14. மணம்படு காதை

 

இதன்கண் : வாசவதத்தை மானனீகையின் கூந்தலைக் குறைக்கப் புகுதலும், வயந்தகன் உதயணனைத் தேடுதலும், உதயணன் நிகழ்ந்ததை அவனுக்குக் கூறலும், வயந்தகன் கூறலும், வயந்தகன் வாசவதத்தையைக் காணலும். வாசவதத்தை அவனுக்குக் கூறலும், வயந்தகன் கூற்றும், கத்தரிகைகளின் வகைகளும், உதயணன் யூகியை வருவித்துக் கூறலும், யூகி விடை கூறுதலும், யூகி பித்தர் வேடம் தரித்தலும், தோழியர் யூகியின் வேடத்தைக் கண்டு ஓடலும், வயந்தகன் சிலதியை உதயணன்பால் விடுத்தலும், உதயணன் பதுமாபதியை வருவித்தலும், பதுமாபதி உதயணனை வினாவுதலும், உதயணன் அவளை வாசவதத்தையின்பால் விடுத்தலும், பதுமாபதி வாசவதத்தையை வேண்டிக் கொள்ளலும், கோசல மன்னன் தூதுவர் வரவும், தூதர் உதயணனுக்கு ஓலை கொடுத்தலும், அவன் அவ்வோலையை வாசவதத்தைக்கு விடுத்தலும், வாசவதத்தை பதுமாபதியைக் கொண்டு ஓலையைப் படிக்கச் செய்தலும், அவ்வோலையில் எழுதப்பட்ட செய்தியும், பதுமாபதி ஓலையை வாசவதத்தையிடம் கொடுத்தலும், வாசவதத்தை அதனைப் படித்துணர்ந்து தன் செயலுக்கு வருந்துதலும், மானனீகையின் கட்டை அவிழ்த்து விடுதலும், அவளை அலங்கரித்தலும், வயந்தகன் உதயணனுக்குத் தெரிவித்தலும், உதயணன் மகிழ்தலும், மானனீகையை மணம் செய்து கொள்ளலும், கூறப்படும்.
 
              புலர்ந்த காலைப் புதுமண மாதரை
            மாபெருந் தேவி கூவினள் சீறி
            ஓவிய எழினித் தூணொடு சேர்த்துக்
            கொற்றவன் தன்னொடு கூத்தப் பள்ளியுள்
     5      சொற்றது சொல்லெனக் கச்சினின் யாத்தனள்
            அருகொரு மாதரை இவள்மயிர் அரிதற்கு
            ஒருகத் தரிகை தருகென உரைப்ப
 
              மறையக் கண்ட வயந்தகன் அவ்வயின்
            விரைவில் சென்று வேந்தைத் தேட
 
       10      அறிந்து வேந்தன் அறிபயிர் காட்டப்
            பரிந்தனன் ஆகிப் பட்டதை உரைப்ப
            மற்றவள் ஒருமயிர் கருவி தீண்டின்
            இற்றது என்னுயிர் இதுநீ விலக்கென
            நிகழ்ந்தது என்னென நீகடைக் கூட்ட
     15     முடிந்தது என்ன மடந்தையர் விளையாட்டு
 
              அன்றியுங் கரவொடு சென்றவள் புதுநலம்
            கொண்டுஒளித்து அருளக் கூறலும் உண்டோ
            கொற்றத் தேவி செற்றம் தீர்க்கும்
            பெற்றியர் எவரே ஆயினும் பெயர்வுற்று
     20     ஆறேழ் நாழிகை விலக்குவல் அத்துணை
            வேறொரு வரைநீ விடுத்தருள் என்று
 
              வென்றி வேந்தன் விடுப்ப விரைவொடு
            சென்றறி வான்போல் தேவியை வணங்கிக்
            கொற்றவன் தேடக் கோபமென்று ஒருத்தி
     25     கைத்தலத்து அமைப்பக் கால்நடுங் கினன்போல்
            குறைஇவள்கு என்னெனக் கோமகள் அறியா
            வார்ப்பொலி கழல்கால் மன்னவர் உருவில்
            தூர்த்தக் கள்வன் பால்போய்க் கேளென
 
              குறைஇவள்கு உண்டேல் கேசம் குறைத்தற்கு
     30     அறிவேன் யானெனக்கு உறையெனக் கூறலும்
 
              மற்றதற்கு ஏற்ற வகைபல உண்டுஅவை
            பத்திகள் ஆகியும் வில்பூட் டாகியும்
            அணில்வரி ஆகியு மான்புறம் ஆகியும்
            மணிஅறல் ஆகியும் வயப்புலி வரிபோல்
     35     ஒழுக்கத் தாகியும் உயர்ந்தும் குழிந்தும்
            கழுக்கொழுக்கு ஆகியுங் காக்கைஅடி ஆகியும்
            துடிஉரு வாகியும் சுழல்ஆறு ஆகியும்
            பணிவடி வாகியும் பாத்திவடி வாகியும்
            இருப்பவை பிறவுமாம் எடுத்ததை அருளுநின்
     40     திருக்கர மலர்மயிர் தீண்டல் தகாதால்
            ஒருகத் தரிகை தருகென வாங்கி
 
              ஒருபுல் எடுத்தனன் அதனள வறியா
            நான்மையின் மடித்தொரு பாதி கொண்டதன்
            காதளவு அறிந்தணி ஆணியும் பிறவும்
     45     மதிப்பொடு பல்கால் புரட்டினன் நோக்கி
            எடுத்திரு கையும் செவித்தலம் புதையாக்
            கண்சிம் புளியாத் தன்தலை பனித்திட்டு
 
              இங்கிதன் இலக்கணம் எளிதோ கேளினி
            நீர்மையும் கூர்மையும் நெடுமையும் குறுமையும்
     50     சீர்மையும் சிறப்பும் செறிந்துவனப்பு எய்திப்
            பூத்தொழில் மருவியது புகர்வயின் அணைந்தோர்க்கு
            ஆக்கஞ் செய்யும் அணங்கொடு மருவிய
            இலக்கண முடைத்தீ திவள்மயிர் தீண்டின்
            நலத்தகு மாதர்க்கு நன்றாம் அதனால்
     55     மற்றொன்று உளதேல் பொற்றொடி அருள்நீருணீ
            இத்தகைத் தீதென வெடுத்தனன் எறிய
 
              ஆகியது உணரும் வாகை வேந்தன்
            யூகியை வருகெனக் கூவினன் கொண்டு
            புகுந்ததை எல்லாம் கணந்தனில் புகல
 
       60     வயந்தகன் மொழிபொழுது இழிந்தது என்செயல்
            யானும் அவ்வள வானவை கொண்டு
            தேன்இமிர் கோதை கேசந் தாங்குவென்
            மற்றறி யேன்என வணங்கினன் போந்து
 
              கற்றறி வித்தகன் பொற்பணி வெண்பூக்
     65     கோவைத் தந்த மேவரச் சேர்த்திக்
            கூறை கீறிச் சூழ்வர உடீஇ
            நீறுமெய் பூசி நெடிய மயிர்களை
            வேறுவே றாகும் விரகுளி முடித்துக்
            கண்டோர் வெருவக் கண்மலர் அடக்கம்
     70     கொண்டோன் ஆகிக் குறிஅறி யாமல்
            கைத்தலம் ஒத்தாக் கயிட படை கொட்டிப்
            பித்தர் உருவில் உட்கெனத் தோன்றலும்
 
              ஏழை மாதரைச் சூழ்வர நின்ற
            பாவையர் பலரும் பயந்துஇரிந்து ஒடி
     75     விழுநரும் எழுநரும் மேல்வர நடுங்கி
            அழுநரும் தேவிபின்பு அணைநரும் ஆகத்
            தேன்தேர் கூந்தல் தானது நோக்கி
            மேன்மேல் நகைவர விரும்பினள் நிற்ப
 
              நின்ற வயந்தகன் நிகழ்ந்ததை உணர்த்தென
     80     அங்கொரு சிலதியை அரசற்கு உய்ப்பப்     
 
              புதுமான் விழியில் புரிகுழல் செவ்வாய்ப்
            பதுமா பதியை வருகெனக் கூஉய்
            வில்லேர் நுதல்வர வேந்தன் சென்றெதிர்
            புல்லினன் கொண்டு மெல்லென விருந்தொன்று
     85     உரைப்ப எண்ணி மறுத்துரை யானாய்த்
            திகைப்ப ஆயிழை கருத்துஅறிந் தனளாய்
 
              திகைப்ப ஆயிழை கருத்துஅறிந் தனளாய்
            அடிகள் நெஞ்சில் கடிகொண்டு அருளுமக்
            கருமம் எம்மொடு உரையாது என்னென
 
              யானுரை செய்யக் கூசுவென் தவ்வை
     90     தானே கூறு நீயது தாங்கிஎன்
            செயிர்கா ணாத தெய்வம் ஆதலின்
            உயிர்தந்து அருளென உரவோன் விடுப்ப
 
              முறுவல்கொண்டு எழுந்து முன்போந்து ஆயிழை
            தகும்பதந் தாழத் தான்அவள்கு அறியப்
     95     புகுந்ததை உணர்த்த வருந்திவள் பொருளாச்
            சீறி அருளுதல் சிறுமை உடைத்திது
            வீறுயர் மடந்தாய் வேண்டா செய்தனை
            அன்புடைக் கணவர் அழிதகச் செயினும்
            பெண்பிறந் தோர்க்குப் பொறையே பெருமை
     100     அறியார் போலச் சிறியோர் தேஎத்துக்
            குறைகண்டு அருளுதல் கூடாது அன்றியும்
            பெற்றேன் யான்இப் பிழைமறந்து அருளென
            மற்றவள் பின்னரும் வணங்கினள் நிற்பக்
 
              கோமகன்கு அவ்வயின் கோசலத் தவர்புகழ்க்
     105     காவலன் தூதுவர் கடைத்தலை யார்எனக்
            கடைகாப் பாளன் கைதொழுது உரைப்ப
 
              விடைகொடுத்து அவரைக் கொணர்மின் நீரெனப்
            பொன்திகழ் கோயில் புகுந்தனர் தொழுதுஒரு
            மந்திர ஓலை மாபெருந் தேவிக்குத்
     110     தந்தனன் தனியே வென்றி வேந்தன்
            கோவே அருளிக் கொடுக்கஎன நீட்டலும்
 
              ஏயமற்று இதுவும் இனிதென வாங்கி
            ஏவல் சிலதியை யாவயின் கூஉய்த்
            தேவிகண் போக்கத் திறத்துமுன் கொண்டு
 
              தேவிகண் போக்கத் திறத்துமுன் கொண்டு
     115     பதுமா பதியைப் பகருககென்று அளிப்ப
            எதிரெழுந் தனளாய் அதுதான் வாங்கிக்
 
              கோசலத்து அரசன் ஓலை மங்கை
            வாசவ தத்தை காண்கதன் தங்கை
            மாசின் மதிமுகத்து வாசவ தத்தை
     120     பாசவல் படப்பைப் பாஞ்சா லரசன்
            சோர்விடம் பார்த்தென் ஊரெறிந்து அவளுடன்
            ஆயமுங் கொண்டு போயபின்பு அவனை
 
              ஆயமுங் கொண்டு போயபின்பு அவனை
            நேர்நின் றனனாய் நெறிபடப் பொருதுகொல்
            வத்தவர் பெருமான் மங்கையர் பலருடன்
     125     பற்றினன் கொண்டு நற்பதிப் பெயர்ந்து
            தனக்குந் தங்கை இயற்பது மாபதி
            அவள்கும் கூறிட்டு அளிப்பத் தன்பால்
            இருந்ததுங் கேட்டேன் வசுந்தரி மகளெனப்
 
              இருந்ததுங் கேட்டேன் வசுந்தரி மகளெனப்
            பயந்த நாளொடு பட்டதை உணர்த்தாள்
     130     தன்பெயர் கரந்து மான னீகைஎன்று
            அங்கொரு பெயர்கொண்டு இருந்ததும் கேட்டேன்
            அன்புடை மடந்தை தங்கையை நாடி
            எய்திய துயர்தீர்த்து யான்வரு காறும்
            மையல் ஒழிக்க தையல் தான்மற்று
     135     இதுவென் குறையென எழுதிய வாசகம்
 
              பழுதின் றாக முழுவதும் உணர்ந்து
            வாசகம் உணரேன் வாசிமின் அடிகளென்று
            ஆசில் தவ்வை தன்கையில் கொடுப்ப
 
              வாங்கிப் புகழ்ந்து வாசகந் தெரிவாள்
     140     ஏங்கிய நினைவுடன் நினைந்தழுது உகுத்த
            கண்ணீர் கொண்டு மண்ணினை நோக்கிப்
            பெண்நீர் மைக்குஇயல் பிழையே போன்ம்எனத்
            தோயும் மையலில் துண்என் நெஞ்சமோடு
            ஆயிழை பட்டதற்கு ஆற்றா ளாஅவள்
 
              ஆயிழை பட்டதற்கு ஆற்றா ளாஅவள்
     145     கையில் கட்டிய கச்சுஅவிழ்த் திட்டு
            மைவளர் கண்ணியை வாங்குபு தழீஇக்
            குழூஉக்களி யானைக் கோசலன் மகளே
            அழேற்கஎம் பாவாய் அரும்பெறல் தவ்வை
            செய்தது பொறுஎனத் தெருளாள் கலங்கி
 
              செய்தது பொறுஎனத் தெருளாள் கலங்கி
     150     எழுதரு மழைக்கண் இரங்கிநீர் உகுப்ப
            அழுகை ஆகுலம் கழுமினள் அழிய
            விம்மி விம்மி வெய்துயிர்த்து என்குறை
            எம்முறை செய்தேன் என்செய் தேன்என
            மாதர்க் கண்ணீர் மஞ்சனம் ஆட்டி
     155     ஆதரத் துடைந்தனள் பேதைகண் துடைத்துக்
            கெழீஇய அவரைக் கிளந்துடன் போக்கித்
 
              தழீஇக் கொண்டு தானெதிர் இருந்து
            தண்ணென் கூந்தல் தன்கையின் ஆற்றிப்
            பண்ணிய நறுநெயும் எண்ணெயும் பெய்து
     160     நறுநீர் ஆட்டிச் செறிதுகில் உடீஇப்
            பதுமையுந் தானும் இனியன கூறிப்
            பொருவில் பக்கத்துப் பொற்கலம் ஏற்றி
            வருகென மூவரும் ஒருகலத்து அயில
 
              வரிநெடுந் தொடையல் வயந்தகன் அவ்வயின்
     165     விரைவில் சென்று வேந்தன்கு உரைப்ப
 
              முகில்தோய் மாமதி புகர்நீங் கியதுஎனத்
            திருமுகம் மலர முறுவல்கொண்டு எழுந்து
            வருகெனத் தழீஇ முகமன் கூறி
            ஒருபுள் பெற்றேன் நெருநல் இனிதென
 
       170     அதுநிகழ் வேலையில் புதுமண மாதரை
            வதுவைக் கோலம் பதுமை புனைகென்று
            அங்கொரு சிலதியைச் செங்கோல் வேந்தன்
            தன்பால் மணநிலை சாற்றென்று உரைப்பப்
 
              பிணைமலர்த் தொடையல் பெருமகன் அவ்வயின்
     175     பணைநிலைப் பிடிமிசைப் பலர்வரச் சாற்றி
            விரைபரித் தேரொடு படைமிடைந்து ஆர்ப்ப
            முரசுமுழங்கு முற்றத்து அரசுவந்து இறைகொளக்
            கோலத் தேவியர் மேவினர் கொடுப்ப
            ஓவியர் உட்கும் உருவியை உதயணன்
     180     நான்மறை யாளர் நன்மணங் காட்டத்
            தீவலஞ் செய்து கூடிய பின்றை
 
              முற்றிழை மகளிர் மூவரும் வழிபடக்
            கொற்ற வேந்தர் நல்திறை அளப்ப
            நல்வளந் தரூஉம் பல்குடி தழைப்பச்
     185     செல்வ வேந்தன் செங்கோல் ஓச்சித்
            தானா தரவும் மேன்மேல் முற்றவும்
            ஆனாது ஒழுகுமால் அல்லவை கடிந்துஎன்.