15. விரிசிகை வரவு குறித்தது

 

இதன்கண்: விரிசிகையின் இயல்பும் அவள் தந்தை உதயணனை அடைதலும் அவனுக்குக் கூறுதலும் உதயணன் விரிசிகைக்கு மலர்மாலை சூட்டிய செய்தியும், விரிசிகையின் முதுக்குறைவும், அவள் தந்தை அவளை மணந்துகொள்ளும்படி உதயணனுக்கு அறிவித்தலும், உதயணன் அச்செய்தியை வாசவதத்தைக்கு அறிவித்தலும், வாசவதத்தை உடன்படலும், உதயணன் விரிசிகையை மணத்தற்கு நன்நாள்கோடலும், நகரமாந்தர் மகிழ்ச்சியும் பிறவும் கூறப்படும்.
 
              ஆனாது ஒழுகுங் காலை மேனாள்
            இலைசேர் புறவின் இலாவாது ணத்துஅயல்
            கலைசேர் கானத்துக் கலந்துடன் ஆடிய
            காலத்து ஒருநாள் சீலத் திறந்த
     5      சீரை உடுக்கை வார்வளர் புன்சடை
            ஏதமில் காட்சித் தாபதன் மடமகள்
            பூவிரிந்து அன்ன போதமர் தடங்கண்
            வீழ்ந்தொளி திகழும் விழுக்கொடி மூக்கில்
            திருவில் புருவத்துத் தேன்பொதி செவ்வாய்
     10      விரிசிகை என்னும் விளங்கிழைக் குறுமகள்
 
              அறிவது அறியாப் பருவம் நீங்கிச்
            செறிவொடு புணர்ந்த செவ்வியள் ஆதலின்
            பெருமகன் சூட்டிய பிணையல் அல்லது
            திருமுகம் சுடரப் பூப்பிறிது அணியாள்
     15      உரிமை கொண்டனள் ஒழுகுவது எல்லாம்
            தரும நெஞ்சத்துத் தவம்புரி தந்தை
            தெரிவனன் உணர்ந்து விரைவனன் போந்து
 
              தெரிவனன் உணர்ந்து விரைவனன் போந்து
            துதைதார் மார்பின் உதையணன் குறுகிச்
            செவ்விக் கோட்டியுள் சென்றுசேர்ந்து இசைப்பித்து
     20     அவ்வழிக் கண்ணுற்று அறிவின் நாடிப்
            பயத்தொடு புணர்ந்த பாடி மாற்றம்
            இசைப்பதுஒன் றுடையேன் இகழ்தல்செல் லாது
            சீர்த்தகை வேந்தே ஓர்த்தனை கேண்மதி
 
              நீயே நிலமிசை நெடுமொழி நிறீஇ
     25     வீயாச் சிறப்பின் வியாதன் முதலாக்
            கோடாது உயர்ந்த குருகுலக் குருசில்
            வாடா நறுந்தார் வத்தவர் பெருமகன்
            தேன்ஆர் மார்ப தெரியின் யானே
            அந்தமில் சிறப்பின் மந்தர அரசன்
 
       30     யாப்புடை அமைச்சொடு காப்புக்கடன் கழித்தபின்
            உயர்ந்த ஒழுக்கோடு உத்தரம் நாடிப்
            பயந்த புதல்வரைப் படுநுகம் பூட்டி
            வளைவித் தாரும் வாயில் நாடி
            விளைவித்து ஓம்புதும் வேண்டிய தாம்என
     35     ஒடுக்கி வைக்கும் உழவன் போல
            அடுத்த ஊழிதோறு அமைவர நில்லா
            யாக்கை நல்லுயிர்க்கு அரணம் இதுவென
            மோக்கம் முன்னிய முயற்சியேன் ஆகி
            ஊக்கம் சான்ற உலகியல் திரியேன்
 
       40     உம்மைப் பிறப்பில் செம்மையில் செய்த
            தானப் பெரும்பயந் தப்புண்டு இறத்தல்
            ஞானத் தாளர் நல்லொழுக்கு அன்றென
            உறுதவம் புரிந்த ஒழுக்கினென் மற்றினி
            மறுவி லேனமர் மாபத் தினியும்
     45     காசி அரசன் மாசின் மடமகள்
            நீல கேசி என்னும் பெரும்பெயர்க்
            கோலத் தேவி குலத்தில் பயந்த
 
              வீயாக் கற்பின் விரிசிகை என்னும்
            பாசிழை அல்குல் பாவையைத் தழீஇ
     50     மாதவம் புரிந்தே மான்கணம் மலிந்ததோர்
            வீததை கானத்து விரதமோடு ஒழுகும்
            காலத்து ஒருநாள் காவகத்து ஆடிப்
            பள்ளி புகுந்து பாவம் கழூஉம்
            அறநீர் அத்தத்து அகன்றியான் போக
 
       55     மறுநீங்கு சிறப்பின் புண்ணியத் திங்கள்
            கணைபுரை கண்ணியைக் கவான்முதல் இரீஇப்
            பிணையல் சூட்டினை பெருந்தகை மற்றிது
 
              பிணையல் சூட்டினை பெருந்தகை மற்றிது
            புணைதனக் காகப் புணர்திறனன் உரைஇ
            உற்றது முதலா உணர்வுவந்து அடைதரப்
     60     பெற்றவன்கு அல்லது பெரியோர் திரிப்பினும்
            கோட்டமில் செய்கைக் கொள்கையின் வழாஅள்
            வேட்கையின் பெருகிநின் மெய்ப்பொருட்டுஅமைந்த
            மாட்சி நெஞ்சம் மற்றுநினக்கு அல்லது
            மறத்தகை மார்ப திறப்பரிது அதனால்
 
       65     ஞாலம் விளக்கும் ஞாயிறு நோக்கிக்
            கோலத் தாமரை கூம்புஅவிழ்ந் தாங்குத்
            தன்பால் பட்ட அன்பின் அவிழ்ந்த
            நன்நுதல் மகளிர் என்னர் ஆயினும்
            எவ்வம் தீர எய்தினர் அளித்தல்
     70     வையத்து உயர்ந்தோர் வழக்கால் வத்தவ
            யாம்மகள் தருதும் கொள்கெனக் கூறுதல்
            ஏம வையத்து இயல்பன்று ஆயினும்
 
              வண்டார் தெரியல் வாண்முகம் சுடரப்
            பண்டே அணிந்தநின் பத்தினி ஆதலின்
     75     பயந்தனர் கொடுப்ப இயைந்தனர் ஆகுதல்
            முறையே என்ப இறைவ அதனால்
            யானே முன்நின்று அடுப்ப நீயென்
            தேனேர் கிளவியைத் திருநாள் அமைத்துச்
            செந்தீக் கடவுள் முந்தை இரீஇ
     80     எய்துதல் நன்றெனச் செய்தவன் உரைப்ப
 
              மாதவன் உரைத்த வதுவை மாற்றம்
            காவல் தேவிக்குக் காவலன் உணர்த்த
 
              மணிப்பூண் வனமுலை வாசவ தத்தை
            பணித்தற்கு ஊடாள் பண்டே அறிதலின்
     85     உவந்த நெஞ்சமொடு நயந்திது நன்றென
 
              அரிதில் பெற்ற அவந்திகை உள்ளம்
            உரிதின் உணர்ந்த உதயண குமரன்
            ஓங்குபுகழ் மாதவன் உரைத்ததற்கு உடம்பட்டு
            வாங்குசிலை பொருதோள் வாழ்த்துநர் ஆர
     90     அரும்பொருள் வீசிய அங்கை மலரிப்
            பெரும்பொருள் ஆதலின் பேணுவனன் விரும்பி
            நீரின் கொண்டு நேரிழை மாதரைச்
            சீரின் கூட்டுஞ் சிறப்பு முந்துறீஇ
            நாடு நகரமும் அறிய நாள்கொண்டு
     95     பாடிமிழ்  முரசம் பல்லூழ் அறைய
            மாக விசும்பின் வானோர் தொக்க
            போக பூமியின் பொன்னகர் பொலிய            
 
              நாற்பான் மருங்கினும் நகரத் தாளர்
            அடையாக் கடையர் வரையா வண்மையர்
     100     உடையோல் இல்லோர்க்கு உறுபொருள் வீசி
            உருவத் தண்தழைத் தாபதன் மடமகள்
            வருவழிக் காண்டும் நாமென விரும்பித்
 
 

            தெருவிற் கொண்ட பெருவெண் மாடத்துப்
            பொற்பிரம்பு நிரைத்த நற்புற நிலைச்சுவர்
     105     மணிகிளர் பலகை வாய்ப்புடை நிரைத்த
            அணிநிலா முற்றம் அயலிடை விடாது
            மாத்தோய் மகளிர் மாசில் வரைப்பின்
            பூத்தோய் மாடமும் புலிமுக மாடமும்
            கூத்தாடு இடமுங் கொழுஞ்சுதைக் குன்றமும்
     110     நாயில் மாடமும் நகரநன் புரிசையும்
            வாயில் மாடமும் மணிமண் டபமும்
            ஏனைய பிறவும் எழில்நகர் விழவணி
            காணும் தன்மையர் காண்வர ஏறிப்

 
              பிடியும் சிவிகையும் பிறவும் புகாஅள்
     115     இடுமணல் வீதியுள் இயங்குநள் வருகெனப்
            பெருமகன் அருளினன் பெறற்குஅரிது என்று
            கழிபெருங் காரிகை.......................
            ..................................
            .....................மொழிந்தழி வோரும்
            சேரி இறந்து சென்று காணும்
     120     நேரிழை மகளிர் எல்லாம் நிலையெனப்
            பேரிள மகளிரைப் பெருங்குறை யாகக்
            கரப்பில் உள்ளமொடு காதல் நல்கி
            இரப்புள் ளுறுத்தல் விருப்புறு வோரும்
 
              வண்டல் ஆடிய மறுகினுள் காண்பவை
     125     கண்டுஇனிது வரூஉங் காலம் அன்றெனக்
            காவல் கொண்டனர் அன்னையர் நம்மென
            நோவனர் ஆகி நோய்கொள் வோரும்
 
              எனையோர் பிறரும் புனைவனர் ஈண்டி
            விரைகமழ் கோதை விரிசிகை மாதர்
     130     வருவது வினவிக் காண்பது மால்கொளக்
            காண்பதொன்று உண்டெனக் கைத்தொழில் மறக்கும்
            மாண்பதி இயற்கை மன்னனும் உணர்ந்து
 
              தடந்தோள் வீசித் தகைமாண் வீதியுள்
            நடந்தே வருக நங்கை கோயிற்கு
     135     அணியில் யாக்கை மணியுடை நலத்தின்
            தமியள் என்பது சாற்றுவனள் போலக்
            காவல் இன்றிக் கலிஅங் காடியுள்
            மாவும் வேழமும் வழக்குநனி நீக்கி
            வல்லென மணிநிலம் உறாமை வாயில்
     140     எல்லை யாக இல்லந் தோறும்
            மெல்லென் நறுமலர் நல்லவை படுக்கென
            உறுதொழிஇல் இளையரை யுதயணன் ஏவா
 
              மறுவில் மாதர் ஒழியநம் கோயில்
            நறுநுதல் மகளிரொடு நன்மூ தாளரும்
     145     நண்பில் திரியாது பண்பொடு புணர்ந்த
            காஞ்சுகி மாந்தரும் தாம்சென்று தருகென
            நடந்தே வருமால் நங்கைநம் நகர்க்கென
            நெடுந்தேர் வீதியும் அல்லா இடமும்
            கொடைநவில் வேந்தன் கொடிக்கோ சம்பி
     150     நிலைஇடம் பெறாது நெருங்கிற்றால் சனம்என்.