1. வயாக் கேட்டது

 

இதன்கண் : உதயணன் வணிகருடைய வழக்கைக் கேட்டலும், அவன் மகப்பேறு விரும்பலும், வாசவதத்தையின் செயலும், உதயணன் செயலும், அவன் கனவுகாண்டலும், அதன் பயனை அறிதலும் வாசவதத்தை வயிறுவாய்த்தலும், அவள் ஒரு கனவு கண்டு உதயணனுக்கு உரைத்தலும், உதயணன் அக்கனவின் பயன் கூறலும், வாசவதத்தைக்குத் தோன்றிய வயா விருப்பமும், உதயணன் அவள் விருப்பத்தை வினாதலும், அவள் கூறலும், அது கேட்ட உதயணன் அமைச்சரொடு ஆராய்தலும் கூறப்படும்.
 
 

              உதையணன் குமர உவந்துண் டாடிச்
              சிதைவில் போகமொடு செங்கோல் ஒச்சி
              ஒழுகுங் காலை ஓரிடத்து ஒருநாள்
              கழிபெருங் கேள்விக் கண்போன் மக்களொடு
   5          பேர்அத் தாணியுள் பொருந்தச் சென்றபின்

 
                வாரமில் ஒழுக்கின் வாணிகர் ஈண்டி
              முறையொடு சென்று முறைமையில் பிழையாக்
              கரைதீர் செங்கோல் காவலற்கு இசைத்து
              முறைஇது கேட்கெனக் கேட்பது விரும்பி
   10          உருமண் ணுவாவினைப் பெருமகன் பணியா
              வினாவஅன் னாற்கு வினாவெதிர் வழாமை
 
 

             மூவர் ஆவார் ஒருமகற்கு ஒருத்திகண்
             மேவரத் தோன்றிய மக்களம் மூவரும்
             ஆன்ற கேள்வியொடு அறநெறி திரியார்
   15         மூன்றுதிறம் பட்ட விருப்பினர் அவருள்

 
                எறிதிரை முந்நீர் ஊடுசென்று அவ்வழி
              உறுவிலைப் பண்டத்தின் ஒருவன் வாழும்
              கடையகத்து இருந்துதன் உடையது பெருக்கிப்
              பிரிவிலன் வாழும் ஒருவன் ஒருவன்
   20         அரிய பண்டம் எளிதின் அடக்கிஅவை
              உரிய காலத்து உற்றது பகரும்
              இன்னவை மற்றவர் இயற்கை முன்னோன்
 
                பொலம்படு தீவிற்குக் கலந்தலைப் பெயர்ந்துழிச்
              சூழ்வளி சுழற்ற வாழ்கயத்து அழுந்தினன்
   25         அழுந்தினன் என்பது கேட்டே அறிவயர்ந்து
              இழிந்த இருவரும் உறுகடன் கழிப்பித்
 
                தவ்வையைச் சேர்ந்து கவ்விதின் மொழியச்
              சென்றதும் நின்றதும் சிதைவின்று எண்ணி
              நன்றுசேய் வாழ்க்கை என்றெடுத்து இற்றென
   30         ஒன்றும் உரையாள் ஒருமைக் கோடலின்
              வென்றித் தானை வீர வேந்தநின்
              அடிநிழல் அடைந்தனம் அதுவெம் குறையென  
உரை
 
                முடிவுநனி கேட்டலும் முன்னோன்கு அமைந்த
              கழிபெருங் காதலி மறுமொழி எதுவெனச்
   35         சுற்ற மாந்தர் சொல்லுவார் மாறல
              உற்றவர் உரைத்தவை ஒக்கும் அவனொடு
              சென்றோர் ஒருவருஞ் சிதைகலத்து உய்ந்து
              வந்தோர் இல்லை மாந்தளிர் மேனிக்குக்
              கருவும் உண்டே திருவமர் மார்ப
   40         தெய்வம்........................................
              ..................படுத்த மாற்றமும் தெளியாள்
              ஐயத்து உள்ளமொடு அதுவும் படாளென
              இருவர் மாற்றமும் தெரிகஎன்று ஏவலின்
 
                உருமண் ணுவாஅதற்கு உறுவழக்கு உரைத்தனன்
   45         வருக அப்பொருள் வந்தபின் அவ்வழி
              இருவரும் இலைச்சித்து ஈரறு திங்கட்கு
              ஒருவன் கையகத்து இருக்க இருந்தபின்
              மிக்கோண் மாற்றம் மெய்யெனின் மேலை
              இயல்பே ஆகு அதுதான் அன்றி
   50         மறுவில் கொள்கையோர் சிறுவனைப் பெறினே
              உறுபொருள் மற்றிவர் உரைக்கவும் பெறாஅர்
              வெண்குடை நிழற்றிய வேந்தே பெண்பெறின்
              புறநடை ஒழித்திவர் திறவதின் எய்துப
              நூல்நெறி இதுவென நுழைந்தவன் உரைத்தலும்
   55         ஆனா அவரவர் அகத்திறத்து அடைதர
 
               அவையம் போக்கி நவையறு நெஞ்சினன்
             மக்கள் இன்றெனின் மிக்குயர் சிறப்பின்
             என்குலம் இடையறும் எனநினைந்து ஆற்றான்
             கொற்றத் தேவியைக் குறுகலும் அவளும
 
     60        பொற்றொடித் தோழியர் புரிந்துபுறங் காப்பத்
             திருவொடு பூத்த நாள்வரை இறந்தபின்
             பெருவிறல் நோன்பிகட்குப் பெலிக்கொடை ஆற்றி
             ஆசிடைக் கிளவி அவரின் எய்தி
             மாசில் கற்பின் மங்கலக் கோலமொடு
  65         உருவமை மாடத்து ஓரிடத்து திருந்தோள்
 
               விரிகொடிப் பவழத்தின் விரிந்த சேவடிக்
             காழகில் புகைநிறம் கடுக்கும் தூவிப்
             பல்சிறைப் புறவம் பரிந்துடன் ஆடி
             அவ்வாய்க் கொண்ட ஆரிரை அமிழ்தம்
  70         செவ்வாய்ப் பார்ப்பிற்குச் சேர்ந்துஅவண் சொரிதலின்
             உறுபசி வருத்தமும் அன்பினது பெருமையும்
             திறவதின் நோக்கித் தெரியா நின்றுழி
 
               வேந்தனும் வினவியவள் வேட்கை விரும்பித்
             தாம்படு மாந்தர்க்குத் தண்ணீர் போலும்
  75         காம்படு தோளியொடு கலந்துமகிழ்வு எய்திய
 
                துயிலிடை யாமத்துத் துளங்குபு தோன்றி
              அயில்வேல் நெடுங்கண்ஓர் ஆயிழை அணுகி
              அருளும் எம்மிறை எழுபுவி அளித்தற்குப்
              பொருளும் அதுவே போதுக என்றலின்
 
      80        யாரவன் கூறென அவ்வழி இறைஞ்சிப்
              பேரவள் உரைத்தலின் பெருமகன் நோக்கித்
              துன்பமும் மின்பமுந் துறக்கல் ஆற்றா
              மன்பெருந் தேவியொடு செலஉளம் அமர்தலின்
              மற்றதை உணர்த்தி முற்றிழை எழுகெனப்
  85          பற்றுநள் உடனே பறந்துவிசும்பு இவர
              மேலுங் கீழும் மேவர நோக்கி
              மாசறு மகளிர் மம்மர் எய்தி
              ஆனாக் கனவிடை மாநிதிக் கிழவன்
              விளங்கவை நாப்பண் துளங்கினர் புகுதலின்
 
    90          அரிமா சுமந்த அமளி காட்டத்
              திருமாண் ஆகத்துத் தேவியொடு ஏறி
              இருந்த பொழுதின் பொருந்திய வல்லியுள்
              வெள்ளேறு கிடந்த வெண்தா மரைப்பூக்
              கொள்வழி யெழுதிய கொடுஞ்சி உடைத்தேர்ப்
  95          பொன்னியல் தொடரின் புதல்வன் இருத்தலின்
 
                பின்னர்ப் பூவின் பிக்கம் நோக்கிப்
              பிறழ்ந்த ஆழியிற் பெருநடு வாக
              உறழ்ந்துநனி அழுத்திய உறுபொன் னல்லியின்
              ஒருமுடி பிறழ்தலின் அருமையொடு விரும்பிக்
  100          கொண்டது வாஎனக் கோமகள் கொண்டு
              வண்டுஅவிழ் நறுந்தார் வத்தவன்கு அருளி
              நெடித்தனென் எழுகென விடுத்தனள் போகக்
 
                கொடிக்கோ சம்பி குறுகித் தமரிடை
              முடிக்கலம் எல்லாம் முறைமையின் நோக்கிக்
  105          கைவினைக் கம்மத்துக் கதிர்ப்புநனி புகழ்ந்து
              வேண்டுக இதுவென விளங்கிழைக் கோமகட்கு
              ஈயக் கொண்டுதன் இடைமுலைச் சேர்த்தலும்
              காய்கதிர்க் கனலியில் கதுமெனப் போழ்ந்து
              புக்கது வீழ்தலும் பொருக்கென வெரீஇ
  110          எழுந்த மாதரொடு இறைவனும் ஏற்றுக்
 
 

              கழிந்த கங்குல் கனவினை வியந்து
              நூல்நெறி மரபின் வல்லோன் பேணிக்
              கோலத் தேவியொடு கோமகன் வினவக்
              கனவது விழுப்பம் மனவயின் ஆய்ந்து
  115          விளங்கொளி விஞ்சையர் வெள்ளியம் பெருமலைத்
              துளங்கா வாழி தோன்ற வேந்தும்
              வெய்யோன் பெறுதலும் விறல்அவன் எய்தலும்
              ஐயம் இல்லைஎன்று ஆய்ந்தவன் உரைப்பப்
              புதல்வன்அஃது எதிர்மை பொருளென விரும்பித்
  120          திதலை அல்குல் தேவியொடு மகிழ்ந்து
              செல்லா நின்ற சின்நாள் எல்லையுள்

 
                பல்கதிர் மதியமொடு பரந்துவிசும்பு ஓடும்
              வியந்த நற்கோள் உயர்ந்துழி நோக்கிப்
              பெயர்ந்துவரு நாளில் பெருமையின் வழாத
  125          நன்னாள் அமயத்து மின்என நுடங்கி
              விஞ்சையர் ஆழி உருட்டும் வேட்கையொடு 
 
                அம்செந் தாமரை அகவயின் நிறைந்த
              வெண்பால் புள்ளின் விழையுந் தன்மையொடு
              அவந்தியன் மடமகள் அணிவயிற் றங்கண்
  130          வியந்துதலை பனிக்கும் வென்றி வேட்கையொடு
              சேட்படு விசும்பில் சென்றவன் அவ்வழிப்
              பொய்ப்படு குருசில் பொலிவொடு பட்டென     
 
                 முயக்கமைவு இல்லா நயப்புறு புணர்ச்சியுள்
               அணிநிற அனிச்சம் பிணியவிழ்ந்து அலர்ந்த
  135           அந்தன் நறுமலர் அயர்ப்பில் தாங்கும்
               செந்தளிர்...........................வருந்த வசாஅய்
               நிலாஉறழ் பூந்துகில் ஞெகிழ்ந்திடைத் தோன்றக்
               கலாவப் பல்காழ் கச்சுவிரிந்து இலங்கத்
               திருநுதல் திலகமும் சுமத்தல் ஆற்றாள்
 
     140         பெருமதர் மழைக்கண் இன்துயில் பேணிய
              இன்ப யாமம் இயைந்த வைகறை
              நன்பெருங் கனவின் நடுங்குவனள் ஏற்று
              வெள்ளத் தானை வியலக வேந்தன்
              பள்ளி ஏற்றபின் பதன்அறிந்து வணங்கி
  145         என்னைகொல் அடிகள் இன்றியான் கண்டது
              விண்ணக மருங்கில் வெண்முகில் புரைவதோர்
              அண்ணல் யானைஎன் கண்ணுற வந்துதன்
              ஆய்வலித் தடக்கை சுருட்டுபு முறுக்கிஎன்
              வாய்புக்கு அடங்கிய பொழுதில் சேய்நின்று
 
     150         அந்தர மருங்கில் துந்துபி கறங்கப்
               புகழ்ந்துபலர் ஏத்தப் பொருக்கெனப் பெயர்த்தே
               உமிழ்ந்தனென் உமிழப் பரந்துஇறகு தோற்றிப்
               பல்லோர் மருளப் பறந்துசென்று உயர்ந்ததோர்
               வெண்மலை மீமிசை ஏறி வேட்கையின்
  155          விண்மிசை ஞாயிறு விழுங்கக் கண்டனென்
               என்னைகொல் இதனது பயமென வினவிய
               நன்னுதல் கேட்ப மன்னவன் உரைக்கும்
 
                 மறுவின்று விளங்கு மறப்போர் ஆற்றலோர்
               சிறுவனைப் பெறுதி சேயிழை மற்றவன்
  160           உறுதிரைப் பக்கமும் வானமும் போகி
               அச்சமில் ஆற்றலோர் விச்சா தரர்இடை
               ஆழி உருட்டுமென்று அறிந்தோர் உரைத்த
               வீழா விழுப்பொருள் மெய்பெறக் கண்டனை
               தீதின்று ஆகித் திருவொடு புணர்கென
  165           மாதாங்கு குருசிலும் அதுவே இறுப்பப்
               போதேர் கண்ணியும் புகன்றனள் ஒழுக  
 
                 மங்குல் விசும்பின் வளர்பிறை போலவும்
               பொங்குநீர்ப் பொய்கையில் பூவே போலவும்
               நாளினும் நாளினும் நந்திவனப்பு எய்தித்
  170           தோளுந் தாளும் உடம்புந் தலையும்
               உகிரும் மயிரும் ஒருங்குகுறைவு இன்றி
               ஓதிய வனப்போடு உயர்நெறி முற்றி
               அருவினை விச்சை அவன்ஊடு உறைதலின்
               பெருமலை உலகம் பேணும் அவாவொடு
  175           பறத்தல் ஊற்றம் பிறப்பப் பைம்பூண்
               சிறப்பொடு புணர்ந்த சேயிழை மாதர்
               குடர்வயின் கிடந்த குழவியது உள்ளத்து
               இடர்வகை அறியாள் எவ்வம் எய்தி
 
                 உணர்ந்தோர் உரைப்ப உரையில் கேட்கும்
  180          இருவகை இமயமும் பெருகுபுனல் யாறும்
               நீலப் பருப்பமும் தீபமும் அப்பால்
               கோல அருவியம் சிகரியும் ஞாலத்து
               ஒருநடு வாகிய உயர்பெருங் குன்றமும்
               பெருமலை பிறவும் அருமையொடு புணர்ந்த
 
 

   185          இறுவரை ஏறி இமையோடு ஆடும்
               நறுமலர்ப் பொய்கையும் நந்தா வனமும்
               உத்தர குருவினோடு ஒத்தவை பிறவும்
               ஆண்டுபோந்து எழுந்து காண்டல்உற விழையா
               ஐவகைச் சோதிடர் அணிபெறு கற்பம்
  190          கைவைத்து ஒழியக் கடந்துசென்று உப்பால்
               அமரா பதியும் அந்தரத்து எல்லையும்
               நுகர்பூங் காவும் நோக்குபு வருதற்கு
               உற்றதென் மனனெனும் உணர்வினள் ஆகி

 
                மற்றுப்பிறர்க்கு உரையாள் மனத்தே அடக்கி
  195         ஈர்க்கொடு பிறந்த இளந்தளிர் போல
              மாக்கேழ் ஆகமும் மருங்குலும் வருந்த
              முலைக்கண் கறுப்பத் தலைக்கவின் எய்தி
 
 

              வளம்பால் தன்மையின் வந்துபுடை அடுத்த
              இளம்பாற்கு எதிர்ந்த இடத்த ஆகிய
  200         முலைபொறை யாற்றா முனிவின்று அலையும்
              மலைபொறுத்து என்ன மகனையும் தாங்கி
              நொந்துபுறம் மெலிந்தது அன்றியும் அந்தரத்து
              இயங்கல் வேட்கையன் இருக்குநன் ஆதலின்
              அயங்கவன் அழற்ற அசைவு முந்துறீஇ

 
    205         முக்கூட்டு அரத்த ஒண்பசை விலங்கி
              நெய்க்கூட்டு இலங்கு நித்திலம் நிகர்த்துக்
              கூரிய ஆகிய நேரியன் முறுவல்
              செவ்வாய் திறந்து சில்லென மிழற்ற
              ஐதேந்து அல்குலும் ஆகமும் அசைஇ
  210          மைதோய் கண்ணி மதியின் மெலியப்
 
                பசைவுறு காதல் பட்டத் தேவி
              அசைவுறு வெந்நோய் றிந்த அரசன்
              அசாஅ வரும்பொருள் யாதென வுசாஅய்க்
              கேட்பஅஃது உரையாள் வேட்பது விளம்பின்
  215          நயந்தோர்க்கு ஆயினும் நாணுத்தக்கு அன்றென
              உயர்ந்தோர் கொள்கையின் ஒண்தொடி ஒதுங்க
              மன்னவன் மறுத்து மடவோய் மற்று
              ...............................................................
              நின்உயிர் மதியாய் ஆயின் என்னுயிர்
              யானும் வேண்டேன் ஆயிழை கேண்மோ
 
    220         கூடிய கொழுநன் கொழுங்குடர் மிசைகுற
              ஓடிய உள்ளத்து உயர்துணைத் தேவியைக்
              குறையில் கேட்டுக் கொடுத்துநோய் தணித்த
              மறைஇல் பெரும்புகழ் மன்னவன் போல
              என்னது ஆயினும் ஈகுவன் மற்றுநின்
  225         இன்னா வெந்நோய் எத்திறத்து ஆயினும்
             ஒடுங்கா உள்ளமொடு அகற்றுவல் யான்எனக்
             கடுஞ்சூள் அறைஇக் காவலன் கேட்ப           
உரை
 
               ஒழுக்கினும் கற்பினும் இழுக்கம் இன்றெனப்
             பசைஇய கேள்வனைப் பைந்தொடி வணங்கி
  230        அசையா ஊக்கத்து அடிகளென் உள்ளம்
             விசைகொள் நோன்றாள் விச்சா தரர்போல்
             மிசையே சென்றுற மேன்மேல் நெருங்கும்
             இசையா அரும்பொருள் இற்றென உரைத்தல்
             வசைதீர் வையத்து நகையது ஆதலின்
  235        சொல்லியது இலன்என மெல்லியல் மிழற்ற
 
 

             எளிதெனக்கு என்ன அமைச்சரோடு ஆராய்ந்து
             ஒளிமலர்க் கோதாய் உற்றபின் அறிஎனத்
             துன்பம் நீக்குந் தோழரோடு இயைந்தே
             இன்பக் கோட்டியுள் இனிதின் இருந்து
  240        பேராக் கழல்கால் பெருந்தகை வேந்தன்
             ஆர்வவேய்த் தோளி அசாநோய் தீரிய
             ஆராய்ந் தனனால் அமைச்சரோடு ஒருங்குஎன்.

                1. வயாக்கேட்டது முற்றிற்று