2. இயக்கன் வந்தது

 

இதன்கண் : உருமண்ணுவா வருதலும், உதயணன் அவனுக்குக் கூறுதலும், உருமண்ணுவா ஓர் இயக்கனைப் பற்றிக் கூறுதலும், உதயணன் அவனை நினைதலும், அவன் வருதலுங் கூறப்படும்.
 
                ஆராய் தோழரொடு அரசன் அதன்றிறம்
              ஓரா இருந்துழி உருமண் ணுவாவும்
              ஆரரண் அமைத்து வாள்நடு நீள்மதில்
              ஏரணி உடைய விலாவா ணகமெனும்
  5           ஊர்வயின் நின்றும்வந்து உதயணன் குறுகி
              வணங்கினன் இருந்துழி மணங்கமழ் கோதை
 
                வணங்கினன் இருந்துழி மணங்கமழ் கோதை
              கருத்தினை எல்லாம் விரித்தவன்கு உரைப்பப்
 
 

             பொறியுடை மார்பஅது புணர்க்கும் வாயில்
             அறிவல் யான்அஃது அருளிக் கேண்மதி
  10          வெற்றத் தானையும் வேழமும் நீக்கி
             உற்றோர் சிலரோடு ஒருநாள் இடைவிட்டு
             வேட்டம் போகி வேட்டுநீர் பெறாஅ
             வெம்பரல் அழுவத்து எம்பரும் இன்மையின்
             மதிமயக்கெய்திப் புதுமலர்க் காட்டுள்

 
    15          தெய்வதை உண்டெனில் கையறல் ஓம்புகெனப்
              பாற்படு பலாசின் நோக்கமை கொழுநிழல்
              குரவம் பாவைக் குறுமலர் நசைஇ
              அரவ வண்டினம் யாழென ஆர்ப்பத்
              தெறுகதிர்ச் செல்வன் முறுகிய நண்பகல்
  20          அசைந்தியாம் கிடந்தன மாக அவ்வழி
 
                 இசைந்த வெண்துகில் ஏற்ற தானையன்
               கைந்நுண் மீக்கோள் கச்சினோ டணவர
               கைந்நுண் சாந்தம் எழுதிய ஆகத்தன்
               காசுகண் அரிந்து கதிரொளி சுடரும்
  25           மாசில் வனப்பினன் மறுமதித் தேய்வென
               ஏக வாரம் இலங்கு கழுத்தினன்
              நிழல்படு வனப்பின் நீலத்து அன்ன
              குழல்படு குஞ்சியுள் கோல மாக
              ஒண்செங் கழுநீர்த் தெரியல் அடைச்சித்
  30          தண்செங் கழிநீர்த் தகைமலர்த் தாரினன்
              ஆயிரம் நிறைந்த அணி மலர்த் தாமரைச்
              சேயொளி புரையும் திகழொளிக் கண்ணினன்
              களைகண் ஆகியோர் இளையவன் தோன்றி
 
               யாவிர் மற்றுநீர் அசைவுபெரிது உடையீர்
  35         ஏகல் ஆற்றீர் என்னுற் றீர்என
             ................................................
             ........................போதல் தேற்றாம்
             தெய்வ மகனெனும் ஐயுறவு அகல
             அறிய வேண்டி நெறிமையின் நாடி
             முன்உப காரத்தின் முழுப்பயன் நிகர்ப்பதோர்
  40         பின்உப காரம் பெயர்த்தல் விரும்பி
             என்னருங் கருதான் இறந்த பின்னர்          
 
                ................................................
              நன்னர் நெஞ்சத்து நயம்பா ராட்டி
              எம்மின் ஆகா இடர்கண் கூடின்
              உம்மை யாமும் நினைத்தனம் ஒழுகுதும்
  45          அன்ன மாண்பேம் அறிகபின் யாரென
              உண்மை உணரிய ஒருங்குநாம் குறைகொள
 
 

              வச்சிர வண்ணனை வழிபட்டு ஒழுகுவேன்
              நச்சு நண்பின் நஞ்சுகன் என்னும்
              இயக்கன் என்னை மயக்கற உணர்ந்து
  50          மறப்பின்று ஒழுகும் நயப்பொடு புணர்ந்த
              நன்நட் பாளனேன் யானினி நுமக்கென
              என்நட்பு அறிமின் என்றும் என்வயின்
              எள்ளல் இல்லாது உள்ளிய காலை
              ஓதியின் நோக்கி உணர்ந்தியான் வருவேன்    

 
    55          ஈதியன் மந்திரம் என்று கூறி
              என்பெயர் நினைந்தால் எவ்விடத்து ஆயினும்
              துன்பம் நீக்குவென் என்றவன் தந்த
              மந்திரம் மறந்திலேன் மறங்கனல் வேலோய்
              வல்லை யாகி ஒல்லை அவனைப்
  60          பொழுதோடு நினைஎன எழுதினன் கொடுப்ப
 
                வடிவேல் மன்னனும் படிவமொடு இருந்து
              வாய்மையின் வழாஅத் தூய்மையன் ஆகி
              நினைப்பில் திரியா நெறிமையின் ஓதி
              இமைப்போன் கண்மிசை இலங்கிய ஒளியொடு
 
 

   65         அன்றவன் கண்ட யாக்கையும் கோலமும்
             இன்றுஇவண் உணரும் இயல்பினன் ஆகி
             நயப்புறு நெஞ்சமோடு நண்புமீக் கூரி
             இயக்கன் அவ்வழி இழிந்தன இனிதுஎன்.

                2. இயக்கன் வந்தது முற்றிற்று.