7. யூகி பிரச்சோதனனைக் கண்டு வந்தது

 

இதன்கண் : பிரச்சோதனன் நரவாணதத்தன் பிறந்ததை அறிதலும், முரசறைதலும், நகரை அலங்கரித்தலும், பிரச்சோதனன் விழாக் கொண்டாடலும், யூகியைப் பிரச்சோதனன் வருவித்தலும், யூகியும் சாலங்காயனும் தர்க்கஞ் செய்தலும், பிரச்சோதனன் யூகியின் சிறந்த குணங்களை வியத்தலும், பிரச்சோதனன் யூகிக்குச் சிறப்புச் செய்தலும், யூகிக்கு இரு மகளிரை மணம் புரிவித்தலும், பிரச்சோதனன் யூகியைப் பாராட்டலும், யூகியை விடுத்தலும் கூறப்படும்.
 
 

             பொலிந்த செல்வமொடு புகழ்மீக் கூரி
             மலிந்த திருவின் வத்தவர் பெருங்குடி
             உண்மகிழ் உவகை ஊக்கம் இமிழப்
             பண்மகிழ் பேரியாழ் பயிற்றிய கேள்வி
   5         உலைவில் வென்றி உதயண குமரன்கு
             நலமிகு புதல்வன் நன்னாள் பிறந்த
             உகவை மாற்றம் உஞ்சையம் பெருநகர்ப்
             பகைஅடு வேந்தற்குப் பணிந்தனன் உரைப்பத்

 
 

             தன்மைக் கேற்ற தலைப்பேர் அணிகலம்
   10        புன்மை தீர முன்னிலை நல்கிப்
             பழனம் அணிந்த பதினாறு ஆயிரம்
             கழனி நன்னகர் கலக்கம் இல்லன
             மன்னன் அருளி மன்னரும் மறவரும்
             இன்னே வருகென்று இயமரம் வுறைகென
   15        முரைசெறி முதியற்குப் பெறுவன நல்கி
             விரைசெலல் இவுளி வேந்தன் ஏவ

 
 

             ஓடை அணிந்த ஒண்பொன் நெற்றிக்
             கோடுடை வேழம் பாடுபெறப் பண்ணி
             எருத்தின் மீமிசைத் திருத்தக இரீஇத்
   20        துகில்மடி அணைமிசைத் துளக்கம் இன்றிப்
             பாற்படு வென்றி நாற்புடை மருங்கினும்
             கண்டோர் விழையும் தண்டாக் கோலமொடு
             நீத்திஆற் றன்ன நெடுங்கண் வீதியுள்
             போத்தர அமைந்து புகுவழி எல்லாம்
   25        கனைபொன் கடிப்பின் காண்தக ஓச்சிப்

 
 

             புனைபொன் பூந்தார்ப் புரவலன் காக்கும்
             கன்னி மூதெயில் நன்னகர் கேட்ப
             மதிமருள் நெடுங்குடை மறமாச் சேனற்குப்
             பதினா றாயிரம் பட்ட மகளிருள்
   30        முதற்பெருந் தேவி திருநாள் ஈன்ற
             மதுக்கமழ் கோதை வாசவ தத்தை
             வடதிசை மீனில் கற்புமீக் கூரி
             வடுவில் செய்தொழில் வத்தவர் பெருமகன்
             குறிப்பறிந்து ஒழுகிக் கோடாக் குணத்தொடு
   35        பொறிப்பூண் மார்பில் புதல்வன் பயந்தனள்

 
 

             கோமகன் பெற்று...........................
             சேய்முதல் வந்த சிறப்பினர் ஆகி
             ..............................யக்கடம் பூண்டபின்
             வருபரி சார மணிநீர்ப் பேரியாற்று
   40        இருகரை மருங்கினும் இந்நிலம் ஏத்தச்
             சீர்மையொடு பொருந்திச் சிறப்பு முந்துறீஇ
             அறிவின் அமர்வார் நெறிமையில் திரியா
             இருபான் மாக்களும் ஒருபாற்று இருந்த
             ஊர்திரை நெடுங்கடல் உலப்பில் நாளொடு
   45       வாழ்கநம் கோமான் வையகம் எல்லாம்

 
 

            பகையும் பிணியும் பசியும் நீங்கித்
            தகையும் செல்வமும் தாம்படு கென்ன
            மிகைபல புகழ்ந்து தொகைஇ ஆற்றிய
            இன்ப மொழியவன் பன்முறை அறைந்தபின் 

 
 

   50       ..................ஒண்புகழ் உவந்தனர் ஏத்தி
            வரைநிரைத் தன்ன மாடந் தோறும்
           திரைநிரைத் தன்ன படாகையுங் கொடியும்
           காட்சிக்கு ஆகா மாட்சிய ஆகி
           அணிபெற உயரிப் பணிவிலர் மறல
   55       இந்திர உலகம் இழுக்குபு வீழ்ந்து
            வந்திருந்து அன்றெனக் கண்டவர் ஏத்த
            வேனல வேந்தன் விழுப்பெருங் கோயிலுள்
            பன்னா றாயிரம் பண்முரசு ஆர்ப்ப

 
 

            நன்னீர் விரவிய செந்நிறச் சுண்ணம்
   60       குலநல மகளிரொடு கோமகன் நாடி
            ஐந்நூற்று இரட்டி அருங்கடை தோறும்
            பசும்பொன் மாசையும்...................
            பிடிப்புவிலை அறியாப் பெருங்கலம் உட்படக்
            கொடித்தேர் முற்றத்துக் குறையுடை யோர்கட்கு
   65       ஈகென அருளி எண்டிசை மருங்கினும்     

 
 

            ஆய்படை வேந்தற்கு அரும்பெறற் திருமகள்
            வாசவ தத்தை தீதில் சிறப்பொடு
            புத்திரன் பெற்றனள் பொலிவு முந்துறீஇ
            மொய்த்த மாநகர் முறைமுறை வருகென
   70       அதர்கடி தோடுறும் அமைதி யாளரைப்
            பொறியொற்று ஓலையொடு அறியப் போக்கி

 
 

            ஆராக் காதலொடு அணிபா ராட்டி
            நீராட்டு அயர்ந்து பல்கலன் அணிந்து
            சீரார் செல்வமொடு செவ்வி கொடீஇத்
   75       தெரிமாண் ஆளர் திறவதின் சூழ
           அரிமா சுமந்த ஆசனத்து இருந்து

 
 

            பொன்றாப் புகழோன் போக்கல் வேண்டி
            ஒன்றார் அட்ட யூகியைத் தரீஇ
            இன்றியான் எய்தினென் எனின் ...........
   80       பிரச்சோ தனன்அவன் உரைத்ததன் பின்னர்ப்

 
 

            பாற்பட்டு எய்திய பதினா றாயிரம்
            தூப்பால் அமைச்சர் மேற்பால் அறிவின்
            தலைக்கை யாகிய நலத்தகு நாட்டத்து
            ஞாலம் புகழுஞ் சாலங் காயன்
   85       ஏற்ற சிறப்பி னியூகி தன்னொடு
            மாற்றங் கொடுத்தல் வலித்தனன் ஆகி

 
 

            முதல்வன் செவ்வி முகமுதல் நோக்கிச்
            சிதைபொருள் இன்றிச் செந்நெறி தழீஇ
            உதையத்து இவரும் ஒண்சுடர் போல
   90       எல்லா மாந்தர்க்கும் இருளற விளங்கும்
            செல்லாறு இதுவெனச் சொல்லுதல் வேண்டிச்

 
 

            சாலவை நாப்பண் சலத்தில் தீர்ந்த
            கேள்வி யாளரை வேறுதெரிந்து அமைத்து
            வாதம் வேண்டிய சாலங் காயன்
   95       மாற்றம் பகுத்தற்கு ஆற்றின் நாடி
            மேற்கொண்டு உரைக்கும் மெய்த்துறை மருங்கின்
            நூல்பால் தழீஇய குற்றம் இவையெனக்
            கேட்டோர் மனமுணக் கிளந்தவன் கடாவ

 
 

           மெய்த்தகு நுண்பொருண் மெத்தப் பன்னி
   100      உத்தர வாக்கியம் யூகியும் நிறீஇக்
           கழிபேர் உவகையொடு காவல் வேந்தன்
           ஒழிக நாமிவற்கு ஆற்றேம் உரையெனச்
           சாலங் காயனைத் தோல்வினை ஏற்றி
           உரைத்த கிளவிக்கு ஒன்றே போல
   105      விரித்துப்பல குற்றம் விளங்கக் காட்ட

 
 

           ஏற்ற முகத்தின் இறைவனும் விரும்பி
           நண்பின் மாட்சியுங் கல்வியது அகலமும்
           பண்பின் தொழிலும் படைத்தொழில் மாண்பும்
           காயும் மாந்தர் ஆயினும் யாதும்
   110      தீயவை கூறப் படாத திண்மையும்
           இவற்கலது இல்லை இவனாற் பெற்ற
           அவன்குஅலது இல்லை அரசின் மாட்சியென

 
 

           மன்னிசை நிறீஇய நன்னர் ஆளனொடு
           நுண்ணெறி நுழையும் நூற்பொருள் ஒப்புமைத்
   115      தன்வயின் மக்களை அவன்வயின் காட்டி
           வேண்டல் பால வெறுக்கை நாடி
           வேண்டார் அட்டோன் வேண்டான் ஆயினும்
           அற்பில் பிணித்த அருள்மறுப்பு அரிதா
           நற்பல கொடுத்து நம்பி பிறந்த

 
 

   120      திருநாள் தானம் பெருநாள் காலை
           ஏற்போர்க்கு ஈக வின்றே போன்மெனக்
           கோப்பெருங் கணக்கரைக் குழுவிடை விளங்கக்
           கடைப்பிடி நுகும்பினுள் இடைப்பட எழுதுகென்று
           யூகியும் உணர ஏயின் ஆகிப்

 
 

   125      பரதகன் தங்கை பறந்தரி சிந்திய
           மதரரி மழைக்கண் மடம்படு காரிகைத்
           திலகமா சேனைஎன்று உலகறி பவளையும்
           சாலங் காயற்கு கிளையோ ளாகிய
           நீல வுண்கண் நிலவுவிடு கதிர்நுதல்
   130      பாக்கியம் அமைந்த பார்ப்புயாப் பியையும்
           ஆகிய அறிவி னரும்பொருட் கேள்வி
           யூகிக்கு ஈத்துப் பாகுபடல் இன்றி
           யாதே ஆயினும் ஆகஇனி எனக்கென
           மாதாங்கு திண்டோள் மகிழ்ந்தனன் நோக்கி

 
 

   135      அங்கண் ஞாலத்து அரசியல் அமைதி
            எங்கட்கு எல்லாம் இன்றி உதயணன்
            தன்கண் தங்கிய தகைமை நாடின்
            நின்கண் மாண்பின் நெடுமொழி யாள
            ஆயிற்று என்றுபல அருளொடும் புணர்ந்த
   140      யூகிக்கு உரையா ஒருங்குடன் நிழற்றிப் 

 
 

            கனவினும் நனவினும் மின்பம் அல்லது
            நுனைவேல் தடக்கைநம் புனைமுடி வேந்தன்
            காணலன் கண்டீர் மாநலம் இயைந்த
            நல்வினை உடையன் பெரிதெனப் பல்லோர்
   145      இகழ்தல் செல்லார் புகழ்வனர் புகன்று
            வாசவ தத்தையும் வத்தவ மன்னனும்
            ஏசினன........................................

 
 

            நவில்தொறும் இனிய ஞானம் போலப்
            பயில்தொறும் இனியநின் பண்புடைக் கிழமை
   150      உள்ளுதொறு உள்ளுதொறு உள்ளம் இன்புறப்
            பிரிவுறு துன்பம் எம்மாட் டெய்த
            எரியுறு நெடுவேல் ஏய இறைவன்
            வருக என்றனன் சென்மதி நீஎனப்

 
 

            பருகுவனன் போலப் படைப்பெரு வேந்தன்
   155      அவணே இருப்பன் இவணேன் எனவே
            கருதல் வேண்டுமெனக் கைவிரல் பற்றி
            விடுக்கும் பொழுதின் எடுத்தவன் நின்னேர்
            உண்டோ ஒழுக்கின் என்றுபின் விடுப்ப

 
 

            அருங்கலம் பிறவும் ஒருங்கு முந்துறீஇ
   160      வேந்துறை முதுநகர் வியன்மலை ஆகப்
            போந்துகடன் மண்டும் புண்ணிய நீர்த்துறைப்
            பேரியாறு என்ன வார்பெருஞ் செல்வமொடு
            நன்பல் நாட்டகம் பின்பட நீந்தி
            வளங்கவின் எய்திய வத்தவன் இருந்த
   165      நலம்பெறு நகரம் புக்கனன் இனிதுஎன்.     

           7. யூகி பிரச்சோதனைக் கண்டு வந்தது முற்றிற்று