5. பத்திராபதி உருவுகாட்டியது

 

இதன்கண் : உதயணன் தச்சஉருவங் கொண்ட பத்திராபதியை அழைத்துக் கூறலும், தச்சனுக்குச் சிறப்புச் செய்தலும், பத்திராபதி தன் வரலாறு கூறுதலும், உதயணன் எண்ணுதலும், பத்திராபதி தன் உருவத்தைக் காட்டி மீளலுங் கூறப்படும்.
 
 

              பொன்நகர் புக்கபின் புகழ்மீக் கூறி
              மின்னிலங்கு அவிரொளி வெய்யோன் மேவும்
              வையம் இயற்றிய கைவினை யாளன்
              வருக என்றுதான் அருளொடு பணிப்ப
   5          நயந்துவந்து இறைஞ்சிய வையத் தலைவனை
              வியந்த விருப்பொடு நயந்துமுகம் நோக்கித்
              தொல்லைச் செய்த நன்னரும் அறியேம்
              எல்லையில் பெருந்துயர் எய்தினம் அகற்றினை

 
 

             அரசின் ஆகாது ஆணையின் ஆகாது
   10         விரைசெலல் இவுளியொடு வெங்கண் வேழம்
             பசும்பொன் ஓடைப் பண்ணொடு கொடுப்பினும்
             விசும்பிடைத் திரிதரும் வேட்கை வெந்நோய்
             பொன்னிறை உலகம் பொருளொடு கொடுப்பினும்
             துன்னுபு மற்றது துடைக்குநர் இன்மையின்
   15         உறுகண் தீர்த்தோய்க்கு உதவிஒன் றாற்றிப்
             பெறுகுவம் யாமெனப் பெயர்ப்பதை அறியேம்

 
 

              நல்வினை உடைமையில் தொல்வினை தொடர்ந்த
              எந்திரந் தந்து கடவுளை ஒத்தியென்று
              அன்புகலந்து ஒழுகும் அறிவின் பின்னி
   20         அருளுரை அளைஇப் பொருளுரை போற்றித்
              தானணி பெருங்கலம் தலைவயின் களைந்து
              தேனணி தாரோன் பெருஞ்சிறப்பு அருள

 
 

              அருளெதிர் வணங்கி அதுவுங் கொள்ளான்
              பொருஎனக்கு என்செயும் புரவல போற்றென
   25         என்முதல் கேளெனத் தொன்முதல் தொடங்கிச்
              சுருங்கா ஆகத்து அரம்பை தன்மையும்
              கருங்கோட்டுக் குறவர் கணமலை அடுக்கத்து
              இரும்பிடி யாயங் கிற்ற வண்ணமும்
              ஒன்று மொழியாது நன்றியின் விரும்பி

 
 

   30        மயக்குறு நெஞ்சின் மன்னவன் முன்னா
             இயக்கன் கூறியது இவளும் கூறினள்
             உள்ளம் உருக்கும் ஒள்ளமர்க் கிளவி
             ஆரா உள்ளம் உடையோர் கேண்மை
             தீராது அம்ம தெளியுங் கால்என

 
 

   35         மேல்நீ செய்த உதவிக்கு யானோர்
              ஐயவி அனைத்தும் ஆற்றியது இல்லென
              முன்தனக் குரைத்தனம் முறைமுறை கிளந்து
              நீயும் யானும் வாழும் ஊழிதொறும்
              வேறலம் என்று விளங்கக் கூறி     

 
 

   40         அன்றுதான் கொண்ட உருவும் நீக்கித்
              தன்னமர் உருவம் மன்னவன் காணக்
              காட்டினள் ஆகி வேட்கையின் விரும்பி
              விஞ்சை மகஅவ் விழைபிடி யாகி
              எழிலி மீதாங்கு இனிதின் நடப்ப
   45         வளம்படு வாயிலும் அவள்பெயர் கொளீஇ
              வாயி லாளரொடு வத்தவன் வழிபடப்
              போயினள் மாதோ புனையிழை நகர்க்குஎன்.

               5.பத்திராபதி உருவுகாட்டியது முற்றிற்று