உரை
 
1. உஞ்சைக்காண்டம்
 
32. கரடு பெயர்த்தது
 
           இழையினுங் கொடியினு மிடியினும் பிணங்கித்
          தேனினும் பாலினுந் தீஞ்சுவைத் தாகிக்
     45   குலத்தினுங் குணத்தினுங் கூடிய வன்பினும்
          இனத்தினும் பிறவினு மிவ்வகை யிசைந்த
          அமைப்பருங் காதலு மிமைப்பினு ளடக்கி
          ஒருவயிற் போல வுள்ளழி நோக்கமொ
          டிருவயி னொத்தஃ திறந்த பின்னர்த்
 
                 (இதுவுமது)
          43 - 49: இழையினுங்..........பின்னர்
 
(பொழிப்புரை) இவ்வாறு ஒருவர் நெஞ்சம் ஒருவர் நெஞ்சத்திலே ஊடுருவி நூலிழை போலவும், நூழிற்கொடி போலவும், மாப்போலவும், விரவப்பட்டுத் தேனினும் பாலினுங்காட்டிற் சிறந்த இனிய சுவையுடையதாய்க் குலநலத்தானும் குணநலத்தானும் பெருகிய அன்பானும் இனத்தானும் இன்னபிற ஒப்பு வகைகளானும் பொருந்திய ஊழானன்றிப் பிறரால் ஆக்குதற் கரிதாகிய தத்தங் காதலைக் கண்ணிமைப் பொழுதினுள்ளே பிறர் அறியாதபடி தமக்குள்ளேயே அடக்கி ஓரிடத்துப் போலவே ஈரிடத்தும் அன்பு ஒத்து இருவரும் அந்நிலையினின்றும் புடை பெயர்ந்த பின்னர் என்க.
 
(விளக்கம்) இழை - நூலிழை. கொடி - ஈண்டு நூழிற்கொடி. இடி - அரிசி முதலியவற்றை இடித்த மா என்க. 'இடியினும் கொடியினும் மயங்கி' என்பது சீவகசிந்தாமணி (196.) இனம் என்றது பிறப்பினை. இனத்தினும் பிறவினும் இசைந்த காதல் என்றது, 'பிறப்பே குடிமை ஆண்மை யாண்டொடு உருவு நிறுத்த காம வாயி னிறையே அருளே உணர்வொடு திருவென முறையுறக் கிளந்த ஒப்பினது வகை' (தொல்-மெய்ப். 25.) பத்தானும் பொருந்திய அன்பு என்றவாறு. இத்தகைய உண்மைக் காதல் ஊழானன்றி மக்கள் முயற்சியால் ஆக்கப்படாதென்பார் அமைப்பருங் காதல் என்றார். இருவயின்ஒத்தல் -- இருவர் நெஞ்சத்தும் அன்பு ஒத்தல். 'தாம் வீழ்வார் தம்வீழப் பெற்றவர் பெற்றாரே, காமத்துக் காழில் கனி' என்னும் அருமைத் திருக்குறளை (1191) ஈண்டு நினைக. அஃது - அவ்வாறு காதலுறா நின்ற அந்நிகழ்ச்சி. இறத்தல் - ஈண்டு மாறுதல்.