உரை
 
1. உஞ்சைக்காண்டம்
 
32. கரடு பெயர்த்தது
 
           இனைத்தோ ரிளமையொ டெனைப்பல கேள்வியும்
     10    தவத்தது பெருமையிற் றங்கின விவற்கென
          மருட்கை யுற்றதன் மனம்புரிந் தருளி
 
              (பிரச்சோதனன் உட்கோள்)
            9 - 11 : இனைத்தோர்........அருளி
 
(பொழிப்புரை) அதுகேட்ட பிரச்சோதன மன்னன் 'அம்மவோ ! இத்தகைய இளம்பருவத்திலேயே இவ்விறை மகனுக்கு மிகவும் பலவாகிய கல்வியும் கேள்வியும் இவன் முற்பிறப்பின்கண் முயன்ற பெரிய தவம் காரணமாக உளவாயின ஆதல் வேண்டும்' என்று தன்னுள்ளத்தே கருதி ஆற்றவும் வியந்த தன்னெஞ்சத்தாலே உதயணகுமரனைப் பெரிதும் விரும்பி அவன்பால் அருள்கூர்ந்து என்க.
 
(விளக்கம்) மாந்தர் வேண்டிய வேண்டியாங்கெய்துதற்குத் தலை சிறந்த காரணம் தவமேயாதலின் 'இவற்கு எனைப் பல கேள்வியும் தவத்தது பெருமையிற் றங்கின' என்று வியந்தவாறு. 'வேண்டிய வேண்டியாங் கெய்தலாற் செய்தவம் ஈண்டு முயலப் படும்' எனவரும் திருக்குறளையும் (265) ஈண்டு நினைக. மருட்கை - வியப்பு. இம்மருட்கை பெருமை நிலைக்களனாகப் பிறந்தபடியாம். என்னை? 'புதுமை பெருமை சிறுமை ஆக்கமொடு மதிமைசாலா மருட்கை நான்கே' என்பவாகலின் (தொல் - மெய்ப். 7) என்க.