம் வழிநாள் புனைஇக்
            கூத்தப் பள்ளிக் குச்சரக் குடிகையுள்
            பாற்படு வேதிகை சேர்த்தனள் ஆகி
            அரவுக குறியின் னயலவர் அறியா
      150    இரவுக் குறியின் இயல்பட எழுதி
            மாபெருந் தேவியை விடுத்தபின் மற்றவள்
 
              தீவிய மொழியொடு சேதிபற்கு உறுகி
            நோன்றாள் வணங்கித் தோன்ற நிற்றலும்
            திருநுதல் மீமிசைத் திறத்துளிக் கிடந்த
      155   அருளேர் வாசகம் தெருளுற அறிந்து
            மற்றவள் பயந்தனள் பொற்புற எழுதிய
            இற்றைப் புதுநலம் இனிதென இயம்பி
            மாதர் நோக்கின் மான னீகைகண்
            காமம் பெருகிக் காதல் கடிகொள
      160    மாமனத்து அடக்கித் தேவியொடு இனியன
            கூறிஅப் பகல்போய் ஏறிய பின்றை
 
              மான னீகை வாசவ தத்தையைத்
            தான்மறைந்து அறைகுறி மேவினள் இருப்ப
உரை
 
              வென்வேல் தலைவனும் வேட்கை இன்றித்
      165    தேவிய இருவர்க்கும் மாறுதுயில் கூறக்
 
              கயிற்பூண் கோதை அயிர்த்தனள் இருப்பப்
            பெயர்த்தனன் ஒதுங்கிப் பெயர்தரக் கண்டே
            காஞ்சன மாலையைக் கைவயின் பயிர்ந்து
            பூந்தார் மார்பன் புகுமிடன் அறிகென
      170    ஆய்ந்த வேந்தன் ஆடல் பேரறை
            சார்ந்தபின் ஒருசிறை சேர்ந்தனள் இருப்பத்
 
              திருத்தகு மார்பன் கருத்தொடு புகுந்து
            விருப்பொடு தழுவி நடுக்கம் தீரக்
            கூடிய வேட்கையின் ஒருவர்க்கு ஒருவர்
      175    ஊடியுங் கூடியும் நீடுவிளை யாடியும்
            இருந்த பின்றை இருவரும் முறைமுறை
            திருந்திய முகத்துப் பொருந்திய காதலொடு
            எழுதிய வாசகம் எல்லாம் உரைத்து
            வழுவுதல் இன்றி வைகலும் ஈங்கே
      180    குறியெனக் கூறிச் சிறுவிரல் மோதிரம்
            கொடுத்தனன் அருளிக் கோயிலுள் நீங்க்
 
              விடுத்தவள் ஏகி அடுத்ததும் உரைத்ததும்
            தன்னுள் பொருமலொடு தனித்தனி தெரிய
            இன்னதென்று எடுத்து நன்னுதற்கு உரைப்ப்
 
        185    முறுவல் கொண்டு செறுவகத்து அடக்கிப்
            பொறைஆற் றலளாய் இறைஉயிர்த்து ஆற்றிப்
            புலர்ந்த காலை புரவலன் குறுகி
            நலங்கிளர் மலர்கொண்டு இறைஞ்சினள் இருந்தியான்
            இரவு கண்டே ஒருகனவு அதனின்
      190    புதுமை கேட்கின் புரைதீர்ந் ததுஎனச்
 
              செவ்வாய் வெண்நகைத் திருந்திழை கண்டது
            எவ்வா றோஎன இயம்பினன் கேட்பநின்
 
              மனத்துழைப் பெயரா எனைக்கரந்து எழுந்தனை
            தனித்துப் போயோர் தடந்தோள் மடந்தையொடு
      195   ஆடரங்கு ஏறி அணைந்திருந்து அவளோடு
            ஊடியும் உணர்ந்தும் கூடிவிளை யாடியும்
            தேறினிர் ஆகித் தெளிவுடன் இருவிரும்
            மாறுமாறு எழுதிய வாசகம் கூறி
            மாதரும் நீயும் மயலுரைத்து எழுந்து
      200   போதரும் போதையின் மோதிரம் அருளிப்
            பெயர்ந்தனை நயனமும் மலர்ந்தன ஆங்கே
            புலர்ந்தது கங்குலும் புரவல வாழ்கென
 
              வண்டலர் கோதாய் மனத்தினும் இல்லது
            கண்டனை ஆதலின் கலங்கினை மற்றுநின்
      205   உள்ளத்து உள்ளே யுறைகுவேன் ஆகவும்
            கள்வன் என்று கருதினை அன்றியும்
            நெறியுடை மகளிர் நினைப்பவும் காண்பவும்
            இவைஇவை போலும் கணவர்தம் திறத்தெனக்
 
              கனவில் கண்டது பிறரொடு பேசக்
      210    குறைபோம் என்றலின் கூறினேன் அன்றியும்
            யாவை காணினும் காவலற்கு அன்றிப்
            பேசுவது எவரொடு பெரியோய் என்று
            மானார் நோக்கி மனத்தொடு நகையா
            ஆனா நினைவுடன் அகல்தர வேந்தன்
 
        215    தேவியை ஐயம் தெளித்தனம் ஒருவகை
            யாரும் இல்லென இனிதிருந்து உவப்பப்
            பானுவும் தேரொடு படுவரை இடைபுக
 
              மான னீகையைக் காவல்வைத் தனளாய்
            மாந்தளிர  மேனியும் காஞ்சன மாலையொடு
      220    நேர்ந்தஅக் குறியில் தான்சென்று இருப்ப
 
              நிகழ்ந்ததை அறியான் எழுந்து மெல்லென
            நடந்தவன் சென்றவள் இடந்தலைப் படலும்
            வேந்தன் செய்வது காண்குவம் என்று
            காம்பேர் தோளி கையின் நீக்கலும
 
        225    மான னீகைதான் ஊடினள் ஆகி
            மேவலள் ஆயினள் போலும்என் றெண்ணி
            முரசுமுழங்கு தானை அரசொடு வேண்டினும்
            தருகுவல் இன்னே பருவரல் ஒழிஇனி
            மானே தேனே மானனீ காய்எனக்
      230    கால்நேர் பற்றத் தானது கொடாஅது
            ரைப்பது கேட்ப மறுத்துஅவள் ஒதுங்கி
             நிலைப்படு காமம் தலைப்படத் தரியான்
 
               மை கூறிஇவள் முகம்பெறு கேன்என
             தித்தனன் ஆகி ஒருமொழி கேளினி
      235    கைக்கொடி முல்லை நகைத்திரு முகத்துத்
             கைக்கொடி அனையோள் வாசவ தத்தை
             இயைந்த நெஞ்சுடை யாம்இரு வர்க்கும்
             கழிந்த கங்குலின் நிகழ்ந்ததை எல்லாம்
             கனவது முந்திய வினையது ஆதலின்
      240    அதனில் கண்டெனக்கு ஒளியாது உரைப்ப
 
              அதற்கொரு வழியான் மனத்தினும் இல்லெனத்
            தெளித்த நிலைமையுந் தெளிந்திலை யேம்எனப்
            பெயரப் பெயர முறைமுறை வணங்கி
            இயல்நிலை மான னீகாய் அருளென்று
      245   அடுத்தடுத்து உரைப்பவும் ஆற்றான் ஆகவும்
            இதச்சொல் சொல்லவும் வணக்கம் செய்யவும்
            பெட்ப வருதலின் பிடித்தல் செல்லாள்
 
              நக்கனள் ஆகி மிக்கோய் கூறிய
            மானும் தேனும் மான னீகையும்
      250   யானன்று என்பெயர் வாசவ தத்தை
            காண்எனக் கைவிட்டு ஓடினன் ஓடி
 
             அடுத்த காட்சியில் தனித்தொரு மண்டபத்து
           ஒளித்தனன் ஆகித் திகைத்தனன் இருப்பச்
 
             சினங்கொள் நெஞ்சொடு பெயர்ந்துஅவள் வதியப்
      255  புலர்ந்தது கங்குலும் பொருக்கெனப் பொலிந்துஎன்.

 

13.முகஎழுத்துக்காதை முற்றிற்று