உரை
 
1. உஞ்சைக்காண்டம்
 
32. கரடு பெயர்த்தது
 
           வண்டுபடு கடாஅத்த வலிமுறை யொப்பன
     35    பண்டுகடம் படாஅ பறையினுங் கனல்வன
           விடற்கருந் தெருவினுள் விட்ட செவ்வியுட்
           டுடக்குவரை நில்லாது தோட்டி நிமிர்ந்து
           மதக்களி றிரண்டுடன் மண்டியாஅங்
           கில்வழி வந்ததம் பெருமை பீடுறத்
     40    தொல்வழி வயத்துத் தொடர்வினை தொடர
           வழுவில் போகமொடு வரம்பின்று நுகரும்
           உழுவ லன்பி னுள்ளந் தாங்கி
 
                   (இருவர் செய்திகள்)
              34 - 42 : வண்டுபடு...........தாங்கி
 
(பொழிப்புரை) அங்ஙனம் நோக்கம் இரண்டும் ஒத்தபொழுது பண்டும் பண்டும் பலப்பல பிறப்புக்களிலே கூடிப் பயின்றடிப் பட்டு வருகின்ற குற்றமற்ற பேரின்பத்தை எல்லையின்றி நுகர்தற்குக் காரணமான உழுவலன்புடைமையானும் அவ்வன்புடை யாரைப் பிறப்புத்தோறும் கூட்டுவியா நின்ற பழையதாகிய ஆகூழ் இருவர்க்கும் தொடர்ந்து வருதலானும், உயர்குடிப் பிறப்பின் வாயிலாகத் தமக்கெய்திய சிறப்புக்கள் அனைத்தும் செவ்வியுற்றமை தலானும், இருவர் நெஞ்சமும் தத்தம் வயப்பட்டு நில்லாமே, பண்டு மதம் படாதனவும், புதிதாக மதம் பட்டனவும், அம்மதத்தே வண்டுகள் மொய்க்கப்படுவனவும், ஒன்றற்கொன்று வலிமையும் பிறப்பு முறையும் அகவை முதலியனவும், தம்முள் ஒப்பனவும் பாகர் கூறும் சங்கேத மொழிகளைக் கேட்ட மாத்திரையே சினங்கொள்வனவும், ஆகிய மதமிக்க இரண்டிள யானைகள் தம்மைச் செலுத்துதற்குத் தகுதியில்லாத சிறிய தெருவின்கண் விட்டபொழுது செருக்குற்றுத் தம் பாகர் கட்டுப் பாட்டினுள் நில்லாமல் அவர்தம் தோட்டியும் நிமிர்ந்து போமாறு தம்மனம்போனவாறு மண்டிச் சென்றாற் போலத் தத்தம் வயப்பட்டு நில்லாமல் நிறைகடந்து பாய்ந்து ஒன்றனோடொன்று ஊடுருவிக் கலக்கின்றவற்றை இருவரும் தமது பெருந்தகைமையாலே தடுத்து நிறுத்தி என்க.
 
(விளக்கம்) பண்டு கடம் படாஅ புதிதாகப்பட்ட வண்டுபடு
கடாஅத்த என இயைக்க. வலியும் முறையும் ஒப்பன என்க.
முறை - பிறப்பு முறை. பறையினும் - பேசினும். பாகர்
சங்கேத மொழிகளைக் கூறுமளவிலேயே என்றவாறு.
விடற்கருந்தெரு - தாம் செல்லுதற்கியலாத சிறிய தெரு. ஈண்டு,
உதயணனும் வாசவதத்தையும் ஒருவரை ஒருவர் காதலிக்கும் இடம்
காதல் செய்தற்கேலாத இடமாதல் பற்றி விடற்கருந்தெருவென
உவமை கூறினர். செல்லுதற்கியலாத சிறுதெருவினும் மதச்
செருக்குண்மையால் களிறுகள் செல்லுமாறுபோல இவர் மனமும்
சென்றன என்பது கருத்து. பாகர் செலற்கருந்தெருவெனக் கருதித்
துடக்குறுத்தும் தோட்டியாற் குத்தியும் களிறுகள் அவர்வரை நில்லாமே
மண்டினாற் போன்று ஈண்டும் இருவரும் அஃது அரசன் முன்னிலையாதல்
கருதித் தத்தம் மனத்தை நிறுத்த முயன்றும் நில்லாமே மண்டின என்றவாறு.
இதனோடு,
'மதமுகந் திறப்புண்டு, இடங்கழி நெஞ்சத் திளைமை யானை, கல்விப்
பாகன் கையகப் படாஅ, தொல்கா வுள்ளத்தோடு மாயினும், ஒழுக்கொடு
புணர்ந்தவிவ் விழுக்குடிப் பிறந்தோர்க்கு, இழுக்கந் தாராது' (சிலப்-23:36-41)
எனவரும் மதுராபதியின் மொழியினையும் நினைக.
இல்வழி வந்த பெருமை என்றது சான்றாண்மையை. தொல்வழி வந்த
வயத்துத் தொடர்வினை என்றது ஊழினை. தாங்கி - தடுத்து நிறுத்தி. இது
சிதைவு பிறர்க்கின்மை என்னும் மெய்ப்பாடு.