உரை
 
1. உஞ்சைக்காண்டம்
 
32. கரடு பெயர்த்தது
 
         யாதனிற் சிதைந்ததிவ் வடற்பெருங் களிறென
        வேழ வேட்டம் விதியின் வினாய
30      கதிர்முடிவேந்தன் கண்ணிய நுண்பொருட்
        கெதிர்மொழி கொடீஇய வெடுத்த சென்னியன்
        மன்னவன் முகத்தே மாதரு நோக்கி
        உள்ளமு நிறையுந் தள்ளி்டக் கலங்கி
 
        (பிரச்சோதனன் வினாதலும் காதலர் நிலையும்)
              28 - 33 : யாதனின்...........கலங்கி
 
(பொழிப்புரை) ஒளியுடைய முடியணிந்த பிரச்சோதன மன்னன் உதயணனை 'இறைமகனே ! இந்தக் கொலைத்தொழிலை யுடைய பெரிய களிற்றியானை எக்காரணத்தால் இவ்வாறு குணஞ் சிதையலாயிற்று?' என்று அக்களிற்றின் கொலைத் தொழிலுக்குக் காரணம் வினவிய வினாவின் வாயிலாய் அம்மன்னன் அறிந்து கோடற்கு விரும்பிய பொருளை விளக்குதற்கு மறுமொழி கொடுத்தற்காக உதயணன் தன் தலையை உயர்த்தியபொழுது அதுகாறும் அவனறியாமல் அவன் அழகைப் பருகிக் கொண்டிருந்த வாசவதத்தை அவன் முகத்தே அவன் நோக்கெதிர் நோக்கியவளாய்த் தன் நெஞ்சமும் நிறையும் தன்னைக் கைவிட்டுப் போதலாலே பெரிதும் கலங்கா நிற்ப என்க.
 
(விளக்கம்) பண்டு உதயணன் தன்னை நோக்கியதனாலே கடைக்கண்ணால் நோக்கிக் களவு கொண்டு நின்றவள் இப்பொழுது அவன் நோக்கெதிர் நோக்கிக் கலங்கினாள் என்பது கருத்து. யாதனின் - என்ன காரணத்தால். களிறு - நளகிரி. வேந்தன் - பிரச்சோதனன். நுண்பொருள் என்றது-யானையின் இயல்பினை. கொடீஇய - கொடுத்தற்கு எடுத்த சென்னியனாகிய மன்னவன் முகத்தே என்க. எனவே முன்பு தானோக்கற்குச் செவ்வி பெறாமையால் கடைக் கண்ணானோக்கியவள் செவ்வி பெற்று நோக்கினள் என்றாராயிற்று. முன்னர் இருவரும் பருகுவனர் நிகழ என்றது ஒருவரை ஒருவர் அறியாமல் களவாக நோக்கிய நோக்கம் எய்தியதனை என்றும், ஈண்டு நோக்கியது நோக்கம் இரண்டும் ஒன்றையொன்று கவ்வி நோக்கும் குறிப்பு நோக்கம் என்றும் கூர்ந்துணர்க. இந்நோக்கம் எய்தாவழி ஒருவர் குறிப்பை மற்றொருவர் உணர்தலியலாது என்க. 'நோக்கினாள் நோக்கெதிர் நோக்குதல் தாக்கணங்கு, தானைக்கொண் டன்ன துடைத்து' எனவரும் திருக்குறளையும் (1082), 'எதிர் நோக்குதல் என்றமையின் அது குறிப்பு நோக்காயிற்று' எனவரும் பரிமேலழகர் விளக்கத்தையும் ஈண்டு நினைவு கூர்க. மன்னவன் முகத்தே நோக்கி என்றது அம்மன்னவன் நோக்கெதிர் நோக்கி என்ற படியாம். 'நாட்டம் இரண்டும் அறிவுடம் படுத்தற்குக், கூட்டியுரைக்கும்