உரை
 
1. உஞ்சைக்காண்டம்
 
32. கரடு பெயர்த்தது
 
           தென்கட லிட்டதோர் திருமணி வான்கழி
           வடகட னுகத்துளை வந்துபட் டாஅங்கு
           நனிசே ணிட்ட நாட்டின ராயினும்
     20    பொறைபடு கருமம் பொய்யா தாகலிற்
           சிறைபடு விதியிற் சென்றவட் குறுகி
           மதியமு ஞாயிறுங் கதிதிரிந் தோடிக்
           கடனிற விசும்பி னுடனின் றாங்குப்
           பைந்தொடிச் சுற்றமொடு தந்தை தலைத்தாள்
     25    ஆயத் திடையோள் பாசிழைப் பாவை
           யானை மிசையோன் மாமுடிக் குருசில்
           இருவரு மவ்வழிப் பருகுவனர் நிகழ
 
        (உதயணனும் வாசவதத்தையும் தம்முள்
            ஒருவரையொருவர் காண்டல்)
            17 - 27: தென்கடல்...........நிகழ
 
(பொழிப்புரை) மேல் விளைவுகளைத் தன்னகத்தே சுமந்துள்ள ஊழ்வினை பொய்யாதாகலின் சிறந்த முடிக்கலனையுடைய மன்னனாகிய உதயணகுமரனும் வாசவதத்தையும் ஒன்றற்கொன்று மிகவும் தொலைக்கண் அமைந்த இருவேறு நாட்டினிற் பிறந்து வைத்தும், உதயணன் மாற்றானாற் சிறைப்படுதல் என்னுமொரு விதி தலைக்கீடாகத் தன்னாட்டினின்றும் உஞ்சை நகர்க்குச் சென்று அந்நகரத்தும் அவ்வாசவதத்தை நிற்குமிடத்தைக் களிறடக்குதல் என்னும் ஒரு விதி தலைக்கீடாகச் சென்றணுகி நளகிரி என்னும் பட்டத்தியானையின் மேலோனாக நிற்பவும், மற்று அவ்வாசவதத்தை தானும் களிறடக்கியோனைக் காண்டல் என்னுமொரு விதி தலைக்கீடாகப் பசிய தொடியை அணிந்த கோப்பெருந்தேவி முதலிய உரிமை மகளிர் குழுவுடனே தன் தந்தையாகிய பிரச்சோதனன் திருமுன்னர்த் தோழிமாரொடு மேனிலை மாடத்தின் மேலோளாக நிற்பவும், இவ்வாறு தென் கடலிலே போடப்பட்ட அழகிய மணி பதித்த சிறந்த முளையொன்று வடகடலிலே மிதந்துகொண்டிருக்கும் நுகத்தடியினது ஒரு துளையிலே சென்று கோத்தாற் போலவும், திங்கண் மண்டிலமும் ஞாயிற்று மண்டிலமும் தமக்கியற்கையான இயக்கம் பிறழ்ந்து ஒன்றற்கொன்று எதிரெதிராக இயங்கிக் கடலின் நிறம் போன்ற நிறமுடைய விசும்பின்கண் ஓரிடத்தே கூடி நின்றாற் போலவும், அரிதிற் றலைப்பெய்து நிற்கும் அவ்விருவரும் அப்பொழுது தம்முள் ஒருவரை ஒருவர் நோக்கி ஒருவரழகை யொருவர் தத்தங் கண்கள் என்னும் வாயாலே பருகுவார் போன்று நுகர்ந்து நிற்ப இங்ஙனம் நிகழும்பொழுது என்க.
 
(விளக்கம்) 'தென்கடலிட்டதோர் திருமணி வான்கழி வடகடனுகத்துளை வந்து பட்டாஅங்கு' என்னுமிதனோடு 'வடகடலிட்ட ஒரு நுகத்தின் ஒரு துளையில் தென்கடலிட்ட ஒரு கழி சென்று கோத்தாற் போல' எனவும் (இறை - சூ உ. உரை) 'பரவை வெண்டிரை வட கடற் படுநுகத் துளையுட், டிரைசெய்தென்கட லிட்டதோர் நோன்கழி சிவணி, அரச அத்துளை யகவயிற் செறிந்தென' (சீவக. 2749) எனவும் 'வளைபயில் கீழ்கட னின்றிட மேல்கடல் வானுகத்தின், துளை வழி நேர்கழி கோத்தென' ( திருச்சிற். 6 ) எனவும், வரும் பிற சான்றோர் கூற்றுக்களையும் ஒப்புக் காண்க. நனி சேண் - மிகத் தொலைவு. பொறைபடு கருமம்-ஊழ். பண்டு செய்தவற்றைத் தான் சுமந்திருந்து கால அடைவிலே விளைவித்தலான் ஊழ்வினையைப் பொறைபடு கருமம் என்றார். சிறைப் படுதல் என்னும் விதியைத் தலைக்கீடாகக்கொண்டு என்க. இங்ஙனமே களிறடக்கல் அடக்கியோனைக் காண்டல் என்னும் துணைக்காரண வினைகளையும் கொள்க. மதியம் வாசவதத்தைக்கு உவமை. ஞாயிறு, உதயணனுக்குவமையென்க. கதி - இயக்கம். பைந்தொடிச் சுற்றம் என்றது கோப்பெருந்தேவி முதலிய உரிமை மகளிரை. தந்தை - பிரச்சோதனன். தலைத்தாள் - முன்னிலை. ஆயம் - தோழியர் குழு. பாவை - வாசவதத்தை. குருசில்-உதயணன். இதன் கண் ''பருகுவனர் நிகழ'' என்றது காட்சி.