17. விரிசிகை வதுவை

 

இதன்கண் : விரிசிகையின் தந்தை தவம் புரியச் செல்லலும் அவள் தமர் அவள் விளையாட்டுப் பொருள்களை ஏந்திக்கொண்டு அவளுடன் செல்லுதலும், கண்டோர் கூற்றும், விரிசிகை அரண்மனையை யடைதலும், உதயணன் விரிசிகையை மணந்து இன்புறலும் கூறப்படும்.
 
              விடுத்தனர் போகி விரிசிகை தன்தமர்
            அடுத்த காதல் தந்தைக்கு இசைப்ப
            மாதவன் கேட்டுத்தன் காதலி தனைக்கூஉய்
            வடுத்தீர் பெரும்புகழ் வத்தவர் பெருமான்கு
     5      அடுத்தனென் நங்கையை நின்னை யானும்
            விடுத்தனென் போகி வியன்உலகு ஏத்த
            வடுத்தீர் மாதவம் புரிவேன் மற்றெனக்
            கேட்டவள் கலுழ வேட்கையின் நீக்கிக்
            காசறு கடவுள் படிவம் கொண்டாங்கு
     10     ஆசறச் சென்றபின் மாசறு திருநுதல்
 
              விரிசிகை மாதர் விளையாட்டு விரும்பும்
            பள்ளியுள் தன்னொடு பலநாள் பயின்ற
            குயிலும் மயிலுங் குறுநடைப் புறவும்
            சிறுமான் பிணையும் மறுநீங்கு யூகமும்
     15      காப்பொடு பேணிப் போற்றுவனள் உவப்பில்
            தந்த பாவையும் தலையாத் தம்முடை
            அந்தணர் சாலை அருங்கலம் எல்லாம்
            அறிவனர் தழீஇத் தகைபா ராட்டிப்
            பூப்புரி வீதி பொலியப் புகுந்து
     20     தேற்றா மென்நடைச் சேயிழை தன்னொடு
            செல்வோர் கேட்பப் பல்லோர் எங்கும்
 
              செல்வோர் கேட்பப் பல்லோர் எங்கும்
            குடிமலி கொண்ட கொடிக்கோ சம்பி
            வடிநவில் புரவி வத்தவர் பெருமகன்கு
            ஆக்கம் வேண்டிக் காப்புடை முனிவர்
     25     அஞ்சுதரு முதுகாட்டு அஞ்சார் அழலின்
            விஞ்சை வேள்வி விதியில் தந்த
            கொற்றத் திருமகள் மற்றிவள் தன்னை
            ஊனார் மகளிர் உள்வயிற்று இயன்ற
            மானேர் நோக்கின் மடமகள் என்றல்
     30     மெய்யன்று அம்மொழி பொய்என் போரும்
 
              மந்திர மகளிரின் தோன்றிய மகள்எனின்
            அந்தளிர்க் கோதை வாடிய திருநுதல்
            வேர்த்தது...........................
            ..............பெருமைப் பயத்தால் பயந்த
     35     மாதவன் மகளே யாகும்இம் மாதர்
            உரையன்மின் இம்மொழி புரையாது என்மரும்
 
              அறுவில் தெண்ணீர் ஆழ்கயம் முனிந்து
            மறுவில் குவளை நாள்மலர் பிடித்து
            நேரிறைப் பணைத்தோள் வீசிப் போந்த
     40     நீர்அர மகளிவள் நீர்மையும் அதுவே
            வெஞ்சினந் தீர்ந்த விழுத்தவன் மகள்எனல்
            வஞ்சம் என்று வலித்துரைப் போரும்
 
              கயத்துறு மகளெனில் கயலேர் கண்கள்
            பெயர்த்தலும் மருட்டி இமைத்தலும் உண்டோ
     45     வான்தோய் பெரும்புகழ் வத்தவர் பெருமகன்
            தேன்தோய் நறுந்தார் திருவொடு திளைத்தற்கு
            ஆன்ற கேள்வி அருந்தவன் மகளாய்த்
            தோன்றிய தவத்தள் துணிமின்என் போரும்
 
              பரவை மாக்கடல் பயங்கெழு ஞாலத்து
     50     உருவின் மிக்க வுதயணன் சேர்ந்து
            போக நுகர்தற்குப் புரையோர் வகுத்த
            சாபந் தீர்ந்து தானே வந்த
            கயக்கறும் உள்ளத்துக் காமம் கன்றிய
            இயக்கி இவளே என்மகள் என்று
     55     மாதவ முனிவன் மன்னற்கு விடுத்தரல்
            ஏத மாங்கொல்இஃது என்றுரைப் போரும்
 
              ஈரிதழ்க் கோதை இயக்கி இவளெனின்
            நேரடி இவையோ நிலம்முதல் தோய்வன
            அணியும் பார்வையும் ஒவ்வா மற்றிவள்
     60     மணிஅணி யானை மன்னருள் மன்னன்
            உதயண குமரன் உறுதார் உறுகென
            நின்ற அருந்தவம் நீக்கி நிதானமொடு
            குன்றச் சாரல் குறைவின் மாதவர்
            மகளாய் வந்த துகளறு சீர்த்தி
     65     நாறிருங் குழல்பிற கூறன்மின் என்மரும்
 
              இமிழ்திரை வையத்து ஏயர் பெருமகன்
            தமிழியல் வழக்கினன் தணப்புமிகப் பெருக்கி
            நிலவரை நிகர்ப்போர் இல்லா மாதரைத்
            தலைவர விருந்தது தகாதுஎன் போரும்
 
       70     சொல்லியல் பெருமான் மெல்லியல் தன்னைக்
            கண்டோர் விழையும் கானத்து அகவயின்
            உண்டாட்டு அமர்ந்தாங்கு உறையுங் காலைத்
            தனிமை தீர்த்த திருமகள் ஆதலின்
            இனிய னாதல்நன்று என்றுரைப் போரும்
 
       75     பவழமும் முத்தும் பசும்பொன் மாசையும்
            திகழொளி தோன்றச் சித்திரித்து இயற்றிய
            அணிகலம் அணிவோர் அணியி லோரே
            மறுப்பருங் காட்சி இவள்போல் மாண்டதம்
            உறுப்பே அணிகல மாக உடையோர்
     80     பொறுத்தல் மற்றுச்சில பொருந்தாது என்மரும்
 
              யாமே போலும் அழகுடை யோம்எனத்
            தாமே தம்மைத் தகைபா ராட்டி
            நாண்இகந்து ஒரீஇய நாவுடைப் புடையோர்
            காணிக மற்றிவள் கழிவனப்பு என்மரும்
 
       85     ஏதமில் ஒழுக்கின் மாதவர் இல்பிறந்து
            எளிமை வகையின் ஒளிபெற நயப்பப்
            பிறநெறிப் படுதல் செல்லாள் பெருமையின்
            அறநெறி தானே அமர்ந்துகை கொடுப்ப
            அம்மை அணிந்த அணிநீர் மன்றல்
     90     தம்முள் தாமே கூடி யாங்கு
            வனப்பிற்கு ஒத்த இனத்தினள் ஆகலின்
            உவமம்இல் உருவின் உதயணன் தனக்கே
            தவமலி மாதர் தக்கனள் என்மரும்
            இன்னவை பிறவும் பன்முறை பகர
 
       95     ஆய்பெரும் சிறப்பின் அருந்தவர் பள்ளியுள்
           பாயல் கிடந்த பன்மலர் மிதிப்பினும்
           அரத்தம் கூரும் திருக்கிளர் சேவடி
           சின்மலர் மிதித்துச் சிவந்துமிகச் சலிப்ப
           மென்மெல இயலி வீதி போந்து           
 
       100    கொடிபட நுடங்கும் கடிநகர் வாயில்
           முரசொடு சிறந்த பல்இயம் கறங்க
           அரச மங்கலம் அமைவர ஏந்திப்
           பல்பூம் படாகை பரந்த நீழல்
           நல்லோர் தூஉம் நறுநீர் நனைப்பச்
     105    சேனையும் நகரமும் சென்றுடன் எதிர்கொள
           ஆனாச் சிறப்போடு அகன்மனை புகுதலின்
 
             தானை வேந்தன் தான்நெறி திரியான்
           பூவிரி கூந்தல் பொங்கிள வனமுலைத்
           தேவியர் மூவரும் தீமுன் நின்றுஅவள்கு
     110    உரிய ஆற்றி மரபறிந்து ஓம்பி
           அருவிலை நன்கலம் அமைவர ஏற்றிக்
           குரவர் போலக் கூட்டுபு கொடுப்பக்
           கூட்டமை தீமுதல் குறையா நெறிமையின்
           வேட்டவள் புணர்ந்து வியனுலகு ஏத்த
 
              வேட்டவள் புணர்ந்து வியனுலகு ஏத்த
     115     அன்புநெகிழ்ந்து அணைஇ இன்சுவை அமிழ்தம்
            பனியிருங் கங்குலும் பகலும் எல்லாம்
            முனிவிலன் நுகர்ந்து முறைமுறை பிழையாது
            துனியும் புலவியும் ஊடலுந் தோற்றிக்
            கனிபடு காமங் கலந்த களிப்பொடு
     120     நற்றுணை மகளிர் நால்வரும் வழிபட
            இழுமென் செல்வமொடு இன்னுயிர் ஓம்பி
            ஒழுகுவனன் மாதோ வுதயணன் இனிதுஎன்.